

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக பால்கனியிலிருந்து தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையைப் பலருக்கும் நினைவிருக்கும் (உபயம்: குழந்தையின் அண்டை வீட்டாரால் ‘விழிப்புணர்வு’க்காக எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டு வைரலான வீடியோ).
வீடியோ ஒரு பக்கம் இருக்க, குழந்தையைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை என்று தொடர்ச்சியாக எழுந்த ஆன்லைன் வசைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்தக் குழந்தையின் அம்மா உயிரை மாய்த்துக்கொண்டார். அதன் பின்னும், அந்தப் பெண்ணின் இறப்பை வைத்துப் பலர் இன்னும் பல்வேறு கருத்துகளைக் கூறியபடியே இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் அந்தப் பெண் மனதளவில் மிகவும் பலவீனமானவராக இருந்திருப்பார் என்றே கூறுகிறார்கள்.
உண்மையில், மனிதர்கள் உளவியல் ரீதியாக அவர்களின் குணங்கள் மற்றும் நடத்தை சார்ந்த விஷயங்களில் இரண்டு விதமாகப் பழக்கப்பட்டு இருப்பார்கள். முதலாவதாக, மரபணு ரீதியாக அவரவர் பரம்பரையின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள். இரண்டாவதாக, தகவல் ரீதியாக வரும் கருத்துகளைப் பரம்பரை பரம்பரையாக, சமூகம் சமூகமாக நம்பிக்கையுடன், கலாச்சாரத்துடன், ஒழுக்கத்துடன் செயல்படுத்தியிருப்பார்கள். குழந்தையின் அம்மா தற்கொலைக்குக் காரணமான இந்த ‘சைபர் ட்ரோலிங்’கில் இரண்டாவதாகச் சொல்லப்பட்ட காரணம்தான் பங்கு வகிக்கிறது. சமூகமும் கலாச்சாரமும் கட்டமைத்த கருத்துகளை வைத்துக்கொண்டு மனித உணர்வுகளில் ஏற்றப்பட்டிருக்கும் நம்பிக்கையைத்தான் பலரும் ‘ட்ரோல்’ செய்து விளையாடுகிறார்கள்.
இங்கு ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டுமென்றும், ஒரு தாய் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்றும் குடும்பங்களில் தொடர்ந்து வகுப்பெடுத்தது போக, சமூக ஊடகங்களிலும் அதே கருத்துகளைப் பதிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், இங்கு ஒரு வீடியோ ட்ரோல் ஆகும்போது, அதில் தொடர்புடைய நபர்களின் வீட்டிலுள்ளவர்கள் என்ன மாதிரி பேசுவார்கள், என்ன மாதிரி புறக்கணிப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனாலும் விடாமல் எழுதிக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்போம்.
நார்சிசம் எனப்படும் தன் வியப்பு சார்ந்த ஆளுமைக் கோளாறுடன்தான் (Dark Tetrad), இணையத்தில் பெரும்பாலும் இயங்குகிறார்கள் என்கிறார் சமூக ஊடகங்கள் குறித்த ஆய்வாளரான ஜெனிஃபர் கோல்பெக் (Jennifer Golbeck). அதிலும் பல வகைகள் இருக்கின்றன. குறிப்பாக, தனிநபர் தாக்குதல் என்பது மிகவும் கொடுமையானது. அதை உளவியலில் ‘ஹோமினெம் தாக்குதல்’ என்பார்கள்.
ஹோமினெம் தாக்குதல்
இது போன்ற சைபர் புல்லியிங்கால்தான், மனிதர்கள் தற்கொலை வரை முடிவெடுக்கிறார்கள். அதாவது ஒரு நபரைத் தாக்க வேண்டுமென்றால், அந்தத் தனிப்பட்ட நபரின் சொந்தக் கருத்துகள், அவரது அந்தரங்கமான விஷயங்கள், அவரின் வீடியோக்கள் எல்லாவற்றையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து, அவற்றைப் பற்றிச் சம்பந்தமில்லாத இடங்களில்கூடச் சேர்த்துப் பேசி, மட்டம் தட்டுவார்கள். கூட்டமாகச் சேர்ந்துகொண்டு அந்த நபர் மனிதராக இருப்பதற்குத் தகுதியே இல்லை என்கிற வகையில் அவரது உடலை வைத்தும் அவர் பார்க்கும் வேலையை வைத்தும் அவரின் ஃபேஸ்புக் நிலைத்தகவலை வைத்தும் அவரது குணத்தை மோசமாகச் சித்திரிப்பதும் தொடர்ந்து அந்த ஒரு நபரைப் பற்றியே எழுதியும் பேசியும் வைரல் ஆக்குவதும் இன்று அதிகரித்துவிட்டது. இதன் உச்சக்கட்டமாகச் சம்பந்தப்பட்ட நபரை உடலளவிலும் மனதளவிலும் வலு இல்லாமல் ஆக்கி வாழத் தகுதியற்றவர் என்று நம்ப வைத்துவிடுகிறார்கள்.
குடும்பம் அரவணைக்க வேண்டும்
இன்றைய சூழலில் மூன்றில் ஒரு குழந்தை, குழந்தைப் பருவத்திலேயே Bullying எனப்படும் தாக்குதலால் பாதிக்கப்படுகிறது என்று உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் பாதிப்பே பலருக்கும் மன அழுத்தமாக மாறுகிறது. அதிலும் இதுபோன்ற சைபர் புல்லியிங் தாக்குதல் ஏற்படும்போது குடும்பத்தினரின் அரவணைப்பும் ஆறுதலும் கண்டிப்பாக அவர்களுக்குத் தேவைப்படும். அவர்களின் மனப் பாதிப்பு என்ன மாதிரி இருக்கும் என்பதைச் சில அறிகுறிகள் மூலம் குடும்பத்தினர் தெரிந்து கொள்ளலாம். சமூகத்தைப் பார்க்கும்போதே ஒருவித பதற்றத்துடன் இருப்பார்கள். சமூகத்தை விட்டு விலகியே இருப்பார்கள், எப்போதும் பயத்துடனே இருப்பார்கள். இரண்டாவதாக, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு, தாழ்வு மனப்பான்மையுடன் (உதாரணத்திற்கு, தாயாக இருக்க தனக்குத் தகுதியில்லையோ என நினைப்பது) மனச்சோர்வுடன் இருப்பார்கள். மூன்றாவதாக உடல் அளவில் வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, தூக்கமின்மை என்று இருப்பார்கள். அடிப்படையாக இந்த மூன்று அறிகுறிகளுடன் இருக்கும்போது, குடும்பம் அவர்களை மிகவும் பாதுகாப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். மனநல மருத்துவ சிகிச்சை எடுக்கவும் உதவ வேண்டும்.
வீட்டு உறுப்பினர்களில் ஒருவர் திட்டினாலே மனிதர்கள் மிகவும் சோர்ந்து போவார்கள். ஆனால், இன்றைக்குச் சமூக ஊடகங்கள் மூலம் யார் யாரோ லட்சக் கணக்கில் உட்கார்ந்து, பிறரது வாழ்வைக் குறைசொல்லி, பாடம் எடுக்கும்போது மனதளவில் நிலைகுலைந்து போவார்கள். தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். இதற்காக, அவர்கள் மனதளவில் பலவீனமானவர்கள் என்று அர்த்தமில்லை. ஒட்டுமொத்த கூட்டத்தின் முன், மனிதன் என்பவன் வளர்ந்த சிறு குழந்தைதான் என்பதை நாம் என்றுமே மறக்கக் கூடாது. நமக்கு லைக்குகளும் புகழும் பெயரும் வர வேண்டும் என்பதற்காகப் பிறரது தனிப்பட்ட வாழ்க்கையைச் சமூக ஊடகங்களில் கடைவிரிக்கும் ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.
- காயத்ரி மஹதி
கட்டுரையாளர், மனநல ஆலோசகர்.