Last Updated : 01 Apr, 2018 11:20 AM

 

Published : 01 Apr 2018 11:20 AM
Last Updated : 01 Apr 2018 11:20 AM

கண்ணீரும் புன்னகையும்: படிப்பதற்காகத் தடை பல கடந்து...

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஜஹன்தப் அஹ்மதி, 18 வயதில் திருமணமான பின்னர்தான் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். அதற்குப் பிறகு பல்கலைக்கழகத்தில் சேர அவருக்கு ஆசை. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்காகத் தன் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தேர்வெழுதினார். அதை ஒளிப்படமாக எடுத்தார் பேராசிரியர் நசிர் குஸ்ராவ். அவர் மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். கல்வியறிவு அவசியமில்லாதவர்களாகவும் இரண்டாம்தரக் குடிமக்களாகவும் பார்க்கப்படும் ஆப்கன் பெண்கள் அனைவர் மத்தியிலும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் வாயிலாக இந்த ஒளிப்படம் பரவியது. தற்போது 25 வயதாகும் அஹ்மதி, மூன்று குழந்தைகளுக்குத் தாய்.

விவசாயப் பணிகளைச் செய்துவருகிறார். இந்த ஒளிப்படத்தைப் பார்த்த பல பெண்கள் அஹ்மதியின் படிப்புக்காகப் பண உதவி செய்ய முன்வந்துள்ளனர். அஹ்மதிக்கு மருத்துவராகும் ஆசை உள்ளது. இந்த நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக மலைப் பாதைகள் வழியாக நடந்தும் பேருந்திலும் தலைநகர் காபூலுக்கு வந்திருந்தார். ஆப்கன் யூத் அசோசியேஷன் சார்பில் நடத்தப்படும் ‘GoFundMe’ பிரச்சாரம் மூலம் 14 ஆயிரம் டாலர் கல்வி நிதி இவருக்காக இதுவரை திரண்டுள்ளது. 39 சதவீதக் குடிமக்கள் வறுமையில் வாழும் ஒரு நாட்டில் படிப்பதற்காக நிறைய சிரமங்களைச் சுமக்கும் அஹ்மதிக்குக் கிடைத்திருக்கும் இந்த உதவி நல்லதொரு மாற்றத்துக்கான தொடக்கம்.

வன்முறை புகாருக்கு ஹாட்லைன்

குடும்ப வன்முறை, தீ வைப்புக் குற்றங்கள் போன்றவை குறித்துப் புகார் செய்வதற்காகச் சர்வதேசக் குற்றத்தடுப்பு பாதிக்கப்பட்டவர் நல அறக்கட்டளை (இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஃபார் கிரைம் ப்ரிவென்ஷன் அண்ட் விக்டிம் கேர்) தேசிய அளவில் இலவசத் தொலைபேசி உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவையை ஜெர்மன் நாட்டு அதிபர் ப்ராங் வால்டர் ஸ்டீன்மியர் தொடங்கிவைத்தார். பாதிக்கப்படும் பெண்களுக்கு உளவியல் ஆலோசனை, சட்ட விழிப்புணர்வு, தகவல் சேவை போன்றவை தொலைபேசி வழியாக வழங்கப்படும். இதற்கான எண்கள் 044-43111143 மற்றும் 18001027282. “குடும்ப வன்முறையில் பெண்கள் தீவைக்கப்படும் சம்பவங்களில் 90 சதவீதக் குற்றங்கள் விபத்துகளாகப் பதிவுசெய்யப்படுகின்றன” என்கிறார் இந்த அமைப்பைச் சேர்ந்த ஸ்வேதா ஷங்கர். சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் தீவைப்புக் காயங்களுடன் கடந்த ஆண்டு 800 பெண்கள் வந்துள்ளனர்.

பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தும் பேராசிரியர் அடுல் ஜோஹ்ரியை இடைநீக்கம் செய்யக் கோரி மாணவர்களும் ஆசிரியர் அமைப்பினரும் சேர்ந்து எதிர்ப்புப் பேரணி நடத்தினர். அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளரைப் பெண் போலீசார் தாக்கியதாகவும் ஆண் அதிகாரி அத்துமீறியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரது ஒளிப்படக் கருவியும் அவரிடமிருந்து பிடுங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்

 

பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான கோஹினூர், திருநங்கை மார்வியா மாலிக்கைச் செய்தி வாசிப்பாளராக நியமித்துள்ளது. பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் இவர். மூன்று மாதப் பயிற்சிக்குப் பிறகு கடந்த வாரம் பணியில் சேர்ந்தார். இதழியல் பட்டதாரியான மார்வியா, மாடலாகவும் பணியாற்றியுள்ளார். இந்தியாவைப் போன்றே பாகிஸ்தானிலும் திருநங்கைகளின் வாழ்க்கை யாசகம், நடனமாடுவது, பாலியல் தொழில் போன்றவற்றோடுதான் கழிகிறது. தனக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பணி திருநங்கையர் வாழ்வில் மேம்பாடு ஏற்படுத்துவதாக இருக்கும் என்று பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் மார்வியா மாலிக் கூறியுள்ளார். பாகிஸ்தான் அமைச்சரவை, சமீபத்தில்தான் திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x