

வேண்டி விரும்பியோ தகுதித்தேர்வு எழுதியோ அவரது பிறப்பு நிகழவில்லை. நிறவெறியும் அடிமைத்தனமும் கோலோச்சிய காலத்தில் நியூயார்க்கின் கிராமப்புறப் பகுதியில் ‘அடிமைகள்’ என முத்திரை குத்தப்பட்ட குடும்பமொன்றில் 1797இல் இசபெல்லா பாம்ஃப்ரீயாகப் பிறந்தார். பிறப்பு தன் கையில் இல்லாத நிலையில் தான் எந்த அடையாளத்தோடு இறக்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்திருந்தார். அந்த உறுதிதான் ‘அடிமை’ என்கிற அடையாளத்தை அழித்தொழித்து சோஜர்னர் ட்ரூத் என்கிற போராளியாக அவரைப் பரிணமிக்கச் செய்தது.
சோஜர்னர் ட்ரூத்துக்குப் படிக்கவும் எழுதவும் தெரியாது. கல்வியறிவு இல்லை என்பது தன் போராட்டத்துக்கு எந்த வகையிலும் தடையாக அமைந்துவிடாத அளவுக்குக் கூர்மையான சிந்தனையும் பேச்சாற்றலும் நிறைந்தவராக இருந்தார். தன்னைப் போலவே அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் மீட்சிக்காகப் போராடினார். சக மனிதனின் துயரை உணர்வதும் அதை நீக்கக் குரல்கொடுப்பதுமே மனிதராகப் பிறந்ததற்கான பலன் என உறுதியாக நம்பியதோடு அதைத் தன் வாழ்நாள் முழுவதும் அவர் கடைப்பிடித்தார்.
வரலாற்று வெற்றி
பிறப்பின் அடிப்படையிலும் நிறத்தின் அடிப்படையிலும் மனிதரைத் தரம் பிரிக்கும் பிற்போக்கு ஆதிக்கச் சிந்தனையால் சிறுமி இசபெல்லா மிகச் சிறு வயதிலேயே பெரும் கொடுமைகளை அனுபவித்தார். ஒன்பது வயதில் ஆட்டு மந்தைகளோடு சேர்த்து இசபெல்லாவும் விற்கப்பட்டார். அவரை விலைக்கு வாங்கியவர் இசபெல்லாவை முதுகொடிய வேலை வாங்கினார். இசபெல்லாவை வேறொருவருக்கு விற்கும்வரை அவரை வதைத்தபடியே இருந்தார். இப்படியே வெவ்வேறு குடும்பத்தினருக்கு இசபெல்லா விற்கப் பட்டார். ‘முதலாளிகள்’ மாறினாலும் இசபெல்லா அனுபவித்த கொடுமைகளின் வடிவம் மாறவில்லை.
இசபெல்லாவுக்கு அவரைப் போலவே அடிமையாக வளர்ந்திருந்தவரோடு 1815இல் திருமணம் நடந்தது. அதன் விளைவாக ஐந்து குழந்தைகள். அவருடைய குழந்தைகளும் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டு விற்கப்பட்டனர். தான் வேலைசெய்துவந்த இடத்திலிருந்து தன் மகளுடன் தப்பியோடி அடிமை முறை ஒழிப்பில் ஈடுபட்டிருந்த குடும்பத்தைச் சரணடைந்தார். அலபாமாவைச் சேர்ந்த குடும்பத்தினருக்குத் தன் ஐந்து வயது மகன் சட்ட விரோதமாக விற்கப்பட்டிருந்தது இசபெல்லா வுக்குத் தெரிந்தது. தன் மகனை விலைக்கு வாங்கியவர் மீது சட்ட ரீதியாக வழக்குத் தொடுத்து அதில் வென்றார். வெள்ளையினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடுத்து வெற்றி கண்ட முதல் ஆப்ரிக்க அமெரிக்கப் பெண் என்கிற வரலாற்றை 1826இல் இசபெல்லா படைத்தார்.
பெண்ணுரிமைப் பிரச்சாரம்
நியூயார்க்கில் உள்ளூர் அமைச்சர் ஒருவரிடம் சிறிது காலம் பணியாற்றியவரது கவனம் மதப் பிரச்சாரத்தின் பக்கம் திரும்பியது. 1830ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியான மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரது பொதுவாழ்க்கைச் செயல் பாடுகளுக்கு இது முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. பெருந்திரளான மக்களைச் சந்திப்பதும் அவர்கள் நடுவே உரையாடுவதும் அவருக்குள் பெரும் மாற்றத்தை விளைவித்தன. உண்மையின் ஒளியில் நடக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும் ‘ஓரிடத்தில் குறுகிய காலம் மட்டுமே தங்குபவர்’ என்கிற பொருள்படும்படியும் தன் பெயரை ‘சோஜர்னர் ட்ரூத்’ என 1843இல் மாற்றிக்கொண்டார். தொடர்ச்சியாகப் பிரச்சாரப் பயணங்களை மேற்கொண்டார்.
அடிமைமுறைக்கு எதிரான அமைப்புகளோடு இணைந்து செயல்படத் தொடங்கினார். அவரது பேச்சு அடிமை முறையையும் பெண்ணடிமைத்தனத்தையும் ஆதரிக்கும் மக்களுக்கு எட்டிக் காயாகக் கசந்தது. 1853இல் பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களுக்கு நடுவில் சோஜர்னர் உரையாற்றினார். அவரது பேச்சுக்கு ஆண்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு தோன்ற, சோஜர்னர் கொஞ்சமும் அசரவில்லை. “உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குச் சீறிச் சத்தமிடுங்கள். ஆனால், பெண்கள் நிச்சயம் அவர்களது உரிமைகளை வென்றெடுப் பார்கள். உங்களால் அதைத் தடுக்க முடியாது” என முழங்கினார்.
பெண்ணாலும் முடியும்
பெண்ணுரிமைப் போராளியான சோஜர்னரின் முன் அன்றைக்கு மிகப்பெரிய சவால் இருந்தது. ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்களை ‘பெண்கள்’ என்கிற வரையறைக்குள் வைக்க அமெரிக்கப் பெண்ணுரிமைப் போராளிகள் சிலர் தயங்கினர். பெண்ணுரிமைக்காகப் போராடியவர்களில் சிலர் ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்களுக்குப் பெண்ணுரிமை கிடைக்க வேண்டும் என்று எண்ணவில்லை. தனக்கு எதிர்ப்பும் புறக்கணிப்பும் வலுக்கும்; பெண்ணுரிமைப் போராளிகளின் ஆதரவு கிடைக்காது என்கிற நிலையிலும் அமெரிக்க வெள்ளையினப் பெண்களின் உரிமைகளுக்காக மட்டுமே குரல்கொடுத்த சிலரது செயல்பாடுகளை சோஜர்னர் கடுமையாக விமர்சித்தார்.
அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் 1851இல் நடைபெற்ற மாபெரும் பெண்ணுரிமை மாநாட்டில் சோஜர்னர் ட்ரூத் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அந்த மாநாட்டில் பங்கேற்றவர்களில் வெகு சிலரே அதை ஆவணப் படுத்தியிருக்கிறார்கள். அமெரிக்கப் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் ஃபிரான்சஸ் கேஜ் அவர்களில் ஒருவர். இவர் சோஜர்னரின் உரையைத் தொகுத்து 1863இல் வெளியிட்டது மிக முக்கியமான ஆவணம்.
“பெண்களை வண்டிகளில் ஏற்றியும் சேறும் சகதியும் படாமல் சுமந்துகொண்டும் ஆண்கள் பாதுகாக்க வேண்டும், பெண்களுக்குப் பாதுகாப்பான இடத்தை ஆண்கள் அமைத்துத்தர வேண்டும் என்று ஆண்கள் சிலர் சொல்கின்றனர். என்னை யாரும் வண்டியில் ஏற்றிச் செல்லவில்லை, சேறு படாமல் சுமந்து செல்லவில்லை. என்னைப் பாருங்கள். என் கைகளைப் பாருங்கள். நான் பெண் இல்லையா? நான் நிலத்தை உழுதிருக்கிறேன், விதைத்திருக்கிறேன், கதிர் அறுத்து அவற்றை ஒன்றாகக் கட்டிச் சுமந்திருக்கிறேன். எந்த ஆணும் எனக்குக் கைகொடுத்து உதவவில்லை. ஓர் ஆணால் எந்த அளவுக்கு உழைத்து எவ்வளவு சாப்பிட முடியுமோ அதே அளவுக்கு உழைத்து ஆணைப்போல் என்னாலும் சாப்பிட முடியும். நான் பெண் இல்லையா?” என்று அந்தக் கூட்டத்தில் இடியென சோஜர்னர் முழங்கியபோது பெண்கள் ஆர்ப்பரித்தனர். சோர்ந்து கிடந்த மனங்களில் போராட்டச் சிந்தனையை சோஜர்னரின் பேச்சு விதைத்தது. பெண்களின் தலைக்குள் என்ன இருக்கிறது என்று சோஜர்னர் கேட்க, “அறிவு” என்று பெண்கள் கூட்டம் விண்ணதிரக் கூவியது.
பெண்ணுரிமைப் போராட்டத்துக்கு நடுவே வாக்குரிமைக்காகவும் சோஜர்னர் போராடினார். அப்போது வேறொரு சிக்கல் எழ, அதற்காக வாக்குரிமைப் போராளிகளோடு அவர் முரண்பட வேண்டியிருந்தது. அதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
(தொடரும்)