

என் கல்லூரிக் காலம் வரை புத்தகங்கள் மீதான ஈர்ப்பு குறைவு. கல்லூரி முடித்த பின் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த என் மனம் புத்தக வாசிப்பில் ஆர்வம் செலுத்தத் தொடங்கியது. விளைவு, இன்று செய்தித்தாள் தொடங்கி நாவல்கள் வரையுள்ள யாவும் என் நெருங்கிய தோழிகள்.
சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் எழுதிய ‘காடோடி’ என்னை மிகவும் கவர்ந்த நாவல்களில் ஒன்று. இந்த நாவலைப் படிக்கத் தொடங்கி முடிக்கும் வரை அக்கதையின் கதாபாத்திரமாகவே ஒன்றிப்போய்விட்டேன். ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்துப் பக்கங்களையாவது படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்.
எந்தக் கதையைப் படித்தாலும் அந்தக் கதை நிகழும் களத்துக்கு நானும் மனதளவில் பயணிப்பேன். வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலைப் படித்தபோது அந்த வறண்ட பூமியின் இயற்கை அழகு என் மனக்கண்ணில் விரிந்தது. ‘காடோடி’ நாவலைப் படித்தபோது போர்னியோ காட்டின் மரங்களில், பாறைகளில், விலங்குகளில் என் மனம் பறிபோனது. வரலாற்று நாவல்களே என் தேர்வு என்பதால் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, சாண்டில்யன் எழுதிய ‘விஜய மகாதேவி’, சு.வெங்கடேசனின் ‘வேள்பாரி’, எஸ்.பாலசுப்பிரமணியன் எழுதிய ‘மோகமலர்’ போன்றவற்றை விரும்பி வாசித்தேன்.
இந்த உலகில் நமக்கு யாரும் நிரந்தரச் சொந்தமில்லை என்கிறபோதும், புத்தகங்களே நெருங்கியச் சொந்தமாக நம்முடன் துணைநிற்கும். ஒவ்வொரு புத்தகமும் நம் கைகளைப் பிடித்துக்கொண்டு இவ்வுலகைப் பற்றி நமக்குச் சொல்லித்தரும். தனிமை என்னும் கொடுமை நம் மனதை விட்டு நீங்கும். பயனுள்ள ஒவ்வொரு புத்தகமும் பாதுகாக்கப்பட வேண்டிய நினைவுச்சின்னம். வாசிப்புப் பழக்கத்தை இளைய தலைமுறை யினரிடம் பரப்ப வேண்டும் என்பதே என் ஆசை.
- புஷ்பா, பொன்னேரி.