வீட்டுக்குச் செல்லும் வழி தெரியுமா உங்களுக்கு?

வீட்டுக்குச் செல்லும் வழி தெரியுமா உங்களுக்கு?
Updated on
2 min read

மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது ‘நெட்ஃபிளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் இருக்கும் ‘லாபத்தா லேடீஸ்’ (தொலைந்துபோன பெண்கள்)திரைப்படம், பெண்களின் லட்சியங் களுக்கும் கனவு களுக்கும் குடும்ப அமைப்பும் சமூகமும் எந்த அளவுக்கு மதிப்பளிக்கின்றன என்பதைத் தொட்டுச்சென்றிருக்கிறது. கிரண் ராவ் இயக்கி யிருக்கும் இந்தப் படம் 2001இல் இந்தியாவின் வட மாநிலம் ஒன்றில் நிகழ்வதுபோல் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்து ரயிலில் புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது தன் மனைவி ஃபூல்குமாரிக்குப் பதிலாக பிரதீப்பின் மனைவி ஜெயாவை அழைத்துக்கொண்டு இறங்கிவிடுகிறான் தீபக். படம் இதைச் சுற்றித்தான் நகர்கிறது. ஃபூல்குமாரி வெளியுலகம் தெரியாத கிராமத்துப்பெண். கணவனின் பெயரைச் சொல்லக்கூடத் தயங்குபவர். தான் பிறந்த ஊர், மாவட்டம், கணவனின் ஊர் என்று எதையுமே தெரிந்து வைத்துக்கொள்ளத் தெரியாதவர். ஆனால், யார் வீட்டுச் சமையலறைக்கும் பொருந்திப்போகும் ‘திறமை’ மிக்கவராக அவரை வளர்த்திருக்கும் தாயை நினைத்துப் பெருமிதப்படுபவர்.

ரயில் நிலையத்தில் தேநீர்க் கடை நடத்தும் மஞ்சு மாய், ஃபூல்குமாரிக்கு அடைக்கலம் தருகிறார். அவருக்கும் ஃபூல்குமாரிக்கும் இடையிலான உரையாடல், பெண்கள் மீது ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது. பொருளாதாரத் தற்சார்பும் துணிவும் மிக்க பெண்ணான மஞ்சு மாய், ஃபூல்குமாரியின் அறியாமையையும் வெகுளித்தனத்தையும் கண்டிப்பதோடு, ஒரு பெண்ணுக்கு எது தேவை என்பதையும் உணர்த்துகிறார். “அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்கள். ஒரு முறை என் கணவனிடம் அதைப் பிரயோகித்துப் பார்த்தேன்” என்று சிரித்தபடியே சொல்லும் மஞ்சு மாய், கணவன், மகன் உள்ளிட்ட ஆண்களின் கயமையைச் சகித்துக்கொள்ள முடியாமல் தனியே வாழ்கிறார். “என் கணவன் திரும்பி வந்தால் என்னை ஏற்றுக்கொள்வாரா?” என்று கேட்கும் ஃபூல்குமாரியிடம், “மனைவியைத் தொலைத்துவிட்டுச் சென்ற அவனை ஏற்றுக்கொள்ள வேண்டுமா, நிராகரிக்க வேண்டுமா என்று நீதான் முடிவு செய்ய வேண்டும்” என்று மஞ்சு மாய் சொல்வார். “உனக்கு உன் அம்மா எல்லாமே சொல்லித் தந்திருக்கிறார். ஆனால், வீட்டுக்குத் திரும்பி வரும் வழியை மட்டும் சொல்லித்தரவில்லை” என்று மஞ்சு மாய் சொல்லும்போது, சமையலறை மட்டுமே உலகம் என்று வாழும் பெரும்பாலான இந்தியப் பெண்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

ஃபூல்குமாரிக்குப் பதிலாக அவருடைய புகுந்த வீட்டுக்குச் சென்ற ஜெயாவும் கிராமத்தில் வளர்ந்தவர்தான் என்கிறபோதும் ஃபூல்குமாரியும் அவரும் நேரெதிர் சிந்தனையோடு இருக்கிறார்கள். காரணம், கல்வி. ஜெயாவுக்கு டேராடூனில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை படிக்க வேண்டும் என்பது லட்சியம். ஆனால், பெற்றோர் அவரை வற்புறுத்தித் திருமணம் முடித்துவைத்துவிடுகின்றனர். அதனால்தான், வேறொருவன் அழைத்துச் செல்லும்போது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் அமைதி காக்கிறார். அங்கிருந்து தப்பித்துத் தன் கனவைக் கைக்கொள்ள முடிவெடுக்கிறார்.

கணவன் வெளியூரில் இருப்பதால் யாரிடமும் பேசக் கூடாது என நினைத்து மௌனமாக இருக்கும் தீபக் வீட்டு மருமகளை ஜெயா சிரிக்கவைக்கிறார். ஜெயாவும் அந்தப் பெண்ணும் சிரித்துப் பேசுவதைப் பார்க்கும் தீபக்கின் அம்மா தன் மாமியாரிடம், “நாம் ஏன் இப்படி அன்பாகச் சிரித்துப் பேசுவதில்லை?” எனக் கேட்பார். நம் குடும்பங்களில் வேரோடிப் போயிருக்கும் மாமியார் - மருமகள் உரிமைப் பிரச்சினையின் சிறு கண்ணி அந்தக் காட்சி. தாமரைத் தண்டு தொடுகறி நன்றாக இருப்பதாக ஜெயா பாராட்ட, “உணவு நன்றாக இருக்கிறது என யாராவது பாராட்டுவார்களா?” எனச் சிரிக்கிறார் தீபக்கின் அம்மா. அவருக்குப் பிடித்த தாமரைத் தண்டு தொடுகறி அந்த வீட்டில் யாருக்கும் பிடிக்காது என்பதற்காக அதைச் சமைப்பதே இல்லை என அவர் சொல்லும்போது தாய்மையின் மீது ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் தியாகச் சுமை நம்மையும் அழுத்துகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பா ராணி என்கிற பொய்யான அடையாளத்துடன் தன் வீட்டில் ஜெயா தங்கியதை அறியும் தீபக், உண்மையை ஏன் மறைக்க வேண்டும் என்று ஜெயாவிடம் கோபப்படுவார். அதற்கு, “உண்மையைச் சொன்னபோது என் அம்மா அதை ஏற்றுக்கொண்டாரா? நான் படிக்க வேண்டும் என்று இந்த வீட்டுக்கு வந்த அன்றே உங்களிடம் உண்மையைச் சொல்லியிருந்தால் என்னை இவ்வளவு நாள்கள் உங்கள் வீட்டில் தங்க அனுமதித்திருப்பீர்களா?” என்று ஜெயா கேட்கிறார். திருமணம் என்கிற பெயரால் பல பெண்களின் கனவுகள் பலிகொடுக்கப்படுவது இயல்பாக்கப்பட்டிருப்பதை ஜெயாவின் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது.

வசனங்கள் இந்தப் படத்துக்கு வலுசேர்க்கின்றன. விப்லப் கோஸ்வாமியின் கதைக்குத் திரைக்கதையும் வசனமும் எழுதியிருப்பவர் ஸ்நேகா தேசாய். பெண்களின் பிரச்சினைகளைப் பெண்கள் பேசும்போது அது உண்மைக்கு நெருக்கமாகிவிடுவதை ஸ்நேகாவின் வசனங்கள் உணர்த்துகின்றன. இந்தப் படத்தின் இயக்குநர் கிரண் ராவ், வசனகர்த்தா ஸ்நேகா தேசாய் இருவரும் எளிமையான திரைக்கதையில் வலிமையான பெண் விடுதலையைப் பேசலாம் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். திரைத்துறையில் பெண்கள் தொடர்ந்து இயங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் உணர்த்துகிறார்கள்.

கலாச்சாரம், பழக்க வழக்கம் போன்றவற்றில் வேறுபாடுகள் இருந்தபோதும் இந்தியாவின் எந்த மாநிலமாக இருந்தாலும் நம் குடும்ப அமைப்புகளில் பெண்கள் நடத்தப்படும் விதத்தில் பெரிய மாற்றம் இல்லை என்பதை ‘லாபத்தா லேடீஸ்’ படம் சொல்கிறது. வீடு மட்டுமே உலகம் அல்ல, கல்வியும் சமூகப் புரிதலும் பெண்களுக்கு மிக மிக அவசியம் என்பதே ஜெயாவும் ஃபூல்குமாரியும் நமக்குச் சொல்லும் சேதி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in