போகிற போக்கில்: கலைக்காக அரசுப் பணியைத் துறந்தேன்

போகிற போக்கில்: கலைக்காக அரசுப் பணியைத் துறந்தேன்
Updated on
2 min read

கரூர் மாவட்டம் வெண்ணெய் மலையைச் சேர்ந்த நிவ்யாவுக்குப் பள்ளிப் பருவத்தில் இருந்தே கலைகள் மீது ஆர்வம். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் வரையத் தொடங்கினார். யாரிடமும் முறைப்படி பயிற்சிபெறாமல் பென்சில் ஓவியங்களை வரைந்தார். மெஹந்தியில் கலைநுணுக்கத்தோடு பல வடிவங்களை வரைய இந்த ஓவியத்திறமை நிவ்யாவுக்குக் கைகொடுத்தது.

தற்போது தமிழகத்திலும் பலர் தங்கள் குடும்ப விழாக்களின்போது ‘மெஹந்தி விழா’ நடத்துவதால் முகூர்த்த நாள்களில் இவருக்கு நிறைய ஆர்டர்கள் கிடைக்கின்றன. பெரும்பாலும் பூக்களையும் கொடிகளையும்தான் மெஹந்தி டிசைன்களாகப் பலரும் வரைவார்கள். ஆனால், மனித முகங்களை மெஹந்தி டிசைனாக வரைவதில் நிவ்யா கைதேர்ந்தவர். இந்தத் தனித்துவமான திறமை அவருக்கு நிறைய வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது.

“முகூர்த்த நாள்களைப் பொறுத்துத்தான் வருமானம் அமையும். மற்ற நாள்களில் அவ்வளவாக ஆர்டர்கள் வராது என்றாலும், அந்தச் சூழ்நிலையையும் கையாளத் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும்” என்று சொல்லும் இவர், ஆர்டர்கள் எதுவும் கிடைக்காதபோது ஆர்கானிக் மெஹந்தி கோன்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறார்.

நிவ்யாவின் கவனம் தஞ்சாவூர் ஓவியப் பாணி மீது திரும்ப இரண்டு வெவ்வேறு கலை நிறுவனங்களில் இணையம் மூலம் தஞ்சை ஓவியங்களை வரையக் கற்றுக்கொண்டார். தஞ்சாவூர் ஓவியங்களின் விலை அதிகம் என்பதை ஒப்புக்கொள்ளும் அவர், “குறைந்த விலையில் பரிசுப் பொருள்கள் கிடைத்தாலும் பாரம்பரிய கலைகளை விரும்பும் மக்களும் இருக்கிறார்கள். தெய்வங்கள், கோயில்கள் போன்ற மரபார்ந்த மற்றும் பழங்காலச் சின்னங்களை விரும்புபவர்கள் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் படைப்புக்கே முக்கியத்துவம் தந்து வாங்குகிறார்கள். என்னுடைய இன்ஸ்டாகிராம் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது விநாயகர் ஓவியம்தான்” என்கிறார்.

அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் அவருடைய பெற்றோரின் விருப்பமாக இருந்தது. அதற்காகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் தேர்ச்சிபெற்றுப் பணியில் சேர்ந்தார். வேலையையும் தொழில் சார்ந்த கனவையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாததால் அரசுப் பணியைத் துறந்தார். ஆரம்பத்தில் ஆர்டர்களை எப்படிப் பெறுவது என்று தெரியாமல் தவித்தவருக்கு அவருடைய நெருங்கிய நண்பர்கள் இன்ஸ்டகிராம் மார்க்கெட்டிங்கைப் பரிந்துரைத்தனர். ஒரு வருடப் போராட்டத்துக்குப் பிறகு, நிவ்யாவின் இன்ஸ்டகிராம் பக்கத்துக்குக் குறிப்பிடத்தகுந்த பார்வையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். மகளின் முன்னேற்றத்தைப் பார்த்த பெற்றோரும் அவருக்கு ஆதரவளிக்கத் தொடங்கினர்.

நிவ்யா தனது கனவுத் தொழிலைத் தொடங்கிய போது, அவருடைய அம்மா அவருக்குப் பக்கபலமாக இருந்தார். “உங்கள் கனவை எதற்காகவும் கைவிடக் கூடாது. நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்றைச் செய்து முடிக்கிறபோது கிடைக்கும் மனநிறைவுக்கு விலையே இல்லை” என்கிறார் நிவ்யா.

மு. ரஷிதா சபுரா, த.சந்தியா - பயிற்சி இதழாளர்கள்

இதைப் படித்ததும் உங்களுக்குள் இருக்கும் கலையார்வத்தை எங்களோடு பகிர விரும்புகிறீர்களா? நீங்கள் கைவினைக் கலையிலோ சுயதொழிலிலோ சிறந்து விளங்குபவராக இருந்தால் உங்களைப் பற்றிய தகவல்களை எழுதித் தகுந்த ஒளிப்படங்களோடு அனுப்புங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in