

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே முத்துலாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கருப்பசாமி கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெ.மாதவன். கோவில் பட்டியில் உள்ள வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். இவர் தன் பெயர் சாதனாலட்சுமி என்றும் தான் திருநங்கையாக மாற விரும்பும் ஆண் எனவும் குறிப்பிடுகிறார். வறுமை நிறைந்த குடும்பச் சூழலில் கல்வி பயில்வதே சிரமமாக இருக்கிற நிலையில் தனக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் பாலின மாற்றத்துடனும் இவர் போராட வேண்டிய சூழல். அந்தப் பின்னணியில் இவர் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதே சாதனைதான்.
ஆறாம் வகுப்பு படித்தபோதுதான் இவர் தன்னைப் பெண்ணாக உணரத் தொடங்கியிருக்கிறார். வீட்டில் இருக்கும்போது பெண்ணைப் போல் அலங்கரித்துக்கொள்வாராம். அப்போதிலிருந்தே பாலியல் ரீதியாகத் தொந்தரவுகளை எதிர்கொள்ளத் தொடங்கியதாகச் சொல்கிறார். “எட்டாம் வகுப்பு படித்தபோது கரோனா காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டன. அப்போது வீட்டில் இருந்தபோது நான் முழுவதுமாகப் பெண்ணாக மாறிவிட்டதாகவே எண்ணினேன். என் மனதில் எழுந்த சந்தேகங்களுக்கு இணையதளத்தின் மூலம் விடை கண்டறிந்தேன். நான் திருநங்கை என்பதை உணர்ந்தேன். அதுவரை திருநங்கையர் குறித்து எனக்குத் தெரியாது. அறுவைசிகிச்சை செய்து கொள்ளாத திருநங்கை நான் என்று உணர்ந்தேன். நான் பையனைப் போல் இருக்க முயன்றாலும் எனது பேச்சு, நடவடிக்கைகள் என்னைக் காட்டிக் கொடுத்துவிடுகின்றன. என் தாய், தந்தைக்கு என் நடவடிக்கைகள் மீது சந்தேகம் வந்தபோதும் அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவில்லை” என்கிறார் மாதவன்.
பத்தாம் வகுப்பு வரை எட்டயபுரம் வட்டத்துக்கு உள்பட்ட அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தார். பாதுகாப்புக்காகத் தன் தாய் பாண்டி லட்சுமியுடன்தான் பள்ளிக்குச் செல்வார். கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பில் சேர்ந்தபோது இவரது நடவடிக்கைகளால் இவருடைய பெற்றோருக்கு இடையே பிரச்சினை எழுந்தது. இதனால் 11ஆம் வகுப்பை திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தொடர்ந்தார். “அந்தப் பள்ளியில் என்னை அறிந்த சக மாணவர்கள் என்னிடம் இயல்பாகப் பேசினர். யாரும் என்னைத் தொந்தரவு செய்யவில்லை. என் மாமாவும் அத்தையும் மாற்றுத் திறனாளிகள். எனது பாதுகாப்பு கருதி என்னை ஊருக்கே அனுப்பி வைத்தனர். இதனால், மீண்டும் கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பில் சேர்ந் தேன்” என்று சொல்கிறார் மாதவன்.
மாதவன் பெண்ணைப் போல் நடந்து கொண்டதால் இங்கும் பிரச்சினையை எதிர்கொண்டார். “ஆசிரியைகள் சிலர் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கும் பாலியல் சீண்டல்கள் தொடர்ந்தன. எனக்கு ஆதரவாக இருந்த மாணவரும் தவறாகச் சித்தரிக்கப்பட்டார். இதனால், முதல் பருவத்தேர்வு முடிந்தவுடன் வீட்டில் இருந்தவாறே படித்தேன். இதற்கு ஆசிரியை நிர்மலா, தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் ஆகிய இருவரும் உதவினர். அவர்களது உதவி இல்லையென்றால் 12ஆம் வகுப்பை நிறைவு செய்திருக்க மாட்டேன்.
நான் திருநங்கையாக இருப்பதை என் அம்மாவிடம் சொன்னேன். அவரும் என் அண்ணன்களும் என்னை ஏற்றுக்கொண்டனர். என் அப்பா என்னை ஏற்றுக்கொள்ளாததுடன் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் என் பெற்றோருக்கு இடையே சண்டை ஏற்பட்டது. எனக்கு உதவியவர்களிடமும் என் அப்பா பிரச்சினை செய்தார்” என வேதனையுடன் சொல்கிறார் மாதவன்.
ஆசிரியைகளுக்குத் திருநங்கையர் குறித்த புரிதல் வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறார். “ஆணாகத் தெரிந்தாலும் நாங்கள் மனதளவில் பெண்தான். எங்களைப் பையனாகவோ பெண்ணாகவோ பார்க்க வேண்டாம். சக மாணவராகப் பார்த்தாலே போதும்” என்று சொல்லும் மாதவன் திருநங்கைகளுக்கு அரசு சலுகைகள் முறையாகப் போய்ச் சேரவில்லை என்கிறார். திருநங்கையர் சிலரே தங்களது சமூகத்தைச் சார்ந்த இளம் திருநங்கையரைப் படிக்க விடாமல் தடுப்பதும் நடப்பதாகச் சொல்கிறார்.
11, 12ஆம் வகுப்புகளில் கலைத் திருவிழாவில் மாவட்ட அளவில் பரதநாட்டியத்தில் இவர் முதலிடம் பெற்றிருக்கிறார். “பரதநாட்டியம், தையல், எம்ப்ராய்டரி, ஆரி உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் கற்றுக்கொண்டேன். மருத்துவத் துறை தொடர்பான படிப்பில் சேர வேண்டும். திருநங்கை நமீதா மாரிமுத்து போல் மாடலிங், ஃபேஷன் துறைகளில் சாதிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டத்துக்கு ஒரு பள்ளி உள்ளது போல், திருநங்கைகளுக்குத் தனியாகப் பள்ளி வேண்டும். வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும். 18 வயதுக்கு மேல்தான் திருநங்கைக்கான அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் காத்திருக்கிறேன். அதுவரை நான் திருநங்கையாக மாற விரும்பும் ஆண் என்றுதான் அழைக்கப்படுவேன்” என்கிறார் மாதவன்.
திருநங்கையர் குறித்து எவ்வளளோ விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், சமூகம் அவர்களை ஒதுக்கி வைப்பது, வேதனைக்குரியது. வெளியே நாகரிகமான சமூக மாகத் தெரிந்தாலும் சமூகம் இன்னும் பழமையிலேயே தேங்கியுள்ளதைத் தான் மாதவன் மீதான சமூகப் புறக்கணிப்பு உணர்த்துகிறது. திருநங்கையரும் மற்றவர்களைப் போல் முன்னேற வேண்டும். அரசும் காலமும் அதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.