

சென்னையைச் சேர்ந்த இளவயது செவிலி ஒருவர் திருமணத்துக்கு முன் தன் காதலனுடன் ஏற்பட்ட உறவால் உண்டான குழந்தையை யாருக்கும் தெரியாமல் பிரசவித்து அதைக் கொன்ற சம்பவத்தை அண்மையில் பலரும் கேள்விப்பட்டிருப்போம். இந்தச் செய்தியைப் படித்த பலருக்கும் ‘இது ஒரு தாய் செய்யக்கூடிய செயலா?’ என்று தோன்றியிருக்கும். இந்தக் கொடுமையான சம்பவம் குறித்துப் பலருக்கும் பல கேள்விகள் இருக்க, பலரது கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளான இந்த இளம் செவிலி மட்டும்தான் இந்தக் கொலைக் குற்றத்துக்கு முழுக் காரணியா? சமூகப் புரிதலின்மையும் ஏற்பின்மையும் இந்தக் கொடூரச் சம்பவத்துக்குக் காரணமில்லையா?
சமூக ஒப்புதல்
நம் நாட்டில் 18 வயதைக் கடந்தோர் உடலுறவில் ஈடுபட முழுச் சட்ட ஒப்புதல் உண்டு என்கிற நிலையில் ‘சமூக ஒப்புதல்’ இன்னும் கிடைக்கவில்லை. அப்படி உறவில் ஈடுபடும் இருவர் தங்கள் உறவை மறைபொருளாகவே வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இளம் பெண்கள் பாப் ஸ்மியர் (Pap smear) எனப்படும் கருப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்குச் சென்றால் அவர்களுக்குத் திருமணம் ஆகாத பட்சத்தில் இந்தச் சோதனை மறுக்கப் படுவதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல் திருமணம் ஆகாத பெண்கள் கருத்தடை மாத்திரைகள் வாங்கச் சென்றால் எத்தனை மருத்துவர்கள் மாத்திரையைப் பரிந்துரைக்கிறார்கள் என்பதும் வாதத்திற்குரியது. கருத்தடை மாத்திரைகள் கொடுக் கும் மருத்துவமனைகளில் சிலர் தரம் பார்க்கவும் கூடும். குறிப் பிட்ட வர்க்கத்தைச் சேர்ந்தோர் எடுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகள் குறித்துக் கேள்வி கேட்கப்படுவதில்லை. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களது முடிவு களை இந்தச் சமூகம் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை.
ஆணுறை என்பது மிகவும் பாதுகாப்பானது என்று தொடர்ந்து சொல்லப்படும் சமூகத்தில் ஆணுறை அணிய ஆண்கள் பெரும் தயக்கத்தைக் காட்டுகின்றனர். இது கேள்விக்கு உட்படுத்தப்படுவதே இல்லை. பதிவுத் திருமணம் புரியும் காதலர்கள் 18 வயதைக் கடந்த பிறகும் அவர்களுடைய பெற்றோரின் கையெழுத்தைப் பதிவர்கள் கேட்பதைப் பார்க்கலாம். பெற்றோர் சம்மதம் இல்லாமல் 18 வயதைக் கடந்தவர்கள்கூடத் திருமணம் செய்யக் கூடாது என்கிற எழுதப்படாத சட்டத்தால், வீட்டை எதிர்த்து எளிதாகக் காதலர்கள் திருமணம் செய்துகொள்ள முடியாத நிலையில் அவர்கள் காதலர்களாக மட்டுமே தொடரக்கூடிய நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.
கருக்கலைப்பும் கேள்விகளும்
கருக்கலைப்பு பற்றிய சட்ட நிலை மாறிக்கொண்டு வரும் நிலையில் திருமணம் ஆகாத பெண் ஒருவர் கரு வுற்றிருந்தால் மருத்துவமனைக்குச் சென்று கருக்கலைப்பைக் கோருவது எளிதன்று. அப்படி இருக்கும் நிலை யில் திருமணம் ஆகாத பெண் ஒருவர் கருவுற்ற 24 வாரங்களுக்குள் கருக் கலைப்பு செய்துகொள்வது என்பது பெரும் சிக்கல்.
இப்படியான சமூகச் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ள ஒரு பெண் ணின் மனநிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். தான் கருவுற்றதைப் பெற்றோரிடம் சொன் னால் தன் மீது மேலும் பழி, பிரச்சினை என்று அவர்களின் சீற்றத்தை நோக்க வேண்டி வருமே என்கிற அச்சம் ஒருபுறம் இருக்க, சமூகத்திலோ நண்பர்களிடமோ சொன்னால் உருவாகும் தன் நடத்தை மீதான தாக்குதல்களைப் பற்றிய எண்ணம் மறுபுறம் அவரை அலைக் கழித்திருக் கும். இந்தச் சிக்கலான சூழ்நிலையில் அவருக்கு மனச்சோர்வு, மன உளைச்சல், மருட்சி போன்றவை இருந்திருக்கலாம். அவரது முடிவுகள் இந்த மனநிலையால் பாதிக்கப் பட்டிருக்கலாம்.
திருமணமாகாத தாய்
திருமணம் ஆகாத ஒரு தாய் இந்தச் சமூகத்தில் வாழ்வது எவ் வளவு கடினம் என்பது தனியாகச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இந்தச் சிக்கலுக்கு இடையே காலதாமதமாகக் கர்ப்பத்தை உணர்ந்த இந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலை நாம் கருத்தில்கொள்ள வேண்டும். ஒரு குற்றம் நிகழும்போது குற்றவாளி ஒருவர் மட்டுமே தண்டிக்கப்படுகிறார். ஆனால், குற்றமோ பலரால் இழைக்கப் பட்டது. இப்போது சொல்லுங்கள், அந்தக் குழந்தையை அதன் தாய் மட்டுமா கொன்றார்?
- ராதிகா முருகேசன்,
கட்டுரையாளர், மனநல மருத்துவர்