

பெண்ணின் அடையாளம் அழகா, அறிவா என்கிற கேள்விக்குத் தன் மகத்தான வெற்றியின் மூலம் பதில்சொல்லியிருக்கிறார் பிராச்சி நிகம். “ஒருவேளை குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் நான் யாருடைய கவனத்தையும் பெற்றிருக்க மாட்டேன்” எனப் புன்னகையுடன் கூறுகிறார் பிராச்சி.
உத்தரப்பிரதேச மாநிலம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 600க்கு 591 (98.5%) மதிப் பெண்கள் பெற்று பிராச்சி முதலிடம் பிடித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள் ஒருபக்கம் குவிய, சமூக வலைதளத்தில் அவரது உருவத்தைக் கேலி செய்து பலரும் ட்ரோல் செய்யத் தொடங்கினர். இன்னும் சிலரோ பிராச்சிக்கு அழகை மேம்படுத்திக் கொள்ளும் ஆலோசனைகளைக் கூறினர்.
காரணம், ஹார்மோன் சமநிலை யின்மையால் பிராச்சிக்கு முகத்தில் மீசை வளர்ந்திருந்தது. மும்பையைச் சேர்ந்த ஷேவிங் நிறுவனம் ஒன்று, பிராச்சியின் பெயரைக் குறிப்பிட்டு அநாகரிகமான முறையில் விளம்பரம் வெளியிட்டது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய விளம்பரத் தரநிர்ணய கவுன்சில் தெரிவித்திருக்கிறது.
தொடரும் அழுத்தம்
பெண்களின் அழகு குறித்து இச்சமூகம் வைத்திருக்கும் வரை யறைகள் ஏராளம். முகத்தில் சிறு முடி முளைத்தாலும் அதை எப்பாடுபட்டாவது அகற்றிவிட நம்மைச் சுற்றி அக்கறைக் குரல்கள் எழத் தொடங்கிவிடும். மஞ்சள் பூசுவதில் தொடங்கி வேக்சிங், திரெட்டிங், லேசர் சிகிச்சை என நீளும் பட்டிய லால் பெரும்பாலான பெண்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி, அவர்களின் சுயத்தை நேசிக்கவோ இயல்பை ஏற்றுக்கொள்ளவோ மறந்துவிடு கின்றனர்.
ஆனால் 15 வயதான பிராச்சி இதில் தனித்து நிற்கிறார். தன் புறத்தோற்றம் குறித்த கிண்டல்களை இந்த இளம் வயதிலேயே மிகப் பக்குவமாக எதிர் கொண்டு மதிப்பெண்ணால் மட்டு மல்லாமல், தனது ஆளுமையாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
“என் முகத்தில் வளரும் முடிகள் குறித்தோ என்னைக் கேலி செய்பவர்கள் குறித்தோ நான் கவலைப்படுவதில்லை. எனது கவனம் முழுவதும் படிப்பின் மீதே உள்ளது” என்கிற பிராச்சிக்கு அவருடைய நண்பர்களும் பெற்றோர்களும் உறுதுணையாக இருக்கின்றனர்.
பிராச்சி மட்டுமல்ல...
பதின்பருவத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வளர்ந்த மீசை முடி, பின்னாள்களில் கண்களை உறுத்தும் அளவில் வளர்ந்திட அதைத் தனது அடையாளமாகவே மாற்றிக்கொண்டி ருக்கிறார் கேரளத்தின் ஷைஜா. தனது மீசையை மிகவும் நேசிக்கும் ஷைஜா தன்னை ‘மீசைக்காரி’ என்றே பிறரிடம் பெருமையுடன் அடையாளப்படுத்திக்கொள்கிறார். ஷைஜாவின் கணவரும் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற கற்பிதத்துக்கு இடமளிக்காமல் ஷைஜாவை அவரது இயல்போடு ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
லண்டனைச் சேர்ந்தவர் ஹர்னம் கவுர். முகத்தில் மீசை, தாடி வளர்ந்ததால் பள்ளி, கல்லூரி நாள்களில் கடுமையான கேலிக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளானார். ஒருகட்டத்தில் தனது தோற்றத்தினால் தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான ஹர்னம், உயிரை மாய்த்துக்கொள்ளவும் எண்ணியிருக்கிறார். ஆனால், காலம் ஹர்னமுக்கு வேறோரு பரிசை வைத்திருந்தது. தனது உடலை முழுமையாக உணர்ந்து, தோற்றம் சார்ந்த எதிர்மறை எண்ணங் களிலிருந்து வெளியேறி தற்போது தன்னம்பிக்கைப் பேச்சாளராக மிளிர்ந்து கொண்டிருக்கிறார் ஹர்னம் கவுர்.
நவீனச் சுரண்டல்
நம்மை நாளும் நெருக்கிக் கொண்டிருக்கும் ‘Perfect Body’ என்கிற அழகு சார்ந்த நவீனச் சுரண்டலால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொருவரும் அவர்களது தனித்துவமான உடலமைப்பை விரும்பாமல், அழகு - ஃபிட்னஸ் நிறுவனங்களால் முன்னிறுத்தப்படும் போலியான பொது பிம்பத்தை நம்மில் பிரதி எடுக்கத் தொடங்குகிறோம். இதில் லேசர் சிகிச்சை, தாடை மாற்று அறுவைசிகிச்சை, கொழுப்பு நீக்க அறுவைசிகிச்சை போன்றவற்றால் சிலர் உயிரையும் இழக்கின்றனர். உண்மையில் அழகு சார்ந்து சமூகம் வைத்திருக்கும் கருத்துருவாக்கங்கள் நம்முள் ஆழமாகவே விதைக்கப்பட்டி ருக்கின்றன. அதன் விளைவாக ஒரு தலைமுறையே தீவிர மன நெருக்கடியில் சிக்கியிருப்பதை எதிர்கொண்டுள்ளோம். இத்தகைய சூழலில், தங்கள் உடலமைப்பை ஏற்றுக்கொண்டு சுயத்தை நேசிக்கும் பிராச்சி போன்றவர்கள் என்றைக்கும் கொண்டாட்டத்துக்குரியவர்கள்.