பார்வை: அங்கீகரிக்கப்படாத ஆயிரம் வேலைகள்

பார்வை: அங்கீகரிக்கப்படாத ஆயிரம் வேலைகள்
Updated on
3 min read

இந்தக் காலத்தில் குறைத்து மதிப்பிடப்படும் அல்லது கேலிக்கு உள்ளாகும் தத்துவங்களுள் ஒன்று பெண்ணியம். சமூக, பொருளாதார, அரசியல் செயல்பாடுகளுக்குப் பெண்களின் இயங்குவெளியும் அடிப்படையாக இருக்கிறது. அதை ஒட்டுமொத்தச் சமூகமும் வசதியாக மறைத்துவிடுகிறது.

ஒரு குடும்பத்தில் அல்லது சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறாததற்குச் சந்தை மதிப்பு இல்லாததே காரணம். குடும்பத்தில் பெண்ணின் உழைப்புக்குப் பெயர் கடமை. அந்தக் கடமை, உணர்வுகளோடு இணைக்கப்பட்டது; தியாகத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த அளவீடுகளைக் கொண்டே பெண் மதிப்பிடப்படுகிறாள். ஆண் உழைப்பதும் கடமைதான் என்றாலும் அது பெண்ணின் உழைப்பைவிட மதிப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது; கொண்டாடப் படுகிறது.

ஓயாத வேலைகள்

பூ விற்கும் நடுத்தர வயதுப் பெண் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்: “வெளியில வந்தா ஒரே வேலைதான். வீட்டில இருந்தா ஆயிரம் வேலை”. இந்த அனுபவம் மிக்க வார்த்தைகள் அவரைத் திரும்பிப் பார்க்க வைத்தன. எவ்வளவு பெரிய தத்துவத்தை இந்த எளிய மனுஷி மிக இயல்பாகச் சொல்லிவிட்டார்!

வீட்டில் பெண்கள் செய்யும் எல்லா வேலைகளும் அவர்களது உணர்வுகளோடு பிணைக்கப்பட்டுள்ளன. அந்த வேலை களுக்கு மதிப்பு இல்லை எனப் பொருளாதார அடிப்படையில் சொல்வது எவ்வளவு கேலிக்குரியது! சமைப்பதற்கு முன் செய்யப்படும் ஆயத்தங்கள், விதவிதமான உணவு வகைகளைச் சமைத்தல், சமைத்த பாத்திரங்களைத் துலக்குதல், வீட்டைப் பெருக்கித் துடைத்துச் சுத்தம் செய்தல், துணி துவைத்தல், துவைத்த துணிகளை அடுக்கி வைத்தல், மாதாந்திர வீட்டுச் சுத்திகரிப்பு, காய்கறி வாங்குதல், மளிகைப் பொருள் களைப் பாதுகாத்தல், பால் கணக்கு, கேஸ் கணக்கு, குழந்தைகளைப் பராமரித்தல், அவர்களைப் பள்ளிக்கு அனுப்புதல், பாடம் சொல்லிக் கொடுத்தல், விருந்தாளிகளை உபசரித்தல், வீட்டுப் பெரியவர்களைப் பார்த்துக்கொள்ளுதல், பண்டிகைகள், குடும்ப நிகழ்வுகள் உள்ளிட்ட விழாக் கொண்டாட்டங்களை அனுசரித்தல், குடும்ப உறுப்பினர்கள் நோய்வாய்ப்படும்போது அவர்களைக் கவனித்துக்கொள்வது, சிக்கனமாகச் செலவழித்தல் மிக முக்கிய மாகக் கழிவறைகளைச் சுத்தம் செய்தல் என இந்த வேலைகளுக்குள் ஆயிரம் சிறு குறு வேலைகள் ஒளிந்திருக்கின்றன. ‘இதெல்லாம் புதிதாக எந்தப் பெண்ணும் செய்வதில்லையே. காலம் காலமாகப் பெண்கள் செய்துவரும் வேலைதானே’ எனச் சொல்வதில் கைதேர்ந்தது ஆண் மையச் சமூகம். இதில் உள்ள அரசியலைப் பலரும் புரிந்துகொள்வதில்லை. ‘நீ செய்வதெல்லாம் ஒரு வேலையா? என் அம்மா, பாட்டி செய்ததற்கு முன்னால் நீ செய்வதெல்லாம் ஒன்றுமே இல்லை. எல்லாவற்றுக்கும் மிஷின் இருக்கே, நீயா செய்யறே’ என்கிற அலட்சியமான பதில்தான் கிடைக்கும். மிஷின்கள் எத்தனை வந்தாலும் அவற்றையும் பெண்கள்தான் இயக்க வேண்டும்.

‘சும்மா’ இருக்கும் பெண்கள்?

‘வீட்ல சும்மாதான் இருக்கேன்’ எனப் பெண்ணையே உணரவைத்து அதை நம்பவைக்கும் சூழ்ச்சி இது. ‘ஒரு நாள் சும்மா இருந்து பாரேன்’ என்கிற திரைப்பட நகைச்சுவையைப் போல, ஆண்களைச் சும்மா இருந்து பார்க்கச் சொன்னால் அந்த ஒரு நாளிலேயே அவர்கள் திண்டாடுவதைப் பார்க்கலாம். ஒரு நாள் சமைத்தோ அல்லது துவைத்தோ காட்டும் ஆண்கள் அதை ஆண்டு முழுவதும் ஆயுள் முழுவதும் செய்யத் தயாராக இருப்பார்களா? ‘இதெல்லாம் பொம்பளைங்க வேலை. நமக்கு செட்டாகாது’ என எளிதில் கடமையைக் கைகழுவி விடுவார்கள். இனப்பெருக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பெண், சமூகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்துக்கும் அடிநாதமாக விளங்குகிறாள். அவள் நேரத்துக்குச் சமைத்து வைத்தால்தான் ஆண்கள் வேலைக்குச் செல்ல முடியும். துணிகளைத் துவைத்து வைத்தால்தான் அலுவலகத்துக்கு அழுக்கில்லாமல் ஆடையணிந்து செல்ல முடியும். குழந்தைகளைப் பராமரித்தால்தான் ‘என் பிள்ளை’ என ஆண்கள் கர்வமாகச் சொல்லிக்கொள்ள முடியும். இப்படி எத்தனையோ வேலைகளை ஆணின் இயக்கத் துக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்தின் இயக்கத்துக்காகவும் பெண் அன்றாடம் செய்து வருகிறாள்.

வேலை என்ன விலை?

காலைச் சிற்றுண்டி, மதியச் சாப்பாடு செய்து வீட்டைப் பெருக்கிப் பாத்திரங்கள் துலக்கும் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்குக் குறைந்தபட்சம் நகரத்தில், மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. குழந்தைகளைப் பராமரிக்க நகரத்தில் மாதம் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட நேரம் மட்டும்தான். இவை தவிர வீட்டு வேலைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. வீட்டுப் பணிப்பெண் ஒருநாள் வராவிட்டாலும் அந்த வீட்டின் இயக்கம் தடைபட்டுவிடுகிறது. எட்டு மணி நேரம் அல்ல, நொடிப் பொழுதும் நீங்காமல் 24 மணிநேரமும் குடும்பத்தின் இயக்கத்துக்காக உழைக்கும் பெண்ணின் உழைப்புக்கு அங்கீகாரம் இல்லை என்பது அதில் வசதியாக பொருந்திக்கொண்டு வாழும் ஆண் மையச் சமூகத்தின் சுயநலத்துக்குச் சாட்சி.

வீட்டில் தங்குவது, உண்பது, உடுத்துவது என்கிற விதத்தில் பெண்ணுக்கு ஓர் ஆண் வழங்குவதைக் குறைந்தபட்ச ஊதியமாகத் தான் எடுத்துக்கொள்ள முடியும். ஆணின் வெளி உழைப்பும் பெண்ணின் வீட்டு உழைப்பும் சமம் எனச் சமன்படுத்திக்கொண்டாலும் நடைமுறையில் சமூகத்தில் பெண்ணின் உழைப்பும் ஆணின் உழைப்பும் ஒரே மதிப்பைப் பெற்றிருக்கவில்லை. தவிர, ஆணின் இயங்குவெளி லட்சியம், கனவு, சமூகத்துக்கு நேரடியாகப் பங்களிப்பது, அதன் மூலம் கிடைக்கும் அங்கீகாரம் என விரிந்து கிடக்கிறது. பெண்ணின் வெளி குடும்பம் என்கிற வட்டத்துக்குள் சுருங்கிக் கிடக்கிறது.

குடும்பக் கட்டமைப்புக்கு, அதன் சமநிலைக்கு ஆண்களின் பங்களிப்பைவிடப் பெண்களின் பங்களிப்பு உடல் உழைப்பாலும் உளவியல்ரீதியிலும் அளப்பரியது. குடும்பக் கடமைகளில் ஒன்றான பொருளாதாரத்தை ஈட்டும் செயல்பாடுகளில் பெண்கள் தொடக் கத்தில் இருந்தே இறக்கிவிடப்பட்டார்கள். வேளாண்மை செய்வது, கால்நடைகளைப் பராமரித்துப் பால் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பது எனப் பெண்களின் சந்தைப் பொருளாதாரச் செயல்பாடுகள் சங்க காலத்திலேயே தொடங்கிவிட்டன. ஆனால், சம ஊதியம், சம வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்குப் பெண்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் குடும்பக் கடமைகளுக்கு மதிப்பளிப்பதுடன் பெண் - ஆண் எனும் பேதமின்றி வீட்டு வேலைகளைச் செய்வதுதான் அவற்றுக்கான அங்கீகாரம். இந்த அங்கீகாரம் சக பெண்களிடமிருந்தும் பெண்களுக்குக் கிடைக்க வேண்டும். பெண்களின் குடும்பக் கடமைகளைக் குறைத்து மதிப்பிடுவதும் அவற்றை அலட்சியப் படுத்துவதும் சமூகத்தை எக்காலத்திலும் சமநிலைக்கு இட்டுச் செல்லாது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in