பாலையில் படரும் பசுஞ்சொற்கள் - 2: பொருளுக்கு மேலே பறக்கும் சொற்கள்

பாலையில் படரும் பசுஞ்சொற்கள் - 2: பொருளுக்கு மேலே பறக்கும் சொற்கள்
Updated on
3 min read

தமிழ் நவீனக் கவிதை இரு வேறு இயக்கங்களாக முன்னெடுக்கப்பட்டது. ‘எழுத்து’, ‘வானம்பாடி’ ஆகிய இரு இதழ்கள் வழி இந்த இயக்கம் நடைபெற்றது. இன்றும் நவீனக் கவிதையை வரையறுக்கும்போது இந்த மரபுத் தொடர்ச்சியைப் பார்க்க முடியும். புவியரசு, மு.மேத்தா, நா.காமராசன், இன்குலாப் என வானம்பாடி மரபின் தொடர்ச்சியைப் போல் சி.சு.செல்லப்பா, பசுவய்யா, நகுலன், பிரமிள், தேவதச்சன் என எழுத்து மரபும் இன்றும் தொடர்ந்துவருகிறது. இந்த வரிசையில் கவிஞர் பொன்முகலியை எழுத்து மரபின் கண்ணி என வரையறுக்கலாம்.

தொண்ணூறுகளுக்குப் பிறகு எழுதவந்த பெண் கவிஞர்கள் பலரும் உரத்துச் சொன்ன உடலரசியல் இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதவந்த முகலியிடமும் இருக்கிறது. அதைச் சொல்ல எண்பதுகளின் இறுதியில் எழுதிய சுகந்தி சுப்பிரமணியனின் தணிவை, முகலி தன் கவிதைகளில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், சுகந்தியின் அந்தக் கவிதைகள் பெண் என்கிற இருப்பைத் திடமாக வெளிப் படுத்துபவை. முகலியின் கவிதைகள் அந்த எல்லையைச் சாதாரணமாகத் தாண்டும் இயல்பைக் கொண்டவை. இதுவே இவரது விசேஷமான அம்சம். பெண்ணுக்கு எதிராகக் குற்றங்கள், சுற்றுச்சூழலைப் போல் மோசமடைந்துவரும் காலகட்டத்தைப் பற்றிய இவரது கவிதை ஒன்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். மண்சட்டி சுமந்தாலும், விண்கலம் சென்றாலும் பெண், பெண்தான் எனப் பெண்ணின் உடலை முன்வைத்து இந்தக் கவிதை பேசுகிறது: ‘அவள் உயிர் ஒரு சிலுவையைப் போல்/ அவள் உடலில் அறையப்பட்டு இருக்கிறது/...புனிதம் ஒரு வன்முறையைப் போல்/கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிற தேசத்தில்/ஒரு பெண்/எப்போதும் பெண்ணாகவேதான் இருக்கிறாள்’.

முகலியின் கவிதைகள், பெரும் பாலும் தன்னிலையில் எழுதப்பட்ட தோற்றத்தைத் தருபவை; ‘நான்’ என்கிற நிலையில் ‘நீ’ என்று ஓர் ஆணைச் சுட்டி உரைப்பவையாக வெளிப்படும் தன்மை கொண்டவை. ஆனால், இந்த ‘நானி’லும் பெண் என்கிற இருப்பை மட்டும் முகலியின் கவிதைகள் சொல்லவில்லை. இந்த ‘நானு’க்குள் ஆணும் உண்டு; பெண்ணும் உண்டு. ஆண்-பெண் உறவு நிலையில் உள்ள முரண்களை, அன்பின் மூர்க்கத்தை, சரணடைதலை இந்தக் கவிதைகளில் பார்க்க முடிகிறது. ‘வியர்வை ஆறு/வியர்வைக் கடல்/மிதக்கிற பரமானந்த சடலங்கள்’ எனக் காதலின் உன்மத்தத்தைச் சொல்லும் இவரது கவிதைகள், ‘அன்பு எப்போதும்/நுனி மரத்தில் அமர்ந்தே/அடி மரத்தை வெட்டுகிறது’ என அதன் வேதனையையும் சொல்கின்றன. ஆனால், இதை வேதனை என எடுத்துக் கொள்ள முடியாதுதான். காதலை அதன் அத்தனை பலவீனங்களுடன் இந்தக் கவிதைகள் வழி முகலி கொண்டாடி உள் ளார். அதைப் புனிதப்படுத்த வில்லை. காதலின் திருப்பங்களை உணர்ந்தே தன் கவிதைகளைப் பத்திச் செல்கிறார் அவர்.

அன்பு, குற்றவுணர்வு, உண்மை, பொய், நனவு, கனவு இவை எல்லாம் முகலியின் கவிதையுலகுக்குள் அதன் கூறப்பட்ட அர்த்தத்தைத் தாண்டிப் பறக்கின்றன. ‘அன்பும் குற்றவுணர்ச்சியின்/சுண்டிவிடப்பட்ட நாணயத்தைப் போல்/மிக வேகமாகக் கீழே விழுந்துகொண்டிருக்கிறபோது/அன்பின்மை/ஒரு சருகைப் போல/லகுவாக மேலெழும்பிப் பறக்கிறது’ என்கிறது ஒரு கவிதை. ‘கனவு ஒரு சத்தியம்/நனவு ஒரு சத்தியம்/இம்மை உலகிற்கு/இரு கரைகள்’ என்கிறது மற்றொரு கவிதை.

வாழ்க்கை, இருப்பு ஆகியவற்றின் நம்பிக்கையின்மையை இவரது கவிதைகளில் தொடர்ந்து காண முடிகிறது. வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்க நமது குடும்ப அமைப்பு உருவாக்கிப் பேணிக் காக்கும் விழுமியங்களை முகலியின் கவிதைகள் எள்ளல் செய்ய விரும்புகின்றன. இதை மலை உச்சியிலிருந்து நதி தரையிறங்கு வதைப் போன்ற தேய்வழக்கு என உருவகப்படுத்துகிறார் முகலி. வாழ்க்கையின் அபத்தங்களை அதன் ஒரு பாகமாக இருந்துகொண்டே கிண்டல் செய்கிறார். அப்படித்தான் ‘மழைக்காலங்களில் இவரால் மன்னிக்கப்படுவர்கள் குளிர் காலங் களில் போர்வை ஆகின்றனர்’. நினைவுகள் இந்தக் கவிதைகளில் அதிகமாகத் தொழிற்பட்டிருக்கும் சொல். நினைவுகள் இல்லை யென்றால் இருப்பே இல்லை என ஒரு கவிதையில் சொல்கிறார். இருத்தலுக்கான காரணங்கள் இல்லையென்று ஒரு கவிதை கூறு கிறது. இந்த நினைவுகளை யெல்லாம் விட்டுவிட்டு அது நிகழ்வதற்கு முந்தைய கணத்திற்குச் செல்லவும் சில கவிதைகள் எத்தனிக்கின்றன.

இந்தக் கவிதைகளுக்குள் முகலி தன்னைத் திடகாத்திரமாக வெளிப்படுத்துகிறார். ‘எனது கவிதைகளில் வசீகரங்கள் குறைவிருக்கலாம்/...அதன் பின் நேர்மையிருக்கிறது / எந்த மனிதனையும் விட்டுவைக்காத பாவத்தின்/கறையைப் போல’ என ஒரு கவிதையில் அவரே சொல்வதுபோல் இந்தக் கவிதையில் வெளிப்படும் மூர்க்கமான உண்மை, பாசாங்கான வாழ்க்கையைக் கேலிக்குள்ளாக்குகிறது. கவிஞரின் ஆளுமை இருப்பை, ‘சிறிய மஞ்சள் பந்தொன்று...’ கவிதையில் உணர முடிகிறது. அந்தப் பந்து ‘என்னோடு காலத்தின் சில மணித்துளிகள் வீற்றிருக்கிறது’ எனச் சொல்கிறார். ஓர் அஃறிணை மீது உண்டாகும் சிநேகம், தமிழ்க் கவிதைக்குப் புதிதல்ல. ஆனால், முகலி இந்தக் கவிதையை அந்தப் பொருளுக்குச் சற்று மேலே பறக்கவைக்கிறார். ‘முடிவிலி என்பது/காலத்தை மழுங்கடிக்கும்/ஒரு மஞ்சள் பந்தின் சிரிப்பு’ என்கிறார்.

முகலி கவிதைகளுக்காகக் கைக்கொண்டிருக்கும் கவிதை வடிவம், காற்றைப் போல் சுதந்திரமாகப் பயணிக்கிறது. சில கவிதைகளில் சில வாசகர்கள் கவிதைக்கான அம்சத்தைக் கண்டடையாமல் போகலாம். ஆனால், முகலியின் கவிதைகளுக்கு அதைப் பற்றிய சிரத்தை இல்லை. அவை தன்னளவில் சத்தியமாக, சுதந்திரமாகப் பறத்தலைத் தொடர்கின்றன. கவிதை உணர்வை வெளிப்படுத்த அவர் உருவாக்கும் உருவகம், அசாதாரணமும் நெருப்பி லிட்ட வெள்ளியைப் போன்ற பளபளப்பும் கொண்டது. ஒரு துக்கம் ‘காற்றின் ஸ்பரிசம் படாத நீர்க்குமிழிபோல் இருக்கிறது’ என்கிற கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். பெரும் அதிர்ச்சிக்கு உரிய விஷயங்களையும் மிக லகுவான சொற்களால் சொல்லவே முகலி விரும்பியிருக்கிறார். அவரது கவிதைப் பரப்பில் ஓர் ஆழ்ந்த மெளனத்தை ஊன்றி வாசிப்பவர்கள் உணர முடியும். தீண்டப்படாத ஒரு நீர் நிலையின் பளபளக்கும் குளுமையும் மெளனமும்தான் பொன்முகலியின் மொத்த கவிதைகளை வாசித்ததும் ஒரு தனி உலகமாக நம் முன் விரிகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in