

524ஆவது தடவையாகக் கடலுக்குள் குதித்தார் அமெரிக்காவைச் சேர்ந்த ஹெய்டி எர்னஸ்ட். 74 வயதில் ஸ்கூபா டைவிங் செய்துவிட்டுக் கடைசியாகப் படகில் உள்ள ஏணியில் ஏறியவர், பாதுகாப்புக் கவசங்களைக் கழற்றினார். மீண்டும் கடலுக்குள் குதித்து ஒரு சுற்று நீந்திவிட்டு ஏணியில் வலது காலை வைத்தார். இடது காலை அவரால் தூக்க இயலவில்லை. மிகவும் கஷ்டப்பட்டுக் காலைத் தூக்கியபோது ஒரு சுறாவின் பற்களுக்கு இடையே அவரது கால் இருந்தது. இடது கையால் அதன் தலையில் ஓங்கி அடித்தார். ஆனாலும் அது தன் பிடியை விடவில்லை. பயிற்சியாளர் சுறாவின் வாயிலிருந்து ஹெய்டியின் காலை விடுவித்தார்.
“என்னை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள். ரத்தம் அதிகமாக வெளியேறுகிறது. சாகவிட்டு விடாதீர்கள்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே மயக்கத்துக்குச் சென்றுவிட்டார் ஹெய்டி.
படகு கரையை அடைந்தபோது ஆம்புலன்ஸ் காத்துக்கொண்டிருந்தது. மருத்துவமனையில் கண்விழித்த போது, கடிபட்ட கால் கருத்துப் போயிருந்ததைக் கண்டார் ஹெய்டி. முட்டிக்குக் கீழ் காலை நீக்க வேண்டும் என்றார்கள் மருத்துவர்கள். மருத்துவரான ஹெய்டிக்கு, தான் வாழ வேண்டுமென்றால் ஒரு காலை இழக்க வேண்டும் என்பது புரிந்தது. அறுவைசிகிச்சையும் நடைபெற்றது.
ஒரு கையை இழந்த பெண் ஒருவர் ஹெய்டியிடம் வந்து, தான் கையிழந்த கதையையும் மீண்டு வந்த கதையையும் கூறி, நம்பிக்கையளித்தார்.
‘ஒரு காலை இழந்ததால் ஒரு வேலையை என்னால் செய்ய முடியவில்லை’ என்கிற நிலை மட்டும் தனக்கு வந்துவிடக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தார் ஹெய்டி.
103 நாள்களுக்குப் பிறகு, செயற்கைக் கால் உதவியோடு இரண்டு கால்களால் நின்றபோது ஹெய்டியின் நம்பிக்கை பலமடங்கு அதிகரித்தது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் செய்துவந்த வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார் ஹெய்டி. கஷ்டமாக இருந்தாலும் செய்ய முடியாமல் போகவில்லை என்பதில் மகிழ்ந்தார்.
“என் கணவருக்கு ஸ்ட்ரோக் வந்தது. அவரைக் காப்பாற்றி, நம்பிக்கையளித்த பிறகு ஒன்பது ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். அவரைத்தான் நான் நினைத்துக்கொண்டேன். இருக்கும்வரை பிடித்ததைச் செய்துகொண்டு, ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும். அதனால் ஆரோக்கியத்தில் முன்பைவிட அதிக அக்கறை எடுத்துக்கொண்டேன். ஏனென்றால், மரணத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பிய எனக்குத்தான் உயிரோடு இருப்பதன் அர்த்தம் புரியும்.”
வெகு விரைவிலேயே வேலைகளை மட்டுமல்ல, விருப்பமான விஷயங்களையும் செய்ய ஆரம்பித்தார் ஹெய்டி. ஒரு மருத்துவராக அவருக்குக் காயங்களைக் கண்டு எப்போதும் பயம் இருந்ததில்லை. ஆனால், ஒரு மாற்றுத்திறனாளியாக இருக்கும் கஷ்டம் அவருக்கு இப்போதுதான் முழுமையாகப் புரிந்தது. மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளையும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளையும் குறித்துப் பேச ஆரம்பித்தார்.
ஒருநாள் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ‘விபத்துக்கு முன்னால் செய்துகொண்டிருந்த அத்தனை வேலைகளையும் செய்துவிட்டாய்’ என்று பாராட்டினார்கள். ‘இல்லை, நான் ஸ்கூபா டைவிங்கை இன்னும் ஆரம்பிக்கவில்லை’ என்றார் ஹெய்டி. ‘இந்த வயதில் ஸ்கூபா டைவிங் மட்டும் செய்ய வேண்டாம், இன்னொரு விபத்தைச் சந்திக்க உன்னால் முடியாது’ என்றார்கள் நண்பர்கள்.
அவருக்குமே சுறா கடித்த சம்பவத்தை நினைக்கும்போதெல்லாம் பயத்தில் உடல் சிலிர்த்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால், பயந்து கொண்டே இருந்தால் அந்தத் துயரத்திலிருந்து முழுவதுமாக வெளிவர இயலாது. பயத்தை எதிர்கொள்வதுதான் பயத்திலிருந்து வெளிவருவதற்கு ஒரே வழி என்று முடிவெடுத்தார். பயிற்சியாளரை அழைத்தார். அவரும் தயங்கினார்.
“நான் கடலுக்கு அடியில்தான் மிக மிக அற்புதமான உலகத்தைக் கண்டேன். பல வகையான உயிரினங்களை மிக அருகில் பார்க்கும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்? சுவாசக் கருவியிலிருந்து வைரக்கற்களைப் போல் காற்றுக் குமிழிகள் பறப்பதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சுறாக்கள் மனித வேட்டையில் ஈடுபடுவதில்லை. மக்கள்தான் கடலில் இருக்கும் சுறாக்களுக்கு உணவு அளித்து, அவற்றின் நடத்தையை மாற்றுகின்றனர். 11 ஆண்டுகளாக நான் ஸ்கூபா டைவிங் செய்துகொண்டுதான் இருக்கிறேன். அதுவும் சுறாக்கள் புழங்கும் பகுதிகளில். இந்த முறைதான் உணவு என்று நினைத்து என் காலைக் கவ்விவிட்டது. மற்றபடி சுறாக்களின் மீது தவறில்லை. அவற்றின் மீது எனக்குக் கோபமும் இல்லை” என்று ஹெய்டி சொன்ன பிறகு, பயிற்சியாளரும் சம்மதித்தார்.
இரண்டு கால்களிலும் சுறா டாட்டூவைப் போட்டுக்கொண்டார். உடற்பயிற்சியை மேற்கொண்டார். ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பஹாமஸ் கடல் பகுதியில் சுறாக்களுக்கு மத்தியில் ஸ்கூபா டைவிங் செய்தார்.
‘உங்களுக்குப் பயமாக இல்லையா?’ என்று எல்லாரும் கேட்டனர். “என் கணவர் தீயணைப்பு வீரராகப் பணியாற்றியவர். தீ விபத்து நடக்கும் இடத்தில் அச்சமின்றிச் செல்வார். ஆனால், அவருக்குள் பயம் இருக்கும் என்பார். அதேபோலதான் எனக்கும் சுறாக்களைக் கண்டு அச்சமில்லை, ஆனால் பயம் உண்டு. அந்தப் பயம்தான் நம்மை மேலும் கவனமாக இருக்க வைக்கிறது. என் வாழ்க்கையில் துன்பம் நிகழ்ந்துவிட்டதே என்று நான் இடிந்து உட்கார்ந்திருந்தால், இப்போது சக்கர நாற்காலியில்தான் என் வாழ்க்கை இருந்திருக்கும். அந்தத் துன்பத்தைத் தாண்டிவர நினைத்ததால்தான் இன்று மற்றவர்களைப் போல மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்” என்கிறார் ஹெய்டி.
எனக்கும் சுறாக்களைக் கண்டு அச்சமில்லை, ஆனால் பயம் உண்டு. அந்தப் பயம்தான் நம்மை மேலும் கவனமாக இருக்க வைக்கிறது.