

நான்கு பெண்கள் சந்தித்தால் என்ன நடக்கும்? ஊர்க் கதை, உறவுக் கதை என்று அரட்டைக் கச்சேரி களைகட்டும். சமையல் சங்கதிகளைச் சிலாகிப்பார்கள். மெகாத்தொடர் கதாபாத்திரங்களை அலசி ஆராய்வார்கள். பொதுவாக இந்த மூன்றில் ஒன்றைத்தான் முதல் பதிலாக எதிர்பார்க்கலாம். ஆனால், மதுரை சிம்மக்கல்லைச் சேர்ந்த நான்கு பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை அவர்களுக்கிடையேயான ஒற்றுமைதான் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
வினோதா, சங்கீதா, அபிநயா இவர்கள் மூவரும் சகோதரிகள். இவர்களுடன் வினோதாவின் தோழி சிவசங்கரியும் கைகோக்க, இந்தப் புரிந்துகொள்ளுதலில் மலர்ந்ததுதான் ‘அபூர்வாஸ்’. மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கள் அபூர்வாஸ் நிறுவனம் சார்பில் திருமணத்துக்குத் தேவையான ஆரத்தித் தட்டுகள், மரபாச்சி பொம்மை அலங்காரம், ரங்கோலி ஆகியவற்றைச் செய்து தருவது இவர்களின் வேலை.
ரசனையான ரங்கோலி
வினோதாவின் விரல்கள் பதினான்கு வயதில் இருந்தே ரங்கோலி வரையத் தொடங்கிவிட்டன. இருபது வருட அனுபவம், அவருக்குப் பார்த்ததை எல்லாம் வண்ணக் கோலாமாக்கிவிடும் திறமையைத் தந்திருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு தன் சகோதரிகளுடனும், தோழியுடனும் இணைந்து கைவினைக் கலையை வர்த்தக ரீதியில் செயல்படுத்தியவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் தங்கள் நிறுவனத்துக்குப் பெயர்சூட்டு விழா நடத்தியிருக்கிறார்.
“எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் ஒரு முறை தங்கள் வீட்டுத் திருமணத்துக்கு வரைகிற ரங்கோலியில் மணமக்கள் உருவத்தை வரையச் சொன்னார். அது அனைவரும் செய்வதுதான். அதற்குப் பதில் கண்ணன், ராதை உருவத்தை வரையலாமே என்று சொன்னேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். பொதுவாக கலர் பொடிகளைத்தான் ரங்கோலிக்குப் பயன்படுத்துவார்கள். நாங்களோ கற்கள், மணிகளை வைத்து கண்ணனையும் ராதையையும் அழகாக அலங்கரித்தோம். அவர்களுக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. இப்போது அவர்கள் உறவினர் வீட்டு சுப நிகழ்வுகளுக்கும் நாங்கள்தான் ஆரத்தித் தட்டு முதல் பரிசுப் பொருட்கள் வரை அனைத்தும் செய்து தருகிறோம்” என்று சொல்லும் வினோதா, வெளியூர்களில் இருந்து வருகிற ஆர்டர்களைத் தற்போது தவிர்த்து விடுவதாகச் சொல்கிறார்.
“குழந்தைகளை இங்கே விட்டுவிட்டு வெளியூர் செல்லத் தயக்கமாக இருக்கிறது. கூடிய விரைவில் அதற்கும் மாற்று ஏற்பாடு செய்துவிட்டு எங்கள் எல்லைகளை விரிவாக்குவோம்” என்கிறார் நம்பிக்கையோடு.
படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி