புதிய தொடர் | பாலையில் படரும் பசுஞ்சொற்கள் - 1: சங்கடங்களின் வண்ணம் மாற்றும் கவிதைகள்

புதிய தொடர் | பாலையில் படரும் பசுஞ்சொற்கள் - 1: சங்கடங்களின் வண்ணம் மாற்றும் கவிதைகள்
Updated on
3 min read

பெண்களின் உலகம் தமிழ் இலக்கியத்தில் திருத்தமாக வெளிப்பட்டதில்லை. அந்த உலகம் குறித்த பொதுக் கற்பிதமாகத்தான் ஆண்களும் சில பெண்களும் இந்த உலகம் பற்றி எழுதியிருக்கிறார்கள். பிற்காலக் கதைகள், பெண்களின் பிரத்யேகமான மனதைப் பதிவுசெய்தன. ஆனால், தொடக்கக் காலத் தமிழ் நவீன கவிதையில் பெண்களின் உலகம் காட்டப்படவே இல்லை.

90களுக்குப் பிறகுதான் தமிழ் நவீன கவிதையில் பெண்களின் உலகம் ஒரு புரட்சியாக ஒலிக்கத் தொடங்கியது. இந்த வரிசையில் பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட ஒழுக்கங்களை, அதனாலான மனக் குழப்பங்களைப் பெண் கவிஞர்கள் சிலர், கோபப்படுவதற்குப் பதிலாகக் கேலி செய்தனர். அவர்களில் ஒருவர் கவிஞர் எஸ்.சுதந்திரவல்லி.

சுதந்திரவல்லியின் கவிதைகள், 90களுக்குப் பிறகு தமிழ்க் கவிதையில் நிகழ்ந்த மாற்றத்தின் தொடர்ச்சி என வரையறுத்துப் பார்க்கலாம். ஆனால், தன்னளவில் சுதந்திரவல்லியின் கவிதைக்கு அந்த நினைப்பெல்லாம் இல்லை. அவை வெகு இயல்பாகப் பக்கத்துப் பெண்ணுடன் ‘பழக்கம் பேசும்’ தன்மையைக் கொண் டுள்ளது. பெண் என்கிற நிலையில் தனக்குள் இறக்கப்பட எல்லா விழுமியங்களையும் இந்தக் கவிதைகள் வாங்கிக்கொள்கின்றன. ஆனால், அது தனக்குத் தெரிந்துதான் நடக்கிறது என்பதையும் சொல்கின்றன. அதைப் புலம்பலாகவோ புரட்சியாகவோ அல்லாமல் கேலியாகப் பதிவுசெய்கின்றன. இது சுதந்திரவல்லியின் விசேஷமான பண்பு. பெண்ணின் அன்றாடம் என்கிற விதத்தில் இந்தக் கவிதைகள் பச்சையான யதார்த்தத்தில் இருக்கின்றன.

தோசை, தேநீர், குழந்தைகள், பக்கத்து வீடு, தோழிகளின் வருகை, முழுமையற்ற திடீர்ப் புணர்ச்சி என ஒரு அன்றாடம் பலவாறு இந்தக் கவிதைகளில் தொழிற்பட்டுள்ளது. நிகழ்ந்து முடிந்த இந்த அன்றாடத்தின் சங்கடங்களுக்குத் தன் கவிதைகள் மூலம் வேறு வண்ணம் கொடுக்க முயல்கிறார் சுதந்திரவல்லி. தேநீர்க் கொதிப்புக்கும் கிரைண்டரில் இட்லி மாவு ஓட்டத்துக்கும் இடையில் பசியுடன் ஒரு புலி வருகிறது. மானைக் கவ்வுகிறது. இரு நிமிடங்கள்தான்; அங்கு புலியும் இல்லை; மானும் இல்லை; அவற்றின் அடையாளங்களும் இல்லை; மிஞ்சியது கொதிக்கும் தேநீர் மட்டும்தான் என்கிறது அவரது ஒரு கவிதை. இது ஒரு முழுமையின்மை. அதுவே துக்கமானதுதான். ஆனால், இந்தக் கவிதையில் அது கேலியாக, நகைச்சுவையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அனுபவத்தில் உள்ள தேநீருக்கும் இட்லி மாவுக்கும் புலிக்கும்கூட இது சிரிப்புக்கு உரிய ஒன்றாக மாறலாம். இறந்த காலத்தின் சங்கடம் ஒன்றின் வண்ணத்தைக் கவிதை தன் மாயத்தால் மாற்றியிருக்கிறது. இந்த அம்சம் இவரது கவிதைகளின் பொதுப் பண்பாகப் பார்க்கலாம்.

அழைக்காமலே வீட்டுக்கு வரும் தோழியரைப் பற்றிப் பல கவிதைகள் பேசுகின்றன. பூட்டப்பட்ட வீட்டைத் தட்டி ‘நாராயணி… நாராயணி...’ என அழைக்கிறது ‘வானம் கீறிய குரல்’ கவிதை. நாராயணி பதிலே சொல்லவில்லை. அழைப்பதும் நின்றபாடில்லை. குளியலறையிலிருந்து வந்த நாராயணியின் குரல் வானத்தைக் கீறியதாகக் கவிதை சொல்கிறது. தேவதச்சனும் கல்யாண்ஜியும் இதே பொருள் கொண்ட கவிதையை ஆண்கள் பக்கம் நின்று எழுதிப் பார்த்திருக்கிறார்கள். இன்னொரு கவிதையில் சுதந்திரவல்லி, கால விநோதத்துடன் தன் தோழியையும் கவிதைக்குள் சுவீகரித்துள்ளார்: ‘வேகமாகச் சென்ற இரு சக்கர வாகனத்தில் அவள்/ கணவனோடு/எதிர்த் திசையில் அம்மாவும் நானும் நடந்தபடி/அவளது பார்வையும் எனது பார்வையும் சந்தித்துக் கடக்க/நாங்கள் திரும்பிப் பார்க்கவுமில்லை/கூப்பிடவுமில்லை/கடந்த காலத்தை எப்படிக் கூப்பிடுவது?’. நுட்பமும் கவித்துவமும் கொண்ட கவிதை இது. தோழியை அழைத்துப் பேசினாலும் கடந்து சென்றுவிட்ட அந்தக் காலத்தை நம்மால் அழைக்கவே முடியாது. பெண்களின் நட்பு திருமணத்துக்குப் பிறகு தன் இயல்பைத் தொலைத்துவிடுவதையும் இந்தக் கவிதை பேசுகிறது. பெண்கள், பருவந்தோறும் மாறுவதையும் சுதந்திரவல்லி தன் கவிதைகளின் வழி சொல்கிறார். பருவம் எய்தியதும் ஒரு சிறு பெண் சூடிக்கொள்ளும் பாவனையைப் பற்றிப் பேசுகிறது ஒரு கவிதை. முந்தைய நாள் இரவு அந்தச் சிறுமிக்கு அப்படியான முகமே இருந்திருக்காது.

ஆண்-பெண் உறவு முரண்கள் குறித்துப் பல கவிதைகள் கேலி பேசுகின்றன. ஆணுக்கும் பெண் ணுக்குமான வரையறுத்துப் பார்க்கவே முடியாத காதலை, அதுவும் திருமண பந்தத்துக்குள் இருப்பவர்களின் காதலை சுந்தந்திரவல்லியின் கவிதைகள் மதிப்பிட முயல்கின்றன. இதை அவரது கவிதைகள் தீவிரத்துடன் செய்யவில்லை; வீடு போய்ச் சேராத குழந்தைகளின் வெள்ளாமையைப் போல் தெரிந்தே தவறவிடுகின்றன. பெண்களையே கிண்டல் செய்யும் குறும்புத்தனங்களும் இந்த வகைக் கவிதைகளில் உண்டு. ‘என்ன வெண்ணையோ’ என்கிற கவிதையில் ‘என்னைய எதுத்துப் பேசுவியா? (என்ன வெண்ணையோ)… என்றதொரு அதிகாரக் குரல். வேலைக்குப் போய்விடு என்று அவசரப்படுத்தியது ஒரு குரல்/பெண்ணின் கண்களைப் பார்த்தேன்/தீ பிழம்பாய் ஜூவாலையாய் கக்கிக் கனன்றது /தோசை கருகிய வாசம்’ எனச் சொல்கிறார் சுதந்திரவல்லி. பெண்ணின் கோபத்துடன் தோசை கருகும் வாசத்தை இணைக்கிறார். இந்த இடத்தில் தான் புரட்சியையும் அன்றாடத்தையும் இணைத்துத் தன் கேலிக் கவிதையை நடுத்தர வர்க்கப் பெண்கள் எம்ப்ராய்டரி போடுவது போல் பின்னுகிறார்.

கவிதைக்கெனப் பிரத்யேகமான கவித்துவ மொழியெல்லாம் சுதந்திரவல்லி கைகொள்ள விரும்பவில்லை. அவரது கவிதையில் இருக்கும் கிண்டலும் கேலியு மான தன்மைக்குப் புழங்குமொழியின் தீவிரத்தை அவர் நுட்பமாகப் பயன் படுத்தியிருக்கிறார். வடிவேலுவின் புகழ்பெற்ற காமெடி வசனத்துக்குக் கூடக் கவிதையில் இடம் கொடுத்திருக்கிறார். புளித்த பதநீரைக் கொஞ்சம், கொஞ்சமாகப் பருகி இன்புறுகிறார் அம்மா. மகள் ‘ஏதாவது ஆகப் போகிறது’ என்கிறார். ‘ஆனால்தான் என்ன?’ எனக் கேட்கிறது ஒரு கவிதை. இந்த மனநிலையின் வெளிப்பாடாகத்தான் சுதந்திரவல்லியின் கவிதை மொழி இருக்கிறது. அது காற்றைப் போல் சுதந்திரத்துடன் வெளிப்பட்டுள்ளது. அதே சமயம் நிலம் பற்றிய விவரிப்புகளில் கவிதை மொழியை மாற்றிப் பார்க்கிறார் சுதந்திரவல்லி. இணையம், சாட்டிங், பிரேக்கிங் நியூஸ், ஃபிரிட்ஜ் என நவீன மாற்றங்கள் இந்தக் கவிதைகளுக்குள் வருகின்றன. அவையும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளன. ஃபிரிட்ஜ், சவப்பெட்டி என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது.

காலங்காலமாகப் பெண்களுக்குப் போதிக்கப் பட்டுவந்த ஒழுக்கங்களை இன்றைய பெண்கள் மறுபரிசீலனை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நவீன காலப் பெண் மனதின் வெளிப்பாடு என இந்தக் கவிதைகளைச் சொல்லலாம். இந்தக் கவிதைகள் நம் குடும்ப அமைப்பின் சுமைகளை உதற நினைப்பவை. ஆனால், அமைப்பின் ஒரு பாதிப்பாக இருப்பதை உரத்த குரலில் சொல்லாமல் சுதந்திரவல்லியின் கவிதைகள் கேலியாகப் பேசுகின்றன. இந்தத் தனித்துவமான அம்சம், சுதந்திரவல்லியின் கவிதைகளை விசேஷமானதாக மாற்றுகின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in