

காசா குழந்தைகளின் மனநலன், கல்வி, மருத்துவம் தொடர்பான அத்தியாவசியமான தேவைகளுக்கு உதவும் இசை நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. ஆடைகள், கீசெயின் எனப் பலவிதமான பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் கைகளைப் பின்பக்கமாகக் கட்டியபடி ஒரு சிறுவனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அந்தப் பொருள்களை வாங்குவதன்மூலம் போரில் பாதிக்கப்பட்ட காசா குழந்தைகளுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்த நிகழ்வைச் சுயாதீன இசைக் கலைஞர்களுடன் சிந்துஜா சங்கரன் ஒருங்கிணைத்தார்.
சாய் பல்கலைக்கழகத்தில் உளவியல் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிபவர் சிந்துஜா சங்கரன். 2018இல் போலந்தில் நிறுவப்பட்டு, இப்போது இந்தியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ள ’ரீதிங்கிங் ரெஃப்யூஜிஸ்’ என்னும் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் இவர்.
காடிஃப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வை முடித்து, 2021 வரை போலந்தில் வசித்தார். சமீபத்தில்தான் இந்தியா திரும்பினார். அகதிகள் நலன் சார்ந்த செயல்பாட்டுக்கான இவரது பயணம், கிரேக்கத்தில் உள்ள அகதிகள் முகாமில் தன்னார்வத் தொண்டு செய்தபோது தொடங்கியது.
அகதிகள் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தினரின் முன்னேற்றத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு போலந்தில் தொடங்கப்பட்ட அமைப்பு, கரோனா காலத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கியது. அகதிகள் நிலை குறித்த பயிற்சிப் பட்டறைகள், குழு விவாதம், இசை நிகழ்ச்சிகள், அகதிகளோடு சமையல் என 20க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இந்த அமைப்பின் மூலம் நடத்தப்படுகின்றன. அகதிகள் தங்களது துயரக் கதைகளைப் பகிர்ந்துகொள்ள ஒரு தளத்தை வழங்குகிறது. அவர்களுக்கான இணையவழி மனநல ஆலோசனைகளையும் வழங்கிவருகிறது.
“காசாவில் 2023 அக்டோபர் முதல் ஏற்பட்ட இறப்புகளில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள். மனிதாபிமானமற்ற நெருக்கடி நம் கண்ணெதிரில் ஒரு சமூகத்துக்கு ஏற்படும்போது, செயலற்ற பார்வையாளர்களாக நாம் இருக்கக் கூடாது. உலக சமூகத்தின் ஆதரவு அவர்களுக்குத் தேவை. காசாவில் குழந்தைகள் உயிர் வாழ்வதற்கான அத்தியாவசியத் தேவைகளைக் கொடுப்பதற்கு இசை நிகழ்ச்சிகள் வழியாகவும், தன்னார்வலர்கள் கைவண்ணத்தில் தயாரான ஆடைகளை விற்பனை செய்தும் நிதி திரட்டுகிறோம். இதன் மூலம் பொது மக்களை இந்தச் சமூகப் பணியில் ஈடுபடுத்துகிறோம். போரின் அவலத்தை எடுத்துக் கூறுகிறோம்.
பாலஸ்தீன மக்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டுவதற்கு உறுதியுடன் இருக்கும் சுயாதீனக் கலைஞர்களைக் கொண்டு, இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றோம். எல்லைகளையும் மொழித் தடைகளையும் கடந்தது என்பதால், இக்கட்டான காலங்களில் மக்களை ஒன்றிணைக்க இசையைத் தேர்ந்தெடுத்தோம்” என்கிறார் சிந்துஜா.
போரின் அடையாளமான ஹண்டாலா
தன்னார்வலர்கள் உருவாக்கும் ஆடைகளில் ஹண்டாலா எனும் பத்து வயதுச் சிறுவனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பிரதிநிதியாக ஹண்டாலா எனும் சிறுவனின் உருவத்தை உருவாக்கியவர் நஜி அல் அலி. போரால் பாதிக்கப்பட்ட மக்களின், குழந்தைகளின் குறியீடு இந்தச் சிறுவன்.
“‘ஹண்டாலாவுக்கு எப்போதும் பத்து வயதுதான். நான் என் தாயகத்தை விட்டு வெளியேறும்போது, அதுதான் என் வயது. நான் மீண்டும் தாயகம் திரும்பும்வரை, அங்கே இயல்பான வாழ்க்கைச் சூழல் உண்டாகும்வரை அந்த வயதிலேயே ஹண்டாலா இருப்பான்” என்கிறார் அதை உருவாக்கிய நஜி அல் அலி.
பாலஸ்தீன மக்கள் போராட்டத்தின் சக்தி வாய்ந்த அடையாளமாக இன்றைக்கு ஹண்டாலா உருப்பெற்றுள்ளான். நாங்கள் திரட்டும் நிதி, பாலஸ்தீனியர்களுக்கான மருத்துவ உதவி அமைப்புக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் காசாவில் உள்ள குழந்தைகளின் மருத்துவம், கல்வி மற்றும் உளவியல் சார்ந்த மறுவாழ்வுக்காக இந்த நிதியைப் பயன்படுத்துவார்கள்” என்கிறார் சிந்துஜா.