

எழுத்துலகில் செயல்படும் ஆண்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட, பெண்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளும் அங்கீகாரமும் குறைவு. எனினும், காலந்தோறும் பெண்கள், பல்வேறு தடைகளைத் தாண்டி எழுதிவருகிறார்கள். 1960களின் இறுதியில் தனக்கென ஒரு வாசகப் பரப்பை உருவாக்கிவைத்திருந்த ஜோதிர்லதா கிரிஜா, சராசரி குடும்பக் கதைகளின் வாயிலாக முற்போக்குக் கருத்துகளைச் சொல்ல முனைந்தவர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவைச் சொந்த ஊராகக் கொண்ட ஜோதிர்லதா கிரிஜா, 27 மே 1935 அன்று பிறந்தவர். பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்ற இவர், பள்ளியில் படித்தபோதே சிறார் எழுத்தாளராக அறிமுகமானார். இவர் எழுதிய முதல் சிறார் கதை 1950ஆம் ஆண்டில் ‘ஜிங்லி’ என்கிற பத்திரிகையில் ரா.கி.ரங்கராஜனால் வெளியிடப்பட்டது.
சிறார் எழுத்தாளராக அறிமுகமாகிப் பின்னர் தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி. முதலான எழுத்தாளர்களால் ஊக்குவிக்கப்பட்டார். சிறார் இலக்கியத்தில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுவந்தார். ஒருமுறை எழுத்தாளர் தமிழ்வாணன் இவரிடம், “நீங்கள் பெரியவர்களுக்கான சிறுகதைகளை எழுதலாமே” எனக்கூற, சமூகச் சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். இப்படியாக இவர் எழுதிய ‘அரியும் சிவனும் ஒண்ணு’ என்னும் தலைப்பிலான முதல் சிறுகதை ‘ஆனந்த விகடன்’ இதழில் 1968 இல் வெளியானது. தொடர்ந்து ‘அதிர்ச்சி’ எனும் மற்றொரு சிறுகதையும் ‘ஆனந்த விகட’னில் வெளியாகி வாசகளின் கவனத்தை ஈர்த்தது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து கல்கி, அமுதசுரபி எனப் பல இலக்கிய இதழ்களில் எழுதத் தொடங்கினார்.
சமூகச் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதி அதில் பெரும் வெற்றியும் பெற்றார். சென்னையில் அஞ்சல்துறையில் முதுநிலைத் தனிச் செயலராகப் பணியாற்றியவர், இலக்கியப் பணிகளில் முழுமையாக ஈடுபடுவதற்காக விருப்ப ஓய்வு பெற்றார்.
தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் இவர் ஏராளமான படைப்புகளை இயற்றியுள்ளார். இவர் எழுதிய 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’, ‘ஃபெமினா’, ‘ஈவ்ஸ் வீக்லி’, ‘யுவர் ஃபாமிலி’, ‘ஃபிக் ஷன் ரிவ்யூ’, ‘சண்டே எக்ஸ்பிரஸ்’, ‘விமன்ஸ் எரா’, ‘வீக் எண்ட்’ முதலான ஆங்கில இதழ்களில் வெளியாகியுள்ளன.
படைப்புகளும் பாராட்டும்
இவரது சிறுகதைகள் வங்காளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இவர் 11 தொடர்கதைகள், 550 சிறுகதைகள், 60 கட்டுரைகள், 63 குறுநாவல்கள், 100 சிறார் சிறுகதைகள், சிறார்களுக்கான 6 தொடர்கதைகள், 15 கவிதைகள், 50 ஜோக்குகளைப் பல்வேறு பத்திரிகைகளில் எழுதியவர். இதில் 24 சிறுகதைத் தொகுப்புகளும் 13 குறுநாவல்களும் 23 நாவல்களும் 3 நாடகங்களும் 4 கட்டுரைத் தொகுதிகளும் 8 சிறுவர் புதினங்களும் புத்தகங்களாக வெளியாகியுள்ளன.
இவர் எழுதிய ‘தாயின் மணிக்கொடி’ என்கிற சிறார்களுக்கான புதினம் ரஷ்ய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் 1987ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. தனது படைப்புகளுக்காக ‘தினமணி கதிர்’ நாவல் போட்டியில் பரிசு, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டியில் பரிசு, 1978இல் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறார் நாவல் போட்டியில் வெள்ளிப்பதக்கப் பரிசு, லில்லி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு, அமுதசுரபி நாவல் போட்டியில் பரிசு, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச்சிறந்த நாவலுக்கான பரிசு எனப் பல முக்கியப் பரிசுகளைப் பெற்றவர். மன்னார்குடி செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி என்கிற சமூக அமைப்பு இவரை 2012 ஆம் ஆண்டில் சிறந்த பன்முக எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து பரிசும் விருதும் அளித்து கௌரவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கம்பன் கழகம் சிவசங்கரி விருதை வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தது.
ஜோதிர்லதா கிரிஜாவின் படைப்புகள் பெண்ணியச் சிந்தனைகளும் முற்போக்கு எண்ணங்களும் கொண்டவை. சமுதாயத்தில் பெண்கள் தினம் தினம் சந்திக்கும் பிரச்சினைகளைத் தன் கதைகளின் வாயிலாகப் பதிவு செய்தவர். தன் வாழ்நாள் முழுவதையும் இலக்கியத்துக்காகவே செலவிட்ட ஜோதிர்லதா கிரிஜா, 18 ஏப்ரல், 2024 அன்று 89ஆவது வயதில் காலமானார்.
- ஆர்.வி.பதி