பெண் எனும் போர்வாள் - 25: பெண்ணுக்குப் பெருமை ஆணுக்கு இழிவா?

ஹிமான்ஷு வர்மா, துருவ் தோடி
ஹிமான்ஷு வர்மா, துருவ் தோடி
Updated on
3 min read

‘ஓர் ஆண் புடவை அணிவதை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவே நான் புடவை அணிகிறேன். ஃபேஷன் ஷோக்களில் வருவதைப் போல் அல்லாமல், சாதாரண ஆணாக நான் புடவை அணிகிறேன். உடைகளில் காட்டப்படும் பாகுபாட்டையும் பெண்களுக்கான ஆடை எனப் புடவை மீது ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் சுமையையும் இதன்மூலம் கேள்விக்குள்ளாக்குகிறேன்.’

- ஹிமான்ஷு வர்மா, டெல்லி.

இவர் தன் அலுவலகத்துக்கு 18 ஆண்டுகளாகப் புடவை அணிந்து செல்கிறார்.

‘நாம் அனைவரும் பல்வேறு துணியால் நெய்யப்பட்ட ஆடைகளை அணிகிறோம். ஆண்கள் நீளமான வேட்டி அணியும்போது, புடவை என்பது அதைவிடச் சில மீட்டர்கள் நீளமாக இருக்கிறது என்பதற்காகவே அது பெண்களுக்கான உடை என்று சொல்வதை ஏற்க முடியாது.’

- துருவ் தோடி, பெங்களூரு.

மென் பொறியாளரான இவர், தான் அணியும் புடவைகளைப் பற்றிய தகவல்களைப் பொதுமக்களுக்குச் சொல்வதற்காகவே தன் சமூக வலைதளப் பக்கங்களைப் பயன்படுத்தி வருகிறார்.

இதுவா நாகரிகம்?

ஈரானைச் சேர்ந்த மாஷா அமினி என்கிற 22 வயதுப் பெண் ஹிஜாபைச் சரியான முறையில் அணியவில்லை என்கிற காரணத்துக்காக 2022இல் கைதுசெய்யப்பட்டு விசாரணையின்போது உயிரிழந்தார். கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதாகப் பறைசாற்றிக்கொள்ளும் காவலர்களின் சித்திரவதையால்தான் மாஷா அமினி கொல்லப்பட்டார் என ஐ.நா.வின் ஆய்வறிக்கை கடந்த மார்ச் மாதம் தெரிவித்தது. மாஷா அமினி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரானியப் பெண்கள் பலர் பொதுவெளியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன், தாங்கள் அணிந்திருந்த ஹிஜாபைக் கழற்றி வீசி அடிப்படைவாதிகளுக்கு எதிரான தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.

மேலே குறிப்பிட்டிருக்கும் இந்த மூன்று சம்பவங்களையும் ஆடை என்னும் இழைதான் பிணைக்கிறது. ஆடையை மையமாக வைத்துச் செயல்படுத்தப்படும் பாலினரீதியான பாகுபாட்டுக்கு எதிராக ஆண்கள் புடவை அணிவதும் ஹிஜாபைச் சரியாக அணியாததால் இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்டதும் பெண்களின் ஆடை உரிமை தொடர்பான கண்ணியின் இருவேறு முனைகள். ஆடையின் பெயரால் பெண்கள் மீது காலம் காலமாக ஏற்றிவைக்கப் பட்டிருக்கும் சுமை குறித்த நுண்ணரசியலைப் பேசுபவை இவை.

காடுகளுக்குள் வாழ்ந்த மனிதன் ஆடை யணிந்ததுபோல் இன்று நாம் உடுத்துவதில்லை. காலத்துக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் ஏற்ப ஆடை அணிகிறோம். ஆடை என்பது குறிப்பிட்ட பாலினத்தையோ மனிதர்களில் சில பிரிவினரையோ வேறுபடுத்திக்காட்டவோ, அடிமைப் படுத்தவோ பயன்படுத்தப்படும்போது அது உரிமை மீறலாகிறது. ஆணோ, பெண்ணோ அவரவர் விருப்பப்படி ஆடை அணியலாம். ஆனால் சாதி, மதம், வர்க்கம், பாலினம் போன்ற வற்றின் அடிப்படையில் ஒருவர் இதைத்தான் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது வன்முறைக்குள் அடங்கும்.

சௌகரியத்துக்கு இடமில்லை

பொதுவாகப் பெண்களே ஆடை ரீதியிலான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டமைக்கப் பட்டிருக்கும் ஆயிரமாயிரம் கற்பிதங்களில் ஆடையும் அடக்கம். ஆண்கள் அணிந்தால் அதற்கு ஆடை என்கிற ஒரு பொருள் மட்டுமே. அதுவே பெண்கள் அணிகிறபோது அதன் மீது பண்பாடு, கலாச்சாரம், குடும்ப கௌரவம் எனப் பல அடையாளங்களை ஏற்றிவைத்திருக்கிறோம். ஆபத்து நேரத்தில் காலை எட்டிவைத்து ஓடக்கூட முடியாத அளவுக்குத்தான் பெண்களுக்கான ஆடைகள் பெரும் பாலும் வடிவமைக்கப்படு கின்றன. புடவை, பாவாடை அணிகிற இந்தியாவில்தான் இந்த நிலை என்றில்லை. உலகின் பெரும்பாலான நாடுகளிலும் பெண்களின் ஆடைகள் கால்களை இறுக்கிப் பிடிப்பவையாகவும் அவர்கள் சௌகரிய மாகக் காலை மடக்கி அமரக்கூட முடியாத நிலையிலுமே வடி வமைக்கப்படுகின்றன.

மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் இருந்தாலும் பெண்கள் இறுக்கமான உள்ளாடைகளை அணிந்தே ஆக வேண்டும். பெண்கள் உடலாக மட்டுமே பார்க்கப்படும் சமூகத்தில் அவர்கள் உள்ளாடை அணிந்தே ஆக வேண்டிய கட்டாயம். சமூக நிர்ப்பந்தத்துக்காக ஆடை அணிவதைவிட ஆரோக்கியம்தான் முக்கியம் என்கிற குரலே சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஒலித்தது. மார்பகப் புற்றுநோயால் உலகம் முழுவதும் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து கடந்த 2011 முதல் 'No Bra Day' கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆண்களுக்கு பேன்ட்ஸ் - சட்டை உலகளாவிய ஆடையாக இருக்கும்போது பெண்களுக்கு மட்டும் நாட்டுக்கு நாடு ஆயிரக்கணக்கான ஆடைகள், அவற்றுக்குப் பல்லாயிரக் கணக்கான கட்டுப்பாடுகள். பெண்ணின் ஆடையைப் பொறுத்தவரை அவர்களது சௌகரியத்தையும் அவர்கள் இயல்பாக உணர்வதையும் விட ‘கௌரவம்’ முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காரணம், ஆணின் பார்வையை மாற்ற முயல்வதற்குப் பதில் பெண்ணுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பது நமக்கு எளிதாகவும் நடை முறைக்குச் சாத்தியப்படு வதாகவும் இருக்கிறது. அதனால்தான் பெண்ணின் ஆடையை ‘ஒழுக்க விதி’களின் கீழ் அடக்கிவிடுகிறோம்.

‘பாக்கெட்’ ரகசியம்

இன்றைக்கும் பெண்கள் அணிகிற பெரும்பாலான ஆடைகளில் ‘பாக்கெட்’ இருப்பதில்லை என்ப தற்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது. பெண்கள் பணத்தைக் கையாள்வதில்லை அல்லது கையாளக் கூடாது; எப்போதும் கையில் ஒரு பையைச் சுமந்துகொண்டு வர வேண்டும். இந்த இரண்டுதான் ‘பாக்கெட்’ மறுக்கப்படுவதன் முக்கியப் பின்னணி. பெரும்பாலான பெண்கள் பொருளாதாரத் தன்னிறைவும் சுதந்திரமும் பெற்றிருக்கும் இந்நாளிலும் பெண்களின் ஆடைகளில் ‘பாக்கெட்’ வைத்துத் தைக்க வேண்டும் எனப் பலருக்கும் தோன்றுவதில்லை. குழந்தையோ கைப்பையோ பெண்கள் தங்கள் கையில் எப்போதும் ஏதோ ஒன்றைச் சுமந்தபடி நடப்பது அவர்களது வேகத்தை மட்டுப்படுத்தும். இயல்பாகக் கைவீசி ஆணுக்கு இணையாக நடக்க முடியாது. பொதுவாகப் பார்த்தால் இது மிகச் சாதாரண விஷயமாகத் தோன்றலாம். ஆனால், இது ஆணைச் சாராமல் தனித்துச் செயல்படும் பெண்களின் கால்களைக் கட்டிப்போடும் மறைமுகச் செயல்.

ஆடைதான் காரணமா?

நாட்டில் நடைபெறும் குற்றங்கள் அனைத்துக்கும் பெண்களின் ஆடை தான் காரணம் என்பதுபோன்ற கருத்தாக்கம் காலந்தோறும் சமூகத்தில் பரப்பப்படுவது வழக்கம். குற்றமிழைத்த வரைப் பற்றி நமக்குக் கவலையில்லை. பாதிக்கப்பட்டவரையே குற்றவாளி யாக்கும் ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடுதான் இது. ஐ.நா.வும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கான உயர்மட்ட ஆணையமும் இணைந்து 2023இல் பெல்ஜியத்தின் புருசெல்ஸ் நகரில் ஆடை கண்காட்சி ஒன்றை நடத்தின. 103 ஆடைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்களும் குழந்தைகளும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டபோது அணிந்திருந்த ஆடைகள் அவை. அந்த ஆடைகள்தான் குற்றத்துக்குக் காரணமா என்கிற கேள்வியைப் பொதுச்சமூகத்தின் முன் வைப்பதற்காகத்தான் அந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டு தினசரி வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் 130 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் பெண்களின் வாழ்வுரிமைக்கான கண்காட்சியாகவும் அது அமைந்தது. பெண்களின் ஆடை குறித்துப் பாடம் எடுக்கும் ஒவ்வொருவருக்குமான கண்காட்சி அது.

ஆணை இழிவுபடுத்தும் கருவியல்ல

பெண்கள் செய்வதாலேயே சில வேலைகளுக்குப் பொருளாதார மதிப்பு இருப்பதில்லை. சமையல், வீட்டைப் பராமரித்தல் உள்ளிட்ட வேலைகளைப் பெண்களின் வேலைகள் என்று வகுத்துவைத்துவிட்டு அவற்றைச் செய்கிற ஆண்களைக் கேலி பேசுவதும் அவர்களை ஒருமாற்றுக் குறைவாகப் பார்ப்பதும் நம்மிடையே நடக்கிறது. அதேபோல்தான் ஓர் ஆணின் செயலைக் கண்டிக்க வேண்டும் என்றால் உடனே அந்த ஆணுக்குப் புடவை, பொட்டு, வளையல் போன்றவற்றை அனுப்பிவைப்பதை மாபெரும் எதிர்ப்பாகப் பலர் கருதிக்கொண்டிருப்பது நகைப்புக்குரியது. இரு ஆண்களுக்கு இடையே நடக்கும் போட்டியில் ஒருவர் தோற்றுவிட்டால் தோற்றவர் புடவை அணிந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற கதைகளைக் கேட்டும் திரைப்படங்களில் பார்த்தும் வளர்ந்தவர்கள் இப்படித்தானே சிந்திப்பார்கள்? ஓர் ஆணை இழிவுபடுத்த பெண்ணின் ஆடையைக் கருவியாகப் பயன்படுத்துவது இழிவானது. பெண்ணின் ஆடை இழிவானது என்கிற பிற்போக்குச் சிந்தனையில் விளைந்தது இது. இந்தப் பிற்போக்குச் சிந்தனைகளை எதிர்த்துப் பெண்கள் போராடி வெற்றிபெற்றுவருவதன் வெளிப்பாடுதான் இரு பாலினத்தவருக்கும் பொதுவான ஆடைகள் குறித்து மக்கள் பேசத் தொடங்கியிருப்பது. எந்த ஆடையாக இருந்தாலும் அது பெண்களின் தேர்வாக இருக்க வேண்டுமே தவிர, அவர்கள் மீது திணிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது.

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இந்திய மக்கள் தயாராகிவரும் இந்த வேளையில், பெண்கள் அனைவருக்கும் அந்தக் காலத்தில் வாக்குரிமை இருந்ததா? அதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

(தொடரும்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in