

சித்திரை தீயாய் எரித்துத் தள்ளு கிறது. அக்னி நட்சத்திரத்தில் என்ன ஆகுமோ என்று பயப்படும்படி கோடையின் தொடக்கமே கடுமை. கடும் வெப்பத்தால் நம் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படலாம். அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி? பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது எப்படி?
நீர்ச்சத்துக் குறைபாடு
வெப்பத்தால் அதிகமாக வியர்க்கும். அது நீர்ச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தும். இதனால் சோர்வு, தலைவலி, உடல் வலி, கண் எரிச்சல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீர் அளவு குறைதல், தசைப்பிடிப்பு ஆகியவை அடுத்தடுத்து வரும். உடனடியாக நிறைய நீர் அருந்த வேண்டும். தசைப் பிடிப்பு ஏற்பட்டால் நீரில் ஓ.ஆர்.எஸ். தூளைக் கலந்து குடிக்கலாம். இளநீரும் பழச்சாறும்கூடத் தசைப்பிடிப்பைச் சரிசெய்யும். உப்பும் சர்க்கரையும் ஒரு சிட்டிகை எலுமிச்சைச் சாற்றில் இட்டு, அதில் நிறைய நீர் விட்டுக் குடிக்கலாம். விடாமல் தசைப்பிடிப்பு தொடர்ந்து வலியோடு இருந்தால் மருத்துவமனைக்குச் சென்று சலைன் செலுத்த வேண்டும். அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்துக்குள் மேற்குறிப்பிட்ட எல்லாத் தொந்தரவுகளும் சரியாக வேண்டும். இல்லை என்றால் உடனடியாக மருத்துவரைச் சென்று பார்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைந்தால் காய்ச்சல் வந்துவிடும்
நீர்ச்சத்துக் குறைவு காய்ச்சல்
டெங்குக் காய்ச்சல், கரோனா காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் என்று எத்தனையோ கேள்விப்பட்டிருக்கி றோம். நீர்ச்சத்துக் குறைவு காய்ச்சல் குறித்துப் பலரும் அறிந்திருக்க மாட்டோம்.
இது தாய்ப் பால் மட்டுமே குடிக்கும் குழந்தையைக் கூடத் தாக்கும். வீட்டை விட்டு வெளியே செல்லாத குழந்தையைக்கூடத் தாக்குமா என்று தோன்றலாம். ஒன்றரை வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்குத்தான் நீர்ச்சத்துக் குறைவு காய்ச்சல் வரும் சாத்தியம் அதிகம். முதலில் லேசான சோர்வு, குறைந்த அளவு சிறுநீர் கழிப்பது என்று தொடங்கும். இதைச் சரிசெய்யத் தவறினால் சிறுநீரகங்களைக்கூடப் பாதிக்கும் ஆபத்து உண்டு.
தவிர்ப்பது எப்படி?
முடிந்தவரை காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை குழந்தைகளை வெயிலில் அனுப்பாமல் இருப்பது நல்லது. குழந்தைகளுக்கு நீர்ச்சத்து மிகுந்த பழச்சாறுகளையோ தண்ணீரையோ அடிக்கடி கொடுக்க வேண்டும். எல்லாப் பழங்களிலும் நீர் இருக்கும் என்றாலும் தர்பூசணி, வெள்ளரி, தக்காளி, சாத்துக்குடி, கிர்ணி பழங்கள் அதிக அளவு நீர் கொண்டவை. வெளியே சென்று வெயிலில் விளையாடும் குழந்தைகளுக்கு அதிக அளவு பழச்சாறுகள், ஓ.ஆர்.எஸ். கரைசல் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். முக்கியமாக சம்மர் கேம்ப், கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடும் குழந்தைகளுக்கு மூன்று லிட்டர் அளவுக்குக்கூடத் தண்ணீர் தேவைப்படும். தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்குப் பொதுவாகத் தண்ணீர்கூடத் தரக் கூடாது. ஆனால், வெயில் காலத்தில் தாய்ப்பாலை அடிக்கடி கொடுக்க வேண்டும். குழந்தை அழும் வரை காத்திருக்கத் தேவையில்லை.
தோலைப் பாதுகாப்பது எப்படி?
கோடைக் காலத்தில் தோல் நிறம் கறுத்தல், வியர்க்குரு, வேனல் கட்டிகள், தோல் பூஞ்சைத் தொற்றுகள் போன்றவை ஏற்படக்கூடும். வெயில் காலத்தில் பலரும் அதிகமாகப் பயப்படக்கூடிய சிக்கல் நிறம் கறுத்தல். தரமான மாய்ஸ்சுரைசிங் கிரீம்களை முகத்தில் மட்டுமல்லாமல், உடல் முழுவதும் பூசிக்கொள்ளலாம். வெளியே செல்லும்போது மட்டும் உடலில் சூரிய ஒளி படக்கூடிய இடங்களில், சன் ஸ்கிரீன் கிரீம்களைப் பயன்படுத்தலாம். எஸ்.பி.எஃப் 50 இருக்கக்கூடிய சன் ஸ்கிரீன்கள் சிறந்தவை.
வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்றவை வராமல் தடுக்க தினமும் இருமுறை குளிப்பது நல்லது. உடலில் நீர்ச்சத்தை ஏற்றக்கூடிய மாய்ஸ்சுரைசிங் கிரீம் போடுவதும் வியர்க்குருவிலிருந்து காப்பாற்றும். குளிப்பதற்கு முன்பாகத் தலையில் லேசாக எண்ணெய் தடவி நன்றாக மசாஜ் செய்து பிறகு குளிக்கலாம். குழந்தைகளுக்கு உபயோகிக்கும் சோப்பு பி.எச். 5.5 இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் . பெரியவர்களுக்கான சோப்பு டி.எஃப்.எம். 76% இருப்பது நல்லது. முடிந்த வரை குழந்தைகளுக்குப் பருத்தி ஆடைகளையும் கையில்லாத சட்டைகள் அல்லது அரை கைச்சட்டைகளையும், தளர்வாக உள்ள ஆடைகளையும் அணிவிக்க வேண்டும். வியர்வையால் வரக்கூடிய எல்லாச் சரும நோய்களையும் சருமத்தைச் சுத்தமாகவும் வறண்டு போகாமலும் வைத்தி ருந்தாலே தடுக்கலாம்.
| ஏசி தேவையா? நம்மில் பலருக்கு ஏசி இல்லாமல் இருக்க முடியாது. அதிக நேரம் ஏசியில் இருக்கும்போது சிலருக்குச் சளி, இருமல் போன்ற தொந்தரவுகளும் தோல் வறண்டுபோதலும் ஏற்படும். சிலருக்கு மூக்கு வறண்டு மூக்கை லேசாகத் தொட்டாலே ரத்தம்கூட வரும். வீட்டில் ஏசி வெப்பநிலையை 24- 28 டிகிரியில் வைத்துக்கொள்வது பிறந்த குழந்தைகளுக்குக்கூடச் சரியாக இருக்கும். ஏசியில் உள்ள தூசுபடியும் வலைகளை (filter) பத்து நாள்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்தால் நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும். humidifier எனப்படும் காற்றில் ஈரப்பதத்தை அதிகப்படுத்தும் கருவியை அறையில் வைத்தால் தோல் வறண்டுபோவதைத் தடுக்கும். ஏசி போட்டால் எல்லா ஜன்னல், கதவுகளையும் மூடக் கூடாது. வெளியே இருந்து காற்று உள்ளே வரும்படி லேசாகத் திறந்து வைப்பது நல்லது. பின்னிரவில் ஏசியை அணைத்துவிடலாம்.
வெயில் காலத்தில் மட்டு மல்ல, எந்தக் காலத்திலும் தலை முடிக்கான செயற்கைச் சாயம் நல்லதல்ல. செயற்கைச் சாயத்தில் உள்ள வேதிப்பொருள்களால் புற்று நோய்கூட உண்டாகலாம். எனவே, முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
தாகம் எடுக்கும்போது இயல்பாகவே சிலர் சில்லென்ற நீரையும் கடையில் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் செயற்கைக் குளிர்பானங்களையும்தான் குடிப்பார்கள். அதைத் தவிர்த்து முடிந்தவரை ஒரு நாளுக்கு ஓர் இளநீரையாவது குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் இதைப் பழக்க வேண்டும். |
வெயில் கால நோய்கள்
சிறுநீர்க்கடுப்பு போன்ற கிருமி தொற்றுகளும் வெயில் காலத்தில் ஏற்படலாம். அதற்கு முக்கியமான காரணம் நீர்ச்சத்து குறைபாடு. அதுபோலவே, விளையாட்டம்மை, சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற நோய்களும் வெயில் காலத்தில் அதிகமாகப் பரவும். தட்டம்மை, சின்னம்மை, விளையாட்டம்மை போன்றவற்றுக்குரிய தடுப்பூசியைச் செலுத்தியிருந்தால் அவை வருவதற்கான சாத்தியம் குறைவு. தடுப்பூசி செலுத்தப்பட்டதா என்கிற சந்தேகம் இருந்தால் இந்த நோய்களுக்கு உரிய எதிர்ப்புச் சக்தி (antibodies) உடலில் இருக்கின்றனவா என்பதைச் சோதித்துப் பார்க்கலாம். இல்லையென்றால் எந்த வயதிலும் இந்தத் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளலாம்.
கர்ப்பிணிகள் கவனத்துக்கு
காலை பத்திலிருந்து மாலை ஐந்து மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீர், பழச்சாறு, சூப் போன்றவற்றை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்களை அப்படியேகூடச் சாப்பிடலாம். தளர்வான, பருத்தி ஆடைகளையே அணியுங்கள். ஒரு நாளில் இரண்டு, மூன்று முறை ஆடைகளை மாற்றுங்கள். குளிப்பதற்கு முன்பாகத் தேங்காய் எண்ணெயும் குளித்த பிறகு மாய்ஸ்சுரைசிங் கிரீம்களையும் தடவிக் கொள்ளுங்கள். வாக்கிங் செல்வதற்கு மாலை நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். வீட்டுக்குள்ளேயே நடைப்பயிற்சி செய்யலாம்.
வெளியே செல்லும்போது வெப்பத்தை உள்ளிழுக்கக் கூடிய கறுப்பு நிற ஆடைகளை அணிவதைத் தவிருங்கள்.
வெளியில் எங்கே சென்றாலும் தேவையான ஜுஸ், சூப், தண்ணீர் போன்றவற்றைக் கையில் எடுத்துச் செல்லுங்கள். இந்தியர்களான நம் உடல் வெயிலைத் தாங்கும் வகையில்தான் இருக்கும். கூடுதலாக நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டால் வெயிலை வெல்லலாம்.
- டாக்டர் ஜெயஸ்ரீ
கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.