

ஒரு சொல் சுருக்கென்று நம் நெஞ்சில் தைத்துவிடுமா? நம்மை அந்நியப்படுத்திவிடுமா? சொல்லும் நபரைப் பொறுத்தது அது. எங்களுக்குத் திருமணமான இந்த ஐந்து ஆண்டுகளில் என் அப்பாவிடமிருந்து சில முறையும் என் மாமியாரிடமிருந்து சில முறையும் என் கணவரிடமிருந்து பல முறையும் இந்தச் சொல்லைப் பெற்றிருக்கிறேன். ‘எங்கள் வீட்டில்...’ என்பதுதான் அந்தச் சொல்.
என் அப்பா என்னிடம் பேசும்போது, “எங்கள் வீட்டில் இன்று இதைச் சாப்பிட்டோம்” என்பார். என் மாமியாரோ “எங்கள் வீட்டில் இப்படியல்ல” என்றும் என் கணவர், “எங்கள் வீட்டில் இது இருக்கே” என்றும் கூறுவார்கள். அப்போது ‘என் வீடு’ எது என்று தெரியாமல் தனித்து நிற்பதுபோல் தோன்றும். இது சாதாரண சொல்தானே, இதில் என்ன பிரச்சினை என்று தோன்றலாம். இதில் யாரையும் குற்றம் கூற முடியாது. அவரவருக்கு அவரவர் நியாயம். மகளுக்குத் திருமணமாகிவிட்டது; அவள் அந்த வீட்டுப் பெண் என்பது என் அப்பாவின் நினைப்பு. என் புகுந்த வீட்டினரோ நான் இப்போதுதான் இங்கே வந்திருக்கிறேன், அவர்கள் 30 ஆண்டுகளாக ஒன்றாக இருப்பவர்கள் என்று நினைக்கக்கூடும். நானும் என் கணவரும் தனியாக ஒரு வீட்டில் வசிக்கிறோம். இருப்பினும் அனைவரிடமும் பேசும்போது, ‘நம்ம வீடு’ என்கிற சொல்தான் எனக்கு வருகிறது.
இவர்கள் தரப்பு புரிந்தாலும் எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டாலும் என்னைச் சுற்றி இருப்பவர்கள் என்னிடம், ‘எங்கள் வீடு’ என்கிற சொல்லைச் சொல்லும்போது ஒரு நிமிடம் அதிர்ந்து அதைச் சுமையெனப் பார்க்கிறேன். சுமையென்று சொல்கிறாயே, சுகம் எங்கே என்கிற கேள்வி எழுகிறதா?
என் அப்பா என்ன சொன்னாலும் நான் அவருக்கு என்றுமே ‘செல்லப்பொண்ணு’தான். என் குரல் கேட்காமல் அவரால் ஒருநாள்கூட இருக்க முடியாது. என் மாமியாரோ என்னுடன் இருக்கும் நாள்களில் நான் நன்றாகச் சாப்பிட்டேனா, எனக்கு எல்லாம் வசதியாக இருக்கிறதா என்பதை மிகவும் பார்த்துப் பார்த்துக் கவனித்துக்கொள்வார். அவர் பெற்ற மகள்களைக்கூட அப்படிக் கவனிப்பாரா என்பது சந்தேகமே. என் கணவரோ ஒருவரிடம்கூட என்னை விட்டுக் கொடுக்காமல் எனக்காக மட்டுமே வாழ்பவர். இவ்வளவு சுகங்கள் இருக்க நான் ஏன் ஒரு சுமையைக் கவனிக்க வேண்டுமென, அச்சுமையை அப்படியே ஊதித் தள்ளிவிடுகிறேன்.
- பத்மா சங்கர், கோயம்புத்தூர்.
| நீங்களும் சொல்லுங்களேன்... தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். பிறருக்குப் பாடமாக அமையும் அனுபவம் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். முகவரி: இந்து தமிழ்திசை, பெண் இன்று, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in |