

“என் வாழ்க்கையில் இது போன்ற துயர் மிகுந்த தருணத்தை நான் சந்தித்ததில்லை. என் அம்மாவையும் தம்பியையும் இழந்த துக்கத்திலிருந்து என்னால் மீள முடிந்தது என்றால், அப்போது நீ என்னுடன் இருந்தாய். ‘தி கார்டியன்’ பத்திரிகையாளராக ஒரு பணிக்குச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் என் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அதற்குப் பிறகு என்னால் முழுநேர ஊழியராகப் பணியாற்ற இயலவில்லை. நீ என்னுடன் இருந்ததால் அந்தக் கடினமான தருணத்தையும் எளிதில் கடந்து வந்தேன். நானும் நீயும் வெவ்வேறு தனிப்பட்ட நபர்கள் என்பதையே மறந்துபோன ஒரு நாளில், பிரிந்து சென்றுவிட்டாயே... என்னால் தனியாக எதையுமே யோசிக்க முடியவில்லை. நான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த இந்த லண்டன் நகரம், இப்போது என் காலுக்குப் பொருந்தாத காலணிபோல் தோன்றுகிறது...”
நாற்பது வயதில் பிரிவையும் தனிமையையும் சூசன் ஸ்மில்லியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அக்கறை கொண்ட நண்பர்கள் ‘டேட்டிங் ஆப்’களைப் பரிந்துரைத்தார்கள். அவற்றில் சில மணி நேரம்கூட அவரால் இருக்க இயலவில்லை. இதைச் செய், அதைச் செய் என்று ஏகப்பட்ட ஆலோசனைகள். ஒன்றுமே பலனளிக்காமல் போனது.
துயரத்தில் தோய்ந்திருந்த ஒருநாள், அவருக்குச் சின்ன வயது நினைவு வந்தது. படகு ஓட்டக் கற்றுக்கொள்ள அப்போது அவர் ஆசைப்பட்டார். உடனே அவர் மனம் உற்சாகமடைந்தது. படகு ஓட்டும் பயிற்சியில் 2014இல் சேர்ந்தார். மனம் முழுவதும் கற்றுக்கொள்வதில் இருந்ததால், விரைவில் சிறந்த படகோட்டியாக மாறினார். ஆனாலும் தனிமையின் துயரம் அவரைவிட்டுச் செல்ல மறுத்தது.
ஒரு பழைய பாய்மரப் படகை வாங்கி, செலவு செய்து நல்லவிதமாக மாற்றினார். ‘இசன்’ என்று அதற்குப் பெயர் சூட்டினார். புத்தகங்கள், லேப்டாப், ரேடியோ, சில கருவிகள், உணவுப் பொருள்கள், சமைக்கும் பாத்திரங்கள் ஆகியவற்றுடன் சில நாள்களோ வாரங்களோ கடலில் தனியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று புறப்பட்டுவிட்டார். ஆனால், அந்தப் பயணம் மூன்று ஆண்டுகளுக்கு நீளும் என்று அப்போது அவர் அறியவில்லை.
உறவினர்களோ நண்பர்களோ ஏன் மனிதர்களே அதிகம் இல்லாத கடல் பயணம் சூசனின் தனிமையை விரட்டியது! வாழ்க்கையில் ஏற்பட்ட துயர அலைகளைவிடக் கடல் அலைகளைச் சமாளிப்பது அவருக்கு எளிதாக இருந்தது. ‘இசன்’ அவர் நினைத்ததைப் போலவே மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தது. அதனால், அதைத் தன் தோழியாகவே நினைத்துக்கொண்டார் சூசன். கரை தெரியும் இடங்களில் எரிபொருள், உணவுப் பொருள்கள் போன்றவற்றை வாங்கிக்கொள்வார். வழியில் அவரைப் போன்ற கடல் பயணிகளைச் சந்திப்பார். அவர்களின் அனுபவங்களைக் கேட்டுக்கொள்வார். தன்னுடைய அனுபவங்களை அவ்வப்போது எழுதி ‘தி கார்டிய’னுக்கு அனுப்பி வைத்தார்.
இப்படி நில வாழ்க்கையைவிட மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்த கடல் வாழ்க்கையில் ஒருநாள் புயல் வந்தது. ஏற்கெனவே புயல் பற்றிய செய்தி தெரிந்திருந்தால் எங்காவது கரை ஒதுங்கியிருப்பார். புயல் என்பதால் கடலில் கப்பல்களோ படகுகளோ தென்படவில்லை. புயல் ஒரு சுழற்று சுழற்றினால், சூசன் கடலுக்குள் விழுவதைத் தவிர வேறு வழியில்லை. வேகமாக வீசிய புயல் காற்றால் படகுக்குள் இருந்த பொருள்கள் அனைத்தும் விழுந்து நொறுங்கின. படகைச் சமாளிக்கும் வலிமையை இழந்துகொண்டே வந்து, ஒரு கட்டத்தில் எதுவும் செய்ய இயலாமல் அமர்ந்துவிட்டார் சூசன். மீண்டும் அந்தத் தனிமை ஓடிவந்து ஒட்டிக்கொண்டது.
கண்விழித்தபோது தான் உயிருடன் இருப்பதும் கரைக்கு அருகில் ஒதுங்கியிருப்பதும் அவருக்குத் தெரியவந்தது. சூரியன் அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலிருந்தது. கரையில் இறங்கிக் குளித்து, ஒரு கோப்பைத் தேநீரை உறிஞ்சியபோதுதான் அவருக்கு நிம்மதியாக இருந்தது. சேதாரம் இன்றித் தன்னை, கரை ஒதுக்கிய ‘இசன்’ படகுமீது சூசனுக்குக் கூடுதல் அன்பு ஏற்பட்டது. மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்.
கடல் பயணம் ஒரு நாளைப் போல் இன்னொரு நாள் இருக்காது. சில நாள்கள் சுவாரசியத்துக்குப் பஞ்சம் இருக்காது. சில நாள்கள் பொழுதே போகாது. ஆனாலும் சூசனுக்கு மீண்டும் லண்டன் திரும்ப வேண்டும் என்கிற எண்ணமே வரவில்லை. நீண்ட பயணத்தின் முடிவில் அவர் கிரேக்கத்தை அடைந்தபோது, ஓராண்டுப் பயணத்தை நிறைவு செய்திருந்தார்.
படகுடன் போட்டி போட்டுக்கொண்டு உற்சாகமாகநீந்திவரும் டால்பின்களும் கூட்டம் கூட்டமாகச் செல்லும் மீன்களும் வானில் வட்டமிடும் கடற்பறவைகளும் சூசனை அழைத்துக்கொண்டே இருந்தன. நில வாழ்க்கையைவிட நீர் வாழ்க்கை அவருக்குப் பலவிதங்களில் சுவாரசியத்தைக் கூட்டுவதாக இருந்தது. லண்டன் திரும்பும் எண்ணத்தைக் கைவிட்டு, மீண்டும் படகுப் பயணத்தை ஆரம்பித்தார்.
இத்தாலி, பிரான்ஸ் என்று பல நாடுகளுக்கும் சென்றார். கரோனா காலகட்டத்தில் ஒரு தீவில் தனியாகத் தங்கினார்.
“உலகத்துக்குத் தனிமைப்படுத்துதல் புதிதாக இருந்தது. ஆனால், நான் சில ஆண்டுகளாகவே தனிமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன். ‘ராபின்சன் க்ரூசோ’ ஒரு தீவில் தனித்து இருந்ததுபோல நானும் இருந்தேன். மூங்கில்களை வைத்து இரண்டு பாறைகளைச் சேர்த்துக் கூரை அமைத்தேன். பாறைகளுக்கு இடையில் படுக்கையை அமைத்தேன். பாட்டு கேட்டேன். படித்தேன். நீந்தினேன். எழுதினேன்.”
மூன்று ஆண்டுகள் பயணத்தை முடித்துக்கொண்டு, தன்னுடைய அனுபவங்களைப் புத்தகமாக எழுதினார் சூசன் ஸ்மில்லி. இந்தப் புத்தகம் சாகசத்தையோ சவால்களையோ சொல்வதல்ல. கடலில் கழித்த நாள்களை இயல்பாகவும் மென்மையாகவும் அழகாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார் சூசன். இது ‘The Half Bird’ என்கிற இவருடைய இரண்டாவது புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
“வாழ்க்கையில் துயரங்களைத் தவிர்க்க முடியாது. ஆனால், அவற்றைக் கடந்துவிட்டோமானால், அதற்கு முன் இருந்த வாழ்க்கையைவிடச் சிறப்பான வாழ்க்கை அமையும் என்பதை அனுபவத்தில் அறிந்திருக்கிறேன். அதனால், துயரங்களைத் தூக்கிப் போடுங்கள்; நம்பிக்கையோடு அடுத்த அடியை எடுத்து வையுங்கள்” என்கிறார் சூசன் ஸ்மில்லி.