

அடுத்த நொடி என்ன நடக்கும் என அறிய முடியாத வாழ்க்கையின் புதிரை விளக்க ஸ்நூக்கர் விளையாட்டைச் சிலர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுவார்கள். ‘நாம் ஒரு பந்தைத் தட்டிவிடுவோம். அது மற்றொன்றின் மீது மோத அந்த மற்றொன்று இன்னொன்றின் மீது மோத இறுதியில் வேறொரு பந்து வளைக்குள் விழும். அதுதான் வாழ்க்கை’ என்பார்கள். இப்படிக் கணிப்பும் நுட்பமும் நிகழ்தகவும் நிறைந்த ஸ்நூக்கர் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் அனுபமா ராமச்சந்திரன்.
சில விளையாட்டுகள் பெரும்பான்மை மக்களுக்குப் பரிச்சய மற்றவை. திரைப்படங்களில் பணம் படைத்தவர்கள் மட்டுமே ஆடும் விளையாட்டாகத்தான் ஸ்நூக்கரைப் பலரும் பார்த்திருப்போம். அது பொழுதுபோக்குக்காக விளை யாடுவது எனக்கூடச் சிலர் புரிந்து வைத்திருக்கலாம்.
“இவை எல்லாம் நம்ம நினைப்பு தான். உண்மையில் ஸ்நூக்கர் விளையாட்டு அனைவரும் விளையாடக்கூடியது” எனப் புன்னகைக் கிறார் அனுபமா. கல்லூரி மாணவியான இவருக்கு 14 வயதில் ஸ்நூக்கர் அறிமுகமானது. கோடை விடுமுறையில் ஏதாவது பயிற்சி வகுப்புக்குச் செல்ல நினைத்தவரை ஸ்நூக்கர் விளையாட்டின் பக்கம் திருப்பியதில் இவருடைய அம்மா காயத்ரிக்கும் பங்கு உண்டு.
“நான் சம்மர் கேம்ப் போறேன்னு சொன்னதுமே அம்மா எனக்கு ரெண்டு சாய்ஸ்தான் கொடுத்தாங்க. ஒண்ணு செஸ், இன்னொண்ணு ஸ்நூக்கர். நிறைய பேர் செஸ் கத்துக்கறாங்க. எல்லாரையும்போல நானும் ஏன் குறிப்பிட்ட சில விளையாட்டுகளை மட்டும் தேர்ந்தெடுக்கணும்னு யோசிச்சேன். ஸ்நூக்கர்ங்கற பேரே புதுசா இருந்ததால அதைத் தேர்ந்தெடுத் துட்டேன். அந்த விளையாட்டு எனக்கு மிகப் பிடித்திருந்தது. சம்மர் கேம்ப் முடிஞ்ச பிறகும் நான் பயிற்சியைத் தொடர்ந்தேன்” என்கிறார் அனுபமா.
விளையாட்டில் தேர்ந்த பிறகு போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். பள்ளி நாள்களில் சப் ஜுனியர் பிரிவில் மாநில அளவில் சாம்பியனாக ஆனார். வளர, வளர சர்வதேசப் போட்டிகளிலும் வென்றார். ஜுனியர் பிரிவில் உலக சாம்பியன் தகுதியைப் பெற்றவர், பிறகு 21 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் உலக சாம்பியன் பட்டத்தையும் வென்றார். கடந்த ஆண்டு தோஹாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த விளையாட்டிலும் ஒற்றையர், இரட்டையர் என இரண்டு பிரிவுகள் உண்டு. அனுபமா பெரும்பாலும் ஒற்றையர் பிரிவில்தான் விளையாடுகிறார்.
ஸ்நூக்கர் விளையாட்டும் மற்ற விளையாட்டுகளைப் போலத்தான் என்றாலும் கிரிக்கெட், கால்பந்து போன்றவற்றுக்கு இருப்பதைப்போல வரவேற்பும் ரசிகர்களும் இதற்கு இல்லை.
“நிறைய பேர் இது பணக்காரர் களுக்கான விளையாட்டு என நினைக்கிறார்கள். அப்படி இல்லை என்பதற்கு நானே உதாரணம். இந்த விளையாட்டில் மாநில அளவிலோ தேசிய அளவிலோ தகுதி பெறுவதன்மூலம் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவில் உள்ள இட ஒதுக்கீட்டின்கீழ் படிக்கலாம். அரசு வேலைவாய்ப்பும் உண்டு” என்று சொல்லும் அனுபமா, அடுத்தடுத்த ஸ்நூக்கர் போட்டிகளுக்குத் தயாராகி வருகிறார்.
- கிருஷ்ணி