

திருநங்கையரின் நலனுக்காகப் பல தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. அவற்றுள் குறிப்பிடும்படியானது ‘சகோதரன்’ அமைப்பு. சென்னையில் செயல்படும் இதன் நிறுவனர் சுனில் மேனன். கடந்த 25 வருடங்களுக்கும் மேலாகத் திருநங்கையர், கோத்திகள், LGBTIQ என அனைவரின் மேம்பாட்டுக்காகவும் இந்த அமைப்பு செயல்படுகிறது.
திருநங்கை மற்றும் திருநம்பிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் என முக்கியத் தேவைகளைச் சகோதரன் அமைப்பு கவனிக்கிறது. தமிழக அரசுடன் இணைந்து திருநங்கையரின் நலத்திட்டங்களை அவர்கள் பெற பாலமாகச் செயல்படுகிறது. சென்னையில் உள்ள திருநங்கையரின் நலனுக்காகச்சென்னைக் காவல்துறை, சமூகநலத் துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மகளிர் திட்டம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், அரசு மருத்துவமனைகள், லயன்ஸ், ரோட்டரி சங்கங்கள், திறன் படைத்த வழக்கறிஞர்கள், திரைத்துறையினர், தொழில் துறையினர் ஆகியோரின் உதவியோடு திருநங்கையரின் நலனுக்கான வேலைகளை இந்த அமைப்பு செய்துவருகிறது.
திருநம்பிகள் பலர் இந்த அமைப்பின் மூலமாகத் தங்கள் குடும்பத்துடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் உள்ள 21 திருநங்கை நாயக்குகளோடும் மற்ற தொண்டு நிறுவனங்களோடும் இணைந்து வருடந்தோறும் கூவாகம் திருவிழாவை விழுப்புரத்தில் ஒருங்கிணைப்பதும் இந்த அமைப்புதான்.
கல்வி கற்க விரும்பும் கோத்திகள் (ஆணுடையில் உள்ள திருநங்கையர்), திருநங்கையர், திருநம்பிகள் ஆகியோரைப் பல கல்லூரிகளில் கட்டணமின்றிப் படிக்கவைத்து அவர்களது கனவு நனவாக்கப்பட்டுவருகிறது. பல்வேறு நோய்களால் அவதிப்படுபவர்கள் சமூகநலத் துறையின் உதவியோடு முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற உடனிருந்து உதவிவருகின்றனர்.
நடக்க முடியாமல் வீட்டோடு இருக்கும் திருநங்கையர், நாள்பட்ட நோயால் முடங்கிய திருநங்கையர் ஆகியோருக்கு மாதா மாதம் நிதியுதவி பெற்றுத் தருகின்றனர். மாற்றுப் பாலினத்தோர் குறைந்த செலவில் தரமான பாலின உறுதி சிகிச்சை எடுத்துக்கொள்ள நல்ல மருத்துவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு இம்மக்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சிகிச்சை எடுக்க TFH எனும் திட்டம் மூலமாக உதவிவருகின்றனர்.
| கதையல்ல நிஜம் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதம். அதைப்போல்தான் திருநங்கை யருக்காகப் பணியாற்றும் தொண்டு நிறுவனங்களில் நெடுங் காலமாக இயங்கிவரும் சிறப்புவாய்ந்த நிறுவனம் ‘சகோதரன்’. இந்தியா முழுவதும் திருநங்கையர் அமைப்புகளை நடத்தி மக்களை ஒருங்கிணைக்கின்றனர். இதற்குப் பலர் உறுதுணையாக இருக்கின்றனர். இதுபோன்ற அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட திருநங்கையரின் ஜமாத் தலைவிகள் (நாயக்குகள்) பெரும் காரணம். அமைப்புகளும் ஜமாத்தும் இணைந்து அந்தந்த மாவட்ட மக்களைச் செம்மைப்படுத்துகின்றனர் என்றால் அது மிகையாகாது. திருநங்கையருக்கு வேலைவாய்ப்பை வழங்கிடப் பலர் முன்வருகின்றனர். அதற்காகப் பல்வேறு திறன்மேம்பாட்டுப் பயிற்சிகளை ‘சகோதரன்’ அமைப்பு மேற்கொண்டுவருகிறது. இந்த அமைப்பிற்கு சென்னையில் ஒரு சிறிய பயிற்சிக்கூடம் வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை. அந்தப் பயிற்சிக்கூடம் திருநங்கையர் பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். |
தமிழக அரசு தரும் தொழில் பயிற்சியில் மாற்றுப் பாலினத்தவர் பங்கேற்கவும் இவர்கள் உதவிவருகின்றனர். தனியார் நிறுவனமான CGI நிறுவனத்தின் உதவியுடன் 300க்கும் மேற்பட்ட திருநங்கையர், திருநம்பிகளுக்குக் கடந்த வருடத்தில் தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது 350 பேருக்குப் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளனர்.
வழக்கறிஞர் மதுபிரகாஷ் மூலமாகத் திருநங்கையருக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம் பெற்றுத்தர உடனிருந்து உதவியது ‘சகோதரன்’ அமைப்பு. இந்த அமைப்பின் தோழமை நிறுவனமான ‘சிநேகிதி’ அமைப்பின் மூலம் வடசென்னையில் உள்ள 500க்கும் மேற்பட்ட திருநங்கையருக்குத் தமிழக அரசின் சமூக நலத் திட்டங்களைப் பெற்றுத்தந்துள்ளனர். இதற்கான பொருளாதார உதவியைக் கடந்த இரண்டு வருடங்களாகச் சென்னை YMCA வழங்கிவருகிறது.
திருநங்கையரைத் திரட்டிப் பொது மக்களுக்குப் பல்வேறு விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு திருநங்கையர் குறித்துப் பொதுமக்களிடையே புரிதலை ஏற்படுத்துவதையும் இவர்கள் செய்துவருகிறார்கள்.
கட்டுரையாளர்,
திருநர் செயற்பாட்டாளர்.