மீண்டும் ஒரு ‘காதல்’ கட்டுக்கதை?

மீண்டும் ஒரு ‘காதல்’ கட்டுக்கதை?
Updated on
3 min read

அண்மையில் வெளியாகித் தற்போது ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’ ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டிருக்கும் ‘லவ்வர்’ தமிழ்ப் படம் இன்றைய இளம் தலைமுறையினர் குறித்தும் காதல் பற்றிய அவர்களது புரிதல் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

கதையின் நாயகனும் நாயகியும் கல்லூரிக் காலம் தொடங்கி ஆறு ஆண்டுகளாகக் காதலிக்கிறார்கள். அல்லது நாயகி அப்படி நம்ப வைக்கப்படுகிறாள். நாயகி மென்பொருள் நிறுவனத்தில் வேலைசெய்ய, நாயகனோ ‘கஃபே’ நடத்த வேண்டும் என்கிற தன் கனவைத் துரத்தியபடி இருக்கிறார். கனவைத் துரத்துவதைப் பகுதி நேரமாகவும் நாயகியை வேவு பார்த்தபடி இருப்பதை முழு நேரமாகவும் செய்துவருகிறார். இதுவல்லவோ அமரத்துவமான காதல்!

‘நல்ல’ பெண் இல்லையா?

இந்தச் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் ஆணாதிக்கச் சிந்தனையையும் பெண் ணடிமைத்தனத்தையும் சில வகைகளில் இந்தப் படமும் பிரதிபலிக்கிறது. படம் நெடுக, “இது சரி வராது அருண். என்னால முடியலை” என்று நாயகியும், “சாரி திவ்யா. இனிமே இப்படிப் பண்ண மாட்டேன். ஒரே ஒரு சான்ஸ் கொடு” என்று நாயகனும் உரையாடுகிறார்கள். நாயகியைக் கண்காணித்தபடி இருக்கும் நாயகனின் கெடுநடத்தைக்கு அவனது குடும்பப் பின்னணியும் காரணமாகச் காட்டப்படுகிறது. தன் அம்மாவின் பணத்தைத் திருடி வேறொரு பெண்ணுக்குக் கொடுத்துவிட்டுச் சுகமாக வாழும் குடிகாரத் தந்தையைப் பார்த்து அந்த மகன் நியாயப்படி திருந்தியிருக்க வேண்டாமா? ஆனால், தன் அம்மா அனுபவிக்கும் கொடுமையையும் மன உளைச்சலையும் வேறொரு பெண்ணுக்குக் கையளிப்பது நியாயமல்ல என்பதைக்கூடப் புரிந்துகொள்ள முடியவில்லை அந்தப் பட்டதாரியால்.

ஆண் – பெண் உறவில், குறிப்பாகக் காதல், திருமணம் சார்ந்த உறவில் பெண் தன் வயது தொடங்கிக் கல்வி, வேலை, ஆளுமை என அனைத்திலும் ஆணைவிடக் குறைந்தவளாக இருக்க வேண்டும் என்பது இங்கே எழுதப்படாத நியதி. அனைத்துக்கும் ஆணைச் சார்ந்திருக்கிற பெண்தான் ‘நல்ல’ அல்லது ‘தகுதியான’ பெண் எனக் கருதப்படுகிறாள். ஆணின் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதபோதுதான் சிக்கல் தொடங்குகிறது. படத்தின் நாயகனும் இதைத்தான் வெளிப்படுத்துகிறான். தனக்கு முன்பே தன் காதலிக்கு வேலை கிடைப்பதும் அவள் தன்னிச்சையாகச் செயல்படுவதும் அவனது ஆண்மைக்கு இழுக்கு என நினைக்கிறான். உண்மையில் அது தாழ்வுமனப்பான்மையின், தகுதிக்குறை பாட்டின், நம்பிக்கையின்மையின் வெளிப் பாடு. ஆனால், அதற்குக் கச்சிதமாகக் ‘காதல்’ முலாம் பூசிவிடுகிறான்.

உளவியல் தாக்குதல்

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் புழங்குவெளியை விரிவாக்கியிருக்கும் அதேநேரம், வாழ்க்கை நெருக்கடிகளையும் அதிகரித்திருக்கிறது. குடிப்பதைத் தவிர வேறு வேலை இல்லாத நாயகன், சதாசர்வ காலமும் தன் காதலியை உளவு பார்த்தபடி இருக்கிறான். வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் என அனைத்துச் சமூக ஊடகப் பக்கங்களிலும் அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்பதைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறான். இது போதாதென்று அவளுடைய நண்பர்களின் சமூக ஊடகக் கணக்கையும் வேவுபார்க்கிறான். நண்பர்களோடு வெளியே சென்றிருக்கும் தன் காதலியிடம் “எங்கே இருக்க? லொகேஷன் ஷேர் பண்ணு. நான் வர்றேன்” என்று அதிகாரத்துடன் சொல்வது எவ்வளவு மோசமான உளவியல் தாக்குதல்.

அவனிடமிருந்து போன் வந்தாலே நாயகியிடம் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. அழைப்பை அவள் எடுக்கவில்லையென்றால் தொடர்ந்து போன் செய்தபடியே இருக்கிறான். அவள் மீது தனக்கிருக்கும் உரிமையை நிலைநாட்டுவதற்காக அவளுடைய நண்பர்கள் முன்னிலையில் அவளை அவமானப்படுத்துகிறான். “எல்லாம் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். அவனைப் பற்றி உனக்குத் தெரியாது. அவன் மோசமான வன்” என்று தன்னைத் தவிர மற்ற ஆண்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்று சொல்லித் தன் கேவலமான நடத்தையை நியாயப்படுத்துகிறான். இவ்வளவுக்குப் பிறகும், அவள் தன்னை மன்னிப்பதுதான் நியாயம் என்கிற தொனியில் பேசுகிறான்.

ஏன் மன்னிக்க வேண்டும்?

ஏன் அந்தப் பெண் அவனை மன்னித்துக் கொண்டே இருக்க வேண்டும்? அதுதான் ஆணாதிக்கச் சமூகத்தின் வெற்றி. வார்த்தைக்கு வார்த்தை ‘ஆறு வருடக் காதல்’ என்பான் நாயகன். இப்படியொரு காதலைக் கைவிட்டால் உலகம் உன்னைத் தூற்றும் என்பதைத்தான் மறைமுகமாக அவளுக்கு உணர்த்துகிறான். இப்படிச் சொல்வதன் வாயிலாக அவளைக் குற்றவுணர்வுக்குள் தள்ளுகிறான். “அவன் இப்படியொரு நிலையில் இருக்கும்போது நான் ‘பிரேக் அப்’ செய்வதுதான் குற்றவுணர்வாக இருக்கிறது” என்பதை அவள் வாயாலேயே சொல்ல வைக்கிறான். தன் ஏமாற்றுத்தனங்கள் எல்லாமே கைவிட்டு போகிறபோது தற்கொலை செய்து கொண்டுவிடுவேன் என மிரட்டுகிறான். இந்த சைக்கோத்தனத்தைத்தான் காதல் என்று அந்தப் பெண்ணையும் தன் வயதொத்த ஆண் சிங்கங்களையும் நம்ப வைக்கிறான்.

உண்மையில் பெரும்பாலான விடலைக் காதலில் நடப்பது இதுதான். எந்தவிதத் தோல்விக்கும் மறுதலிப்புக்கும் பழக்கப்படாத வகையில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். அதுவும் ஒரு பெண் தன்னை மறுதலிக்கிறாள் என்பது தனது ஆண்மைக்கு விடப்பட்ட சவாலாகவே ஆண் மனம் புரிந்துகொள்கிறது. அதனால்தான் எப்பாடுபட்டாவது அவளை அடைந்தே தீர வேண்டும் என நினைத்து, சம்பந்தப்பட்ட பெண்ணை அதீத உளவியல் தாக்குதலுக்கு ஆளாக்குகிறான் நாயகன். இதில் நாயகனின் அம்மா மிக மோசமான குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர். அவர் ஏன் தன் பிள்ளையைக் கண்ணியமானவனாக, பெண்களை மதிப்பவனாக வளர்க்க முடியவில்லை? அவர் இந்தச் சமூகத்தின் பிற்போக்குத்தனங்களைச் சகித்துக் கொள்ளும் அல்லது எதிர்க்க இயலாத ஒருவராகவே இருக்கிறார். ‘வளர்ந்தா திருந்திவிடுவான், கல்யாணம் பண்ணா சரியாகிடுவான்’ என்கிற வழக்கமான பிற்போக்குச் சிந்தனைதான் இங்கேயும் செயல்படுகிறது. குடியும் போதையும் நடத்தைக் கோளாறும் கொண்டவர்களை எல்லாம் மணந்துகொண்டு திருத்துவதற்குப் பெண்கள் என்ன மறுவாழ்வு இல்லங்களா நடத்துகிறார்கள்?

பெண்ணுக்குச் சுயமரியாதை இல்லையா?

யதார்த்தத்தைத்தானே படமாக எடுக்கிறார்கள் எனச் சிலர் சொல்லக்கூடும். ஆனால், யதார்த்தம் என்று நாம் நம்புபவை பெண்ணுரிமைக்கு எதிரானவை என்பதை இயக்குநரால் அழுத்தமாகச் சொல்ல முடியவில்லை. பெண்கள் மீதான வன் முறை குறித்துப் படமெடுக்கிறவர்கள் பெண்ணுடலையே பகடைக்காயாகப் பயன்படுத்துவதுபோல் ‘மாடர்ன் ஏஜ்’ காதலின் சிக்கல்களைச் சொல்வதாக நினைத்து முழுக் கிணறைத் தாண்டாமல் போயிருக்கிறார்.

பெரும்பாலான தமிழ்ப் படங்களின் இறுதிக் காட்சியில் வில்லன் திருந்தி விடுவதைப் போல நாயகனிடம், “என் காதலிக்குச் சுதந்திரம் தர நான் யார்?” எனவும் “நீங்க அவங்களைக் காதலிச்சா இப்படிப் பண்ண மாட்டீங்க ப்ரோ” எனவும் நாயகியின் நண்பன் சொல்வார். இதைத்தான் படம் விரிவாகப் பேசியிருக்க வேண்டும்.

ஆண்களின் பிரச்சினை

நாயகனின் குணக்கேட்டையும் அதை நியாயப்படுத்தும் வகையிலான அவனது குடும்பச் சூழலையும் சொன்ன இயக்குநர், இப்படியோர் ஆணைப் பெண்கள் எப்படிக் கையாள வேண்டும் எனவும் சொல்லியிருக்க வேண்டும். நாயகியின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் நாயகன் சீண்டுகிற புள்ளியிலேயே அதை நாயகி கண்டிக்கும் விதமாக ஒரு காட்சிகூட இல்லை. நாயகியை நோக்கி மிக மோசமான வசைச்சொல்லை நாயகன் சொல்லும்போது நாயகி அவனுக்குக் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டாமா?

ஒரு பெண்ணை உடைமைப் பொருளாக நினைத்து அவளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதல்ல காதல். அவளது முன்னேற்றத்துக்குப் பக்கபலமாக இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை; முட்டுக்கட்டை போடாமல் இருப்பதுதான் அன்பின் அடிப்படை என்பதை இன்னும் எத்தனை நாள்களுக்கு விளக்கிக் கொண்டிருப்பது? ஆணை மறுக்கிற, தன்னளவில் உயர்ந்து நிற்கிற பெண்ணை வில்லியாகச் சித்தரித்தே பழக்கப்பட்ட தமிழ்த் திரையுலகப் பண்பாட்டை மாற்ற வேண்டுமில்லையா? நாயகி, நாயகனைவிட்டுப் பிரிவதே நல்லது என்பதற்குப் பதிலாக நாயகன் பாவம் என்கிற மனநிலையைப் பார்வையாளர்களுக்குக் கடத்த நினைப்பதை ஆணாதிக்கச் சிந்தனை யாகவே பார்க்க முடிகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in