

திருநங்கைகள் பயன்படுத்தும் சொற்பிரயோகங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மூத்தவர்களை மதிப்பதில் திருநங்கையருக்கு நிகரில்லை. மூத்த திருநங்கையரை ‘பாவ்படுத்தி’. அதாவது, ‘உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்’ எனக் கூறுவார்கள். அதற்கு அந்த மூத்த திருநங்கை, ‘நல்லா இரு’ எனும் அர்த்தத்தில் ‘ஜியோ’ என வாழ்த்துவார்.
அறுவைசிகிச்சை செய்துகொண்ட திருநங்கையை ‘நிர்வாணம் ஆனவள்’ என்பார்கள். ஆணுடையில் உள்ள திருநங்கையை ‘கோத்தி’ என்பர். உடுத்தும் உடையை ‘சாட்லா’ என்றும் நல்லவர்களை ‘சீஸ்’ எனவும் கெட்ட வர்களை ‘பீலா’ எனவும் கூறுவர். ஆணை ‘பந்தி’ எனவும் பெண்ணை ‘நாரன்’ எனவும் திருடனையோ கெட்ட வனையோ ‘கௌடி பந்தி’ எனவும் சொல்வது வழக்கம்.
திருநங்கை அம்மாவை ‘குரு’ எனவும் ஆயாவை ‘நானகுரு’ எனவும் ஆயாவின் அம்மாவை ‘தாதகுரு’ எனவும் அழைப்பர். இந்தியிலும் இவ்வாறே உள்ளது. மகளை ‘சேலா’, பேத்தியை ‘நாத்தி சேலா’, கொள்ளுப் பேத்தியை ‘சந்தி சேலா’ எனவும் சொல்வது வழக்கம்.
அறுவைசிகிச்சை செய்து 40ஆவது நாள் நடத்தும் விழாவை ‘பால் ஊற்றும் விழா’ எனச் சொல்வதுண்டு. தவறு செய்யும் கோத்திகள், திருநங்கைகளைத் தண்டிப்பதிலும் திருநங்கை மூத்தவர்கள் சளைத்தவர்கள் அல்ல. திருநங்கையர் அனைவரும் கூடிப்பேசும் இடமான ‘ஜமாத்’துக்கு அழைத்துப் பேசுவர். தவறு செய்தவர்களுக்கு ஜமாத்தில் விதிக்கப்படும் அபராதம் ‘தண்டு’ என அழைக்கப்படும்.
மிகப் பெரிய அளவில் திருநங்கைகள் ஒன்றுகூடி நடத்தும் ஜமாத் சார்பான விழாவை ‘ரொட்டி’ என அழைப்பது உண்டு. அங்கே அனைவரும் அமர்ந்து திருநங்கைகளின் நன்மைகள் குறித்தும் சட்டதிட்டங்கள் குறித்தும் பேசுவது ‘ஹிஜிடா பண்’ என வடமாநிலச் சொல்லைப் பயன்படுத்துவதும் உண்டு. அங்கு அக்காள், தங்கைகள் செய்து கொள்ளும் மொய் முறைகளை ‘மாபேரா’ எனச் சொல்கிறார்கள்.
பல சொற்கள் இந்தியைத் தழுவி யிருக்கும். குறிப்பாக, உறவுமுறைச் சொற்கள். அக்கா, தங்கையை ‘பென்’ என்பதும், அண்ணி நாத்தனார்களை ‘பாபி’ என அழைப்பதும் இதில் அடங் கும். திருநங்கைத் தாய், தனக்கென ஒரு மகளைத் தத்து எடுப்பதை ‘மடி கட்டுதல்’ அல்லது ‘சேலா பண்ணுதல்’ எனக் கூறுவார்கள். மறைந்த மூத்த திருநங்கைகளை ‘ப்பீடி ப்பீடி’ என அழைப்பார்கள்.
மூத்த திருநங்கையர் எதிரில் அடுத்த நிலையில் உள்ள திருநங்கையர் உட்கார மாட்டார்கள். ஆண், பெண் வாழ்க்கையில் அவர்களுக்கு வயதாக, வயதாக வீட்டு விஷயங்களில் பெரிதாகத் தலையிடாமல் அமைதியாக ஓரமாக இருந்துவிட நினைப்பார்கள். ஆனால், திருநங்கையர் வாழ்க்கையில் மூத்தவர்கள் சொல்வதே வேதவாக்கு. அவர்கள் சொல்வதை இளையவர்கள் மீற மாட்டார்கள்.
பணக்காரர்களை ‘டெப்பர்வாலி’ எனக் கூறுவர். மது குடிப்பவர்களை ‘டீடீ வாலி’ என அழைப்பர். இடையிலிங்கப் பாலினத்தவரை (பாலினத்தைக் குறிப்பிட்டு அறிய முடியாதபடி பால் உறுப்புகளில் பல்வேறு வகையான மாற்றங்களோடு பிறப்பவர்கள்) ‘மாபேட்டி குசிறி’ என்றும் சொல்வதுண்டு. இடையிலிங்கப் பாலினத்தவர் குறித்துத் தற்போது பலரும் புரிந்துகொள்ளத் தொடங்கி யுள்ளனர். ஒரு ஏரியாவில் மூத்த திருநங்கை ஒருவர் உண்டென்றால் அவரது ஊரைச் சொல்லி அழைப்பர். உதாரணத்துக்கு மூத்த திரு நங்கையான முன்னா அம்மாள் என்று ஒருவர் சென்னையில் வசித்து வருகிறார். அவரை அவரது சொந்த ஊரான பெங்களூருவை மனதில்கொண்டு ‘பெங்களூ ரம்மா’ என்றே அழைப்பர்.
சென்னையில் உள்ள ஒரு திருநங்கை இந்தியாவில் எந்தவொரு மாநிலத்துக்குத் தனியாகச் சென்றாலும் அவர் தனது திருநங்கை தாயார், அவரது வம்சத்தை அங்குள்ள திருநங்கைகளிடம் கூறி உறவாட முடியும். தேவைப்பட்டால் அங்குள்ள வர்களுடன் இருந்து பிழைக்க முடியும். தனது இனம் ரோட்டில் விழுந்து கிடக்கவோ, ஆசிரமத்தில் யாருமற்றுக் கிடக்கவோ திருநங்கையர் விடுவதில்லை. அவ்வாறு உடல் நலிவடைந்த திருநங்கை யாராவது காப்பகத்தில் இருந்தால் அது திருநங்கையரே நடத்தும் காப்பகமாக இருக்கும் (உதாரணத்துக்கு ‘தோழி திருநங்கைகள் காப்பகம்’).
(தொடரும்)
கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.
| கதையல்ல நிஜம் இங்கே சில சொற்பிரயோகங்களை நாம் பார்த்தோம். இவை சில உதாரணங்களே. இன்னும் நிறைய உள்ளன. இவ்வாறு திருநங்கையர் தனியாக ஒரு சங்கேத பாஷை பேசுவதற்கு ஒரு காலத்தில் நிலவிய ஒதுக்குதலும் புறக்கணிப்புமே காரணங்களாக இருந்திருக்கும். மற்றவர்களுக்குப் பயந்து, நாம் பேசுவதை அவர்கள் புரிந்துகொள்ளக் கூடாது என்பதால் உருவானதாக இருக்கும் என்றே தற்போதுள்ள திருநங்கையர் கருதுகின்றனர். தற்போது இந்த சங்கேத பாஷைகள் பேசுவது குறைந்துள்ளது. பொதுமக்களோடு திருநங்கையரும் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கும் சூழலில் அது குறைகிறது. ஆனால் உறவுமுறைகள், பாவ்படுத்தி போன்ற சொற்கள் நீடித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மூத்தவரை மதிப்பது தொடர்பாகச் சிலவற்றை இங்கே பார்த்தோம். அது மற்றவர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பழக்கம். தன் குருவின் கடனைத் தீர்க்கத் தான் சம்பாதித்ததை எல்லாம் கொடுத்து குருவின் கௌரவத்தைக் காப்பாற்றிய சேலா, சேலாவின் மருத்துவச் செலவுக்காகத் தனக் கிருந்த ஒரு வீட்டை விற்ற குரு என்பது போன்ற நிகழ்வுகளும் இதற்கு உதாரணங்கள். |