

சமையல் என்று சொன்னதும் இந்தப் பெண்களுக்கு எங்கிருந்துதான் இவ்வளவு உற்சாகம் வருகிறதோ! இரண்டு பெண்கள் சந்தித்துக்கொண்டால் உடனே சமையலைப் பற்றியும் சேலை பற்றியும் பிள்ளைகளின் படிப்பைப் பற்றியுமே பெரும்பாலும் பேசுகின்றனர். காலையில் என்ன சமைத்தேன், எப்படிச் சமைத்தேன், எப்படி எல்லாரும் விரும்பிச் சாப்பிட்டனர் என்று விலாவாரியாகப் பேசுகின்றனர். ஏனோ எனக்கு இந்தக் கலை கைவர மாட்டேன் என்கிறது.
காலையில் என்ன சமைத்தோம் என்பது பற்றி மாலையில் பேச அது என்ன அவ்வளவு முக்கியமான விஷயமா? சமைப்பதையும் தாண்டி உலகில் முக்கியமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றனவே. உடனே, ‘உலகப் பொருளாதாரம் பற்றியா பேசச்சொல்கிறாய்? அவர்களுக்கு விருப்பமானதை அவர்கள் பேசுகிறார்கள், உனக்கென்ன?’ என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. நான் சொல்ல வருவது என்னவென்றால், சமையலறையையும் தாண்டிப் பெண்கள் விஷய ஞானம் உள்ளவர்களாகத் திகழ வேண்டும் என்பதுதான்.
பெண்கள் சமையலறைகளில் தங்களையே தொலைத்துவிடுகின்றனர். ஆனால், நம் பெண்களுக்குத் தங்களைத் தேடும் பிரக்ஞை இருப்பதாகத் தெரியவில்லை. வாழ்வின் பெரும் பகுதியைக் குடும்ப உறுப்பினர்களுக்குச் சமைத்துப்போடுவதற்காக அடுக்களையில் தொலைத்துவிட்டுத் தனக்கென எந்தவொரு தனித்துவமும் இல்லாமல் போய்விடுகின்றனர். சரி, அவர்கள் செய்யும் சேவைக்கு அங்கீகாரமாவது கிடைக்கிறதா? அதுவும் இல்லை. கணவரும் குழந்தைகளும் தரும் பட்டம், ‘அவளுக்கு ஒண்ணும் தெரியாது’ என்பதுதான்.
ஆனால், அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. பெண்களில் எத்தனை பேர் நாளிதழ்களைப் படித்துப் பொது அறிவை வளர்த்துக்கொள்கிறோம்? பொது அறிவு என்பது பக்கத்து வீட்டில் என்ன நடந்தது, மூன்றாவது தெரு பெண் யாரைக் காதலிக்கிறாள் என்பது போன்ற அதிமுக்கியமான நிகழ்வுகள் அல்ல! எத்தனை பேருக்கு வங்கிக் கணக்கைக் கையாளத் தெரியும்? சீட்டு போட்டுத் தவணையில் பொருள்கள் வாங்கும் கணக்கு அல்ல நான் சொல்ல வருவது. பகலில் ஸ்மார்ட் போன் வீடியோக்களிலும் மாலை வேளைகளில் தொலைக்காட்சித் தொடர்களிலும் மூழ்கிக் கிடப்பது பலரது வாடிக்கைதானே!
நம் சமையல் முறைகள் அவ்வளவு எளிமையாக இல்லை என்று எனக்குத் தோன்றும். காலையில் நாம் சமைக்க எடுத்துக்கொள்ளும் நேரம் சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம். இதில் முந்தைய நாள் முஸ்தீபுகளின் நேரத்தை நான் கணக்கில் சேர்க்கவில்லை. முந்தைய நாள் முஸ்தீபுகள் என்று நான் சொன்னது இட்லி, தோசை, ஆப்பம் போன்ற டிபன் வகைகளுக்கு மாவாட்டுவதைத்தான். மதியம் சமைப்பதற்குச் சுமார் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொள்கிறோம். அதற்கு முன்பு காய்கறி வாங்குவதற்கு எனத் தனியே அரை மணி நேரம். இரவில் சமைக்க ஒரு மணி நேரம். இடையிடையே டீ, காபி, பால் என்று நேரம் பறந்தோடுகிறது. ஆனால், வெளிநாடுகளில் சமைப்பதற்கு இவ்வளவு நேரத்தைச் செலவழிப்பதில்லை. அவர்களுடைய மெனுவில் இவ்வளவு பதார்த்தங்கள் கிடையாது. வீட்டில் உள்ளோர் அனைவருமே பணிக்குச் செல்வதால் சமையலை எளிமையாகச் செய்கின்றனர். ஆண், பெண் பாகுபாடின்றி வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்கின்றனர். பதின் பருவத்தினர்கூடக் கட்டாயம் பெற்றோருக்கு உதவ வேண்டும்.
ஆனால், நம் நாட்டில் எல்லாமே தலைகீழ். நேரம் அதிகமானாலும் சாப்பாட்டுக்குச் சுவை ஊட்டுகிறேன் என்று நெய்யையும் முந்திரியையும் அனைத்திலும் வாரி இறைத்துச் சர்க்கரை வியாதியையும் கொலஸ்ட்ராலையும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்போர் அதிகம். சமையல் குறித்த கற்பிதங்களை விடுத்துச் சமையலை எளிதாக்குங்கள். சுவையைவிட ஆரோக்கியமே முதன்மை என்று சமைக்க வேண்டும். உங்கள் பொன்னான நேரத்தை உங்களுக்கான நேரமாக்கி, உங்களுக்காகச் செலவிடுங்கள் தோழிகளே.
- முருகேஸ்வரி ரவி, சென்னை.