

நான் எட்டாம் வகுப்பு படித்தபோது வார இதழ்களில் வரும் சிறுகதைகள், நாவல்கள் குறிப்பாக, சுஜாதா, சிவசங்கரி, ராஜேஷ்குமார் ஆகியோரின் நூல்களைப் படிக்கும் வழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் என் அம்மாவிடம் இருந்து வந்தது. அம்மா தினமும் இரவில் புத்தகம் படிக்காமல் உறங்க மாட்டார். 1989இல் நான் பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரிக்குச் செல்லும் ஆசை இருந்தும், கல்லூரிப் படிப்பு எனக்கு எட்டாக் கனியானது. காரணம், கிராமப்புறங்களில் பெண் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பிப் படிக்கவைக்கத் தயங்கிய காலம் அது.
ஓரிரு ஆண்டுகளில் திருமணமாகிச் சென்னைக்கு வந்தபோது அவ்வப்போது என் கண்களில் படும் புத்தகங்களைப் படிக்கத் தவறியதில்லை. கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’, அறிஞர் அண்ணாவின் ‘ஓர் இரவு’, காமராசர் வாழ்க்கை வரலாறு, சுகி. சிவம் எழுதிய, ‘மனசே, நீ ஒரு மந்திரச் சாவி’ போன்ற நூல்களை விரும்பிப் படித்தேன். என் இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் வாசிப்புப் பழக்கத்தின் அவசியத்தைச் சொல்லி வளர்த்திருக்கிறேன்.
தற்போது இருவருக்கும் திருமணமாகி என் கடமைகள் ஓரளவு முடிந்த நிலையில் என்னுள் இருந்த புத்தக வாசிப்பு மீண்டும் துளிர்விடத் தொடங்கி யிருக்கிறது. வர்த்தமானன் பதிப்பக வெளியீடுகளான சங்க இலக்கியத் தொகுப்பு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தொகுப்பு ஆகியவற்றை வாங்கிப் படித்துவருகிறேன். வாசிப்பதால் சிந்தனை விரிவடைகிறது. அதன் விளைவாகக் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். நான் எழுதியவற்றை என் கணவரும் மகள்களும் படித்து விட்டுப் பாராட்டுவார்கள்.
தன்னம்பிக்கை, தைரியம், ஒரு பிரச்சினையை எப்படிக் கையாள வேண்டும் என்கிற புரிதல் என்னுள் ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன். நல்ல புத்தகங்களைத் தேடித் தேடிப் படிப்பதிலேயே என்னுடைய நேரத்தைச் செலவழிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். வரும் தலைமுறையினருக்கு வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க வேண்டுமெனில் பிள்ளைகளின் முன் நாம் புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவர்களுக்கும் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து, படிக்கும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.
- சசி சிவாஜி, பட்டாபிராம், சென்னை.
| புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்கக முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள். |