

முதன்முதலாகக் கதைசொல்லியாக வகுப்புக்குள் நுழைந்தேன். மாணவர்கள் கதை கேட்கும் ஆர்வத்துடன் என் முன் அமர்ந்தனர். நானும் எனக்குத் தெரிந்த இரண்டு கதைகளைக் கூறிவிட்டு வந்துவிட்டேன். ஆனாலும், என் மனதில் சிறு நெருடல். சுவாரசியமற்ற வகுப்பறையாக இருந்ததாக எனக்குத் தோன்றியது. அடுத்த வகுப்புக்குச் செல்கையில் வனிதாமணி மூலம் நான் அறிந்துகொண்ட ‘சித்துண்ணி’ கதையோடு வகுப்பறைக்குள் நுழைந்தேன்.
வேட்டைக்குச் செல்லும் அரசனின் நடை, முக பாவனையோடு வகுப்பறையைக் கற்பனை வனமாக்கி, பிரத்யேக உடல் மொழியோடு கதையைக் கூறி முடித்தேன். அன்றைய வகுப்பறையில் மாணவர்கள் கரவொலி அடங்க வெகு நேரமாயிற்று.
இந்த உற்சாக மனநிலையை விட்டுவிடக் கூடாது என்று நானும் சிறு சிறு பயிற்சியோடு அடுத்தடுத்த வாரங்களில் கு.அழகிரிசாமியின் ‘வெறும் நாய்’, கி.ராஜநாராயணனின் ‘கதவு’ கதைகளோடு என் கதைப் பயணத்தைத் தொடர்ந்தேன். இப்படி நானே தொடர்ந்து கதை கூறுவது ஒருவழிப் பயணமாகத் தோன்றியது. இந்த ஒருவழி கதைப் பயணத்தை மாற்றினேன். சிறுகதைத் தொகுப்பான கதை நேரம் புத்தகத்தில் இருந்த வேல.ராமமூர்த்தியின் ‘ஆசை தோசை’ கதையைக் கூறத் தொடங்கும் முன்பு அன்றைய கதை கூறும் வகுப்பைக் கதையின் மையக் கருத்திலிருந்து கேள்விகளோடு தொடங்கத் திட்டமிட்டேன்.
“எத்தனை பேருக்குத் தோசை பிடிக்கும்?”
“எத்தனை வகையான தோசைகள் கடைகளில் கிடைக்கின்றன?” என்று கேள்வி எழுப்பியவுடன் மாணவர்கள் குதூகலமாகப் பதில் கூறத் தொடங்கினர்.
“நூடுல்ஸ் தோசை, மஷ்ரூம் தோசை, சாக்லெட் தோசை” என்று எனக்குத் தெரியாத பல தோசைகளின் பெயர்களை அடுக்க ஆரம்பித்து விட்டனர். இப்போது கண் முன் தோசை கடை விரிக்கப்பட்டிருந்தது. “தம்பி போதும் போதும்” என்று கூறி விஜயநகரப் பேரரசு காலத்தில்தான் உணவு, விற்பனைப் பொருளானது என்கிற வரலாற்றையும் இணைத்துக் கூறியவுடன் மாணவர்களின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
அடுத்தகட்ட நகர்வாக வகுப்பறையில் குறும்படச் சோதனையைச் செயல் படுத்தினோம். ‘டிபன் பாக்ஸ்’, ‘ஒரு மதிப்பெண்’, ‘கம்பளிப்பூச்சி’, ‘கர்ணமோட்சம்’ ஆகிய குறும்படங்களைத் திரையிட்டுப் பார்த்தோம். அடுத்தடுத்த வகுப்புகளின் செயல்பாடுகளைக் குறும்படங்களைப் பார்த்து நடிப்பதும் அதையொட்டிக் குழு விவாதம் நிகழ்த்துவதுமாகப் பயணத்தைத் தொடர்ந்தோம். தற்போது மாணவர்கள் தாங்களே கதைகளை உருவாக்குபவர்களாகவும் நடிப்பவர்களாகவும் மாறியிருக்கின்றனர். கூட்டுப்புழுவாக இருந்த என் மாணவர்களுக்கு வண்ணச் சிறகுகளை முளைக்க வைத்த மகிழ்ச்சியோடு எங்கள் பயணம் தொடர்கிறது.
- தா.வனிதா, முத்தரசநல்லூர், திருச்சி.
| தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை பிறருக்குப் பாடமாக அமையும் அனுபவம் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். முகவரி: இந்து தமிழ்திசை, பெண் இன்று, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in |