

ந
டிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த சர்ச்சைகளும் கருத்துகளும் இப்போது அதிகரித்துவருகின்றன. ஆனால், கலைத் துறையிலிருந்து அரசியலுக்குள் வருவது புதிய நடைமுறையல்ல. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடி, மேடையில் கைதாகி சிறை சென்ற தமிழக நாடகத் துறை கலைஞர்கள் வரலாற்றில் முன்னோடிகளாக உள்னர். அன்றைய கலைஞர்களின் அரசியல் பங்கேற்பை இன்றைய நடிப்பு அரசியலோடு ஒப்பிடவே முடியாது. அத்தகைய நாடகக் கலைஞராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கிய கே.பி. ஜானகி, 1917-ல் பத்மநாபன் - லட்சுமி தம்பதியருக்கு மதுரையில் பிறந்தார்.
கீழ ஆவணி மூல வீதியிலுள்ள அரசுப் பள்ளியில் அப்போதே எட்டாம் வகுப்பு தேறியவர். குரல்வளம் மிக்க ஜானகி, பழனியாபிள்ளை பாய்ஸ் கம்பெனியில் பாடகராக 12 வயதில் சேர்க்கப்பட்டார். வறுமைதான் அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. அடுத்தடுத்து நாடகங்களில் கதாநாயகியாக வளர்ந்தார். வள்ளித் திருமண நாடகத்தில் வள்ளியாகவும் கோவலன் நாடகத்தில் கண்ணகி, மாதவி என இரு வேடங்களிலும் மிகச் சிறப்பாக நடித்தார்.
இப்படியான நாடகப் பங்கேற்புதான் நாட்டின் அடிமைத்தளையை அறிவதற்கான வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக்கொடுத்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி என்பதால் தேசபக்தி மிக்க நாடக நடிகரான எஸ்.எஸ். விஸ்வநாததாஸுடன் யாரும் நடிக்க மறுத்தார்கள். ஆனால், ஜானகி அவருக்கு இணையாக நடிக்க ஒப்புக்கொண்டதோடு விடுதலைப் போராட்ட உணர்வையும் அரசியலையும் அவரிடமிருந்தே அறிந்துகொண்டார்.
மேடைகளில் விடுதலை கீதங்களை இசைக்கும் குயிலானார் ஜானகி. ஒட்டுமொத்த காங்கிரஸ் கூட்டமும் ஆர்ப்பரிக்கும் அளவுக்கு ‘வந்தே மாதரம்’,‘ பாரத சமுதாயம் வாழ்கவே’, ‘விடுதலை விடுதலை’ போன்ற பாடல்களைப் பாடி போராட்ட வீரர்களை உற்சாகப்படுத்தினார். ‘காந்தி சொல்லைத் தட்டாதீங்க காங்கிரஸ்காரர்களே’ என்ற பாடல் காங்கிரஸ் தொண்டர்களை மீண்டும் மீண்டும் கேட்கவைத்தது.
தென்னிந்தியாவில் யுத்த எதிர்ப்புக்காகச் சிறைவைக்கப்பட்ட முதல் பெண் ஜானகி. இவரோடு சென்னை ருக்மணியும் கைதானார். விடுதலைப் போராட்டத்தில் கைதாகி சிறைசென்ற தென்னிந்தியாவின் முதல் பெண்ணும் ஜானகிதான்.
அரசியல்கைதியாக ஐந்துமுறை வேலூர் சிறைக்குச் சென்றுவந்தவர். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டவர். பின்னாளில் கம்யூனிஸ்ட் இயக்கமாகப் பரிணமித்தபோது அதைப் பின்பற்றிவந்தார்.
சுபாஷ் சந்திரபோஸ் மதுரை வந்தபோது பிரிட்டிஷ் அடக்குமுறைகளை மீறி முத்துராமலிங்கம் அடிகளாரோடு ரயிலடியில் வரவேற்பு நிகழ்வுக்குத் தலைமை தாங்கி வரவேற்று, குதிரை வண்டியில் அவரோடு சென்றார். இந்திய விடுதலைக்குப் பிறகு நடைபெற்ற மதுரை மாநகராட்சித் தேர்தலில் 5-வது வார்டு பூந்தோட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
எதிர்த்துப் போட்டியிட்ட பிரபல காங்கிரஸ் தலைவர் சீனிவாசவரத அய்யங்கார் மற்றும் பரம்பரை கவுன்சிலர் முனீஸ்வர அய்யர் இருவரையும் தோற்கடித்தார். மிகப் பெரிய வெற்றி என அப்போதே பலதரப்பினரும் வியந்து பாராட்டும் அளவுக்குச் சாதித்தார். அதன்பின் மாவட்ட கவுன்சில் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ல் அண்ணா தலைமையில் அமைந்த ஆட்சியில் முதல் பெண்ணாக மதுரை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.
ஜானகி அம்மாளின் சட்டமன்ற உரைகளில் விவசாயிககள், கூலித்தொழிலாளர்கள் ஆகியோரின் பிரச்சினைகளே அதிகம் இடம்பிடித்தன. துவரிமான் குத்தகை விவசாயிகளின் நிலமீட்புப் போராட்டத்தில் ஏர்பிடித்து நிலத்தில் இறங்கி ஜானகியம்மாள் உழுதது பெண்ணியக்க வரலாற்றில் முக்கிய மைல்கல். துப்பாக்கிகளோடு நின்ற காவல்துறையைச் செய்வதறியாது திகைக்கவைத்த அந்தச் சம்பவம் அவரது வீர வரலாறாக மதுரை மண்ணில் பதிந்துள்ளது.
‘மலைவேடன்’ பழங்குடியின மக்களைப் பட்டியலினத்தில் இணைக்கும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார். அன்றைய முதல்வர் கருணாநிதியின் கவனத்துக்கும் அதைக் கொண்டுசென்றார். அதன் பிறகுதான் மாநில அரசு சார்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரர் என்பதற்கான பட்டயத்தையும் பரிசளிப்பையும் அரசு தருவதற்கு முன்வந்தபோது, அதை ஏற்றுக்கொள்ள மறுத்துத் திருப்பியனுப்பியவர். “கடமையைச் செய்தேன், சன்மானம் எதற்கு?” என்றார். மேலும், நாடகக் கலைஞராக உழைத்துச் சேர்த்த 200 பவுன் நகைகள் உள்ளிட்ட சொத்துகளை சுதந்திரப் போராட்ட காலத்திலேயே விற்றுச் செலவழித்தார். சொந்த வீட்டையும் இழந்தார். வாடைகை வீட்டில் குடியேறியவரை இறுதிவரை அமைப்பினர்தான் கவனித்துக்கொண்டனர்.
கம்யூனிஸ்ட் அமைப்பினர் அனைவரையும் ‘தோழர்’ என்றுதான் அழைப்பார்கள். ஆனால், ஜானகி அம்மாளின் எளிமை, அர்ப்பணிப்பு, எளியவர்கள் மீது கொண்ட பேரன்பு இவைதான் என்னைப் போன்றோருக்கு அவரை ‘அம்மா’ என்றழைக்கும் பேரன்பைத் தந்தது!
கட்டுரையாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com