பார்வை: ஆண் அறியாத பெண் சுவை விருப்பம்

பார்வை: ஆண் அறியாத பெண் சுவை விருப்பம்
Updated on
3 min read

“இந்தா இந்த மசாலா வைக் கொஞ்சமா தூவி விடு. அப்புறம் பாரு” என மேல் வீட்டுப் பெண்ணின் குரல் சத்தமாகக் கேட்கிறது.

“நிஜமாவா?” என்கிறாள் இலா.

“இன்னுமா சந்தேகம்? இதைச் சாப்பிட்டு உனக்காக உன் புருஷன் தாஜ்மகால் கட்டுவாரு பாரு” என்கிறாள் மேல்வீட்டுப் பெண்.

திருமணமாகி ஒரு குழந்தை பிறந்த சில வருடங்களில் தனக்கும் கண வனுக்கும் ஏற்பட்ட இடைவெளியை இலா உணர்கிறாள். சாப்பாட்டின் மூலம் அதை ஈடுகட்ட முடியுமா என முயல்கிறாள்.

தினம் தினம் புதிது புதிதாகச் சமைக்கிறாள். அவள் வேலை செய்யும் போதும்கூடத் தொலைக்காட்சியில் சமையல் குறிப்பு பின்னணியில் ஒலித்தபடி இருக்கிறது. அன்று மாலை தன்னை அழகுப்படுத்திக்கொண்டு மிகுந்த எதிர்பார்ப்போடு நிற்கிறாள். கணவன் உள்ளே வருகிறான். இவளை ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. சாப்பாடு பற்றி எதுவும் சொல்வானோ என எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் இலா. எந்தப் பேச்சும் இல்லை.

மதிய உணவைப் பற்றி அவளே கேட்க, அவள் சமைத்து அனுப்பாத உணவு பற்றிப் பதில் சொல்கிறான். தான் கொடுத்து அனுப்பிய உணவு வேறு யாருக்கோ போனதை அப் போதுதான் அறிகிறாள். அங்கிருந்து ‘தி லஞ்ச் பாக்ஸ்’ இந்திப் படத்தின் கதை தொடங்குகிறது.

சமையலறை அரசியல்

இலா, கணவனின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப உணவை ஏன் தேர்ந்தெடுக்கிறாள்? ‘ஆண்களின் இதயத்துக்குள் நுழைய முதலில் அவன் வயிறு வழி நுழைய வேண்டும்’ எனக் காலங்காலமாக இந்தியப் பெண்களுக்கு இங்கே வகுப்பு எடுக்கப்படுகிறது. திருமணமாகிப் போகும் பெண்ணுக்கு அவளுடைய அம்மா தரும் முதல் அறிவுரையே, ‘சமையலறையைக் கைப்பற்று’ என்பதாக இருக்கிறது. சமையலறை யார் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதோ அவர்களே குடும்பத்தின் அதிகார மையம். இது சமையலறை அரசியல் மட்டுமல்ல. குடும்பத்தில் ஆண்களை உணவின் மூலம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க பெண்கள் செய்யும் உத்தி.

ஆசை ஆசையாகச் சமைத்துத் தரும் இலா, அதைக் கண்டுகொள்ளாத கணவன், தினமும் தவறுதலாகச் செல்லும் மதிய உணவை விரும்பும் ஷாஜன் என உணவை மையமாக வைத்து கதை நகர்கிறது. இலாவும் ஷாஜனும் லஞ்ச் பாக்ஸ் மூலம் கடிதம் எழுதிக் கொள்கிறார்கள். அன்றாடங்களைப் பகிர இலாவுக்கு ஒரு வடிகால் கிடைக்கிறது.

இரவு சாப்பிடும்போது இலா, கணவன் தன்னிடம் ஏதாவது பேச மாட் டானா என ஏக்கத்துடன் பார்ப்பாள். அவள் கணவனோ டிவியில் பங்குச்சந்தை பற்றிய செய்தியைப் பார்த்துக் கொண்டிருப்பான். அவள் வீட்டில் மெளனம் குடியிருக்கும், கணவன்-மனைவி உறவுக்குள்ளும்.

ஷாஜன், தனிமையை விரும்புபவன். இலாவைவிட மூத்தவன். இலாவின் பிரச்சினைகளை அவன் கையாளும் விதமே அலாதியாக இருக்கும். ஒவ்வொரு நாளும் மதிய உணவு கடையில் இருந்து வந்துள்ளதா அல்லது தவறுதலாக வரும் இலாவின் உணவா என்பதை அறிய முயலும் காட்சி கவிதையாக இருக்கும். தினமும் உணவுப் பையை லேசாகத் திறந்து வாசனை பிடிப்பான். இலாவின் சமையல் வாசம் வந்ததும் புன்னகையோடு திருப்தியாக மூடுவான். எப்போது மணி ஒன்று ஆகும் எனப் பரிதவிப்பான்.

மனைவி இறந்து தனிமையில் இருக்கும் ஷாஜனிடம் வீட்டு உணவு மாற்றங்களை ஏற்படுத்தும். இலாவின் கடிதமும் உணவும் ஷாஜனை இறுக்கம் தளர்த்திச் சிரிக்க வைக்கும். படத்தில் இலாவின் அம்மா கதாபாத்திரம் முக்கியமான ஒன்றை உணர்த்தும். இலாவின் அப்பாவுக்குப் புற்றுநோய். பல வருடங்களாக அம்மாதான் உடனிருந்து கவனித்துக்கொள்வார். அன்று அப்பா இறந்த தகவல் கேட்டு இலா பதறி ஓடுவாள். இலாவின் அம்மாவோ, “எனக்குப் பசிக்குது. பரோட்டா வேண்டும்” என்பார். இலா அதிர்ச்சியாகப் பார்ப்பாள். அந்த இடத்தில் இலாவின் அம்மா பேசும் வசனம் சில வரிகள்தாம். அவை திருமணத்தின் இருண்ட பக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டும்.

சமையல் வேலை ஓய்வதில்லை

ஒரு பெண் தனக்குப் பிடித்த உணவைச் சமைப்பதைவிடத் தன் குடும்பத்தின் உணவு விருப்பத் துக்கு முக்கியத்துவம் தருகிறாள். ஏனோதானோ என்று சமைக்க முடியாது. குறைந்தபட்சம் ஒவ்வொரு நாள் சமையலுக்குமான பொருள் களின் இருப்பை உறுதிசெய்வது, ஒரே மாதிரியான உணவு மீண்டும் மீண்டும் வராமல் பார்த்துக்கொள்வது, ஆரோக்கியமாகவும் அதேநேரம் பொருள்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, சமையலுக்கு முன், சமையலின் போது, சமையலுக்குப் பின் என வேலைகள் யாவும் பயங்கர உடல் உழைப்பைக் கோருபவை. ஆனால் ஆண், “எங்க அம்மா சமையல் போல வராது” என எளிதாகச் சொல்லி ஒருவரியில் கடந்துவிடுகிறான். அவ்வளவு உழைப்பும் ஒருவரியில் அலட்சியப்படுத்தப்படுகிறது. ஜெயகாந்தனின், ‘கங்கை எங்கே போகிறாள்’ நாவலில் வரும் அம்மா கதாபாத்திரம், ‘புளி கரைச்சி கரைச்சி என் வாழ்க்கையே கரைஞ்சிடுச்சு’ என விசனப்படுவது நினைவுக்கு வருகிறது.

ஆண்கள் தன் வீட்டுச் சமையல் பற்றி எழுதிய வற்றில் பெரும்பாலும் தன் அம்மா/பாட்டி/ மனைவி ஆகியோரின் சமையல் பற்றிச் சுவைசார் பெருமிதம் ததும்பும். ‘எந்நேரமானாலும் சமைத்துத் தருவார்கள்’ எனப் பெருமை பேசு வார்கள். ஆனால், எங்குமே தன் வீட்டுப் பெண்களுக்குப் பிடித்த உணவு என்ன, அவர்களுக்குத் தான் சமைப்பதில் எது பிடிக்கும் என எழுதியோர் அபூர்வம். நம்மைச் சுற்றியுள்ள பெண்களுக்குப் பிடித்த உணவு எது எனத் தெரிந்து வைத்திருக்கிறோமா, மாதத்தில் சில நாள்களாவது அவர்களுக்குப் பிடித்த உணவை நாம் சமைத்துத் தருகிறோமா, அமர வைத்துப் பரிமாறு கிறோமா என ஆண்கள் கொஞ்சம் சுயபரீசிலனை செய்து கொள்ளலாம். பெண் சமைத்த உணவு மட்டுமல்ல அவளும் கொண்டாடப்படாதபோது அவளுள் ஏற்படும் வெற்றிடத்தை எதைக்கொண்டு நிரப்புவது?

கட்டுரையாளர், சிறார் எழுத்தாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in