

புவியின் நலன் காக்கும் பொருட்டு ஞெகிழி உள்ளிட்ட செயற்கைப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையை நோக்கிப் பலர் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட இவர்களோடு கைகோக்கும் வகையில் வாழைநார்ப் பொருள் களைத் தயாரித்துவருகிறார் சுகந்தி. நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த இவர், வாழைநாரைப் பயன்படுத்தி மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிப்பதுடன், பெண்கள் பலருக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகிறார்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. தனியார் வங்கி ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்துவருகிறார். வேலைக்காக நாமக்கல் வந்தவர், இங்கேயே குடியமர்ந்துவிட்டார். எம்.ஏ., பி.எட்., முடித்திருக்கிறார். ஆசிரியப் பயிற்சி முடித்திருந்தாலும் தொழில் முனைவோராக வேண்டும் என்பது சுகந்தியின் சிறுவயது குறிக்கோள். இதற்கு அடித்தளமிட்டவர் அவருடைய தந்தை பி.பழனிசாமி.
“என் அப்பா சிறிய அளவிலான சைக்கிள்கள் பழுதுபார்க்கும் கடையை நடத்திவருகிறார். பள்ளி விடுமுறை தினங்களில் அவருடன் கடையில் அமர்ந்து பணிபுரிவேன். பின்னாளில் தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்கிற உந்துதலை அது ஏற்படுத்தியது. வளர்ந்த பிறகு தொழில்முனைவோராக ஆவதற்கு என்ன செய்யலாம் என யோசித்தேன். வாழைநாரைப் பயன்படுத்தி ஜன்னல், கதவுகளுக்குத் திரைச்சீலைகள், கைப்பைகள், கூடைகள், ஆவணங்கள் வைக்கப்படும் ஃபைல்கள், தலையணை போன்றவற்றைத் தயார்செய்யலாம் என்று தோன்றியது. வாழைநாரைப் பயன்படுத்தி மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தேனியில் தயார்செய்கிறார்கள் எனக் கேள்விப்பட்டு அங்கே சென்றேன். தயாரிப்பு முறை குறித்துத் தெரிந்துகொண்டேன். சிறிய அளவில் தொழிலைத் தொடங்கலாம் என ஆரம்பத்தில் கைவினைப் பொருள்களை மட்டும் தயாரித்தோம். பின்னர் இயந்திரத்தைப் பயன்படுத்தி மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரித்தோம்” என்கிறார் சுகந்தி.
இவர்கள் தயாரிக்கும் பொருள்களில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் இயற்கை வண்ணங்களையே பயன்படுத்துவதாக சுகந்தி குறிப்பிடுகிறார். இங்கே உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இவர்கள் நேரடியாக விற்பனை செய்வதுடன் கடைகளுக்கும் மொத்த விற்பனை விலையில் வழங்குகிறார்கள். ஞெகிழிக்கு மாற்று என்பதால் இவற்றுக்கு மக்கள் மத்தியில் கணிசமான வரவேற்பும் உள்ளது.
பெண்களை முன்னேற்றுவதே குறிக்கோள்
வாழைநார்ப் பொருள்களைத் தயாரிக்கத் தேவையான வாழை மரங்களை மோகனூர் சுற்றுவட்டாரத்தில் இருந்து கொள்முதல் செய்கின்றனர். இங்கே கணிசமாக வாழை சாகுபடி மேற்கொள்ளப்படுவதால் வாழை மரங்கள் கிடைப்பதில் சிக்கல் இல்லை.
“அறுவடைக்குப் பின் வெட்டி எறியப்படும் வாழை மரங்களுக்குக் குறிப்பிட்ட விலை கொடுப்பதால் விவசாயிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் உதவ முடிகிறது.
எங்கள் தயாரிப்புகள் குறித்த தகவல்களைச் சமூக ஊடங்கள் வழியே பார்த்துப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்” என்கிறார் சுகந்தி.
வாழைநாரைப் பயன்படுத்திப் பொருள்கள் தயாரிப்பது குறித்து இவர்கள் பயிற்சியும் அளிக்கிறார்கள். வாழை மரங்கள் மட்டுமன்றித் தென்னங்கீற்று, கோரைப்புற்களைப் பயன்படுத்தியும் சில பொருள்களைத் தயாரிக்கிறார்கள்.
“எனினும், வாழை மரங்களே எங்களது முதன்மை மூலப்பொருள். அதைப் பயன்படுத்தி 100 வகையான பொருள்களைத் தயாரிக்க முடியும். எங்களது நிறுவனத்தில் 15 பெண்கள் பணிபுரிகின்றனர். இங்கே பணிபுரியும் ஒவ்வொரு பெண்ணையும் தொழில்முனைவோராக மாற்ற வேண்டும் என்பது எனது எதிர்காலக் குறிக்கோள்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் சுகந்தி.