திருநம்பியும் திருநங்கையும் - 26: யாரைப் பேய் பிடித்திருக்கிறது?

திருநம்பியும் திருநங்கையும் - 26: யாரைப் பேய் பிடித்திருக்கிறது?
Updated on
3 min read

“இப்போ குழந்தைக்கு என்ன வயசு?”

“15 வயசாகுது டாக்டர். அவன் பத்து வயசுல இருந்தே பொண்ணு மாதிரி நடப்பான், பேசுவான். இப்போல்லாம் என் பொண்ணோட துப்பட்டாவைச் சட்டைக்கு மேல போட்டுக்குறான்.”

“நீங்க சொல்லிப் பார்த்தீங்களாம்மா?”

“நான் நெறைய தடவை சொல்றேன் டாக்டர். அப்போ அமைதியா இருக்கான். அப்புறம் அதையேதான் செய்யறான்.”

“வேறு என்னவிதமான வித்தியாச நடவடிக்கைகளில் ஈடுபடுறான்?”

“ஒரு தடவை பீட்ரூட் எடுத்து உதட்டுல தடவிக்கிட்டான். அவங்கப்பா மூணு மாசத்துக்கு ஒருமுறை முடிவெட்டக் கூட்டிட்டுப் போவாரு. இப்போல்லாம் முடியை வெட்ட மாட்டேன்னு அழறான் டாக்டர்.”

“அக்கம்பக்கத்துல எப்படிப் பழகுறான்?”

“பொண்ணுங்களோட சகஜமா பழகுறான். அவனுக்குத் தோழிகள்தாம் அதிகம். அவங்களும் இவனோட ரொம்ப சந்தோசமா விளையாடுறாங்க. விளையாட்டுல இவன் அம்மா, அக்கா கேரக்டர்தான் எடுத்துக்குறான். ஆம்பள பசங்களோட நின்னு பேசக் கூடக் கூச்சப்படுறான். என் பையனைச் சரிசெய்ய ஏதாவது சிகிச்சை உண்டா டாக்டர்?”

  

“சாமி, நான் ஏறாத இடம் இல்லை. என் பேரனை எப்படிச் சரி பண்றதுன்னு தெரியலை. அவன் உடம்புல ஒரு பொம்பள பேய் புகுந்துடுச்சின்னு நெனக்கிறேன். அவன் சேட்டை எல்லாம் பொம்பள மாதிரியே இருக்கு. நீங்க எப்படியாவது சரிபண்ணிடுங்க சாமி.”

“இந்தக் காளியாத்தாகிட்ட வந்துட்டீங்கல்ல, கவலைப்படாதீங்க. அவனோட கையில நான் கொடுக்குற மந்திரக் கயிறைக் கட்டுங்க, எல்லாம் சரியாயிடும்.”

“சாமி, கொல்லி மலை எட்டுக்கை காளியம்மன் கோயில்ல இருந்துகூட அவனுக்குக் கயிறு வாங்கியாந்து கட்டினேன். ஆனாலும், அவன் மாறலை சாமி.”

“அப்படீன்னா அவனை மலையனூர் கோயிலுக்கு அழைச்சிட்டுப் போய் அந்த அம்மனுக்கு முப்பலி ஒண்ணு கொடுத்துட்டு வருவோம். அப்புறம் பாருங்க எல்லாம் சரியாயிடும்.”

  

கதையல்ல நிஜம்
 திருநங்கைகளைக் குடும்பம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அனைவரும் நினைக்கிறோம். ஆனால், அங்கே சமூகத்தில் சிலர் அந்தக் குடும்பத்தில் இருந்து அந்தக் குழந்தையை வெளியேற்ற நினைக்கிறார்களே, அது நிறுத்தப்பட வேண்டும்.
 இக்கதையில் வரும் பெற்றோர் சிறந்த திருநங்கையை உலகுக்குத் தருவர். ‘யார் எப்படிப் பேசினாலும் நான் பெற்ற திருநங்கைக் குழந்தை இது; படிக்க வைப்பேன், பண்பாளர் ஆக்குவேன், குழந்தையின் விருப்பப்படி அழைப்பேன், உடை அளிப்பேன்’ எனச் சவாலோடு வளர்த்தால் திருநங்கை மகள் மிகப்பெரிய சாதனை படைப்பாள்.
 லயோலா, ஸ்டெல்லா மாரிஸ், சென்னைப் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், குமாரி ராணி மீனா முத்தையா கல்லூரி, சென்னை அரசு இசைக் கல்லூரி, திருச்சி கலைக் காவேரி, தூத்துக்குடியில் உள்ள அரசு கலை பண்பாட்டுத் துறை போன்றவை திருநர் கல்விக்காக உதவிவருகின்றன. இன்னும் பல கல்லூரிகளும் இந்தப் பட்டியலில் உள்ளன.
 திருநர் சமூகத்துக்கு வேலைவாய்ப்பைத் தர பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தயாராக இருக்கின்றன.
 தமிழக அரசு திருநங்கைகள் நல வாரியம், திருநங்கைகள் தினம், சிறப்பு சுயஉதவிக் குழுக்கள் போன்ற எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. அனைத்து அடையாள அட்டைகளிலும் ‘மூன்றாம் பாலினர்’ என்றே வழங்கிவருகிறது. மத்திய அரசு ‘திருநர் பாதுகாப்புச் சட்ட’த்தையும் இயற்றியுள்ளது.
 மூன்றாம் பாலினத்தவருக்குச் சட்டரீதியாகக் குரல் கொடுக்க தமிழகத்தில் வழக்கறிஞர்களான மதுப்பிரகாஷ், ஆதிலட்சுமி லோகமூர்த்தி, அஜிதா, ராஜகுமார், நூர்தீன் மற்றும் பலர் உள்ளனர்.

“அப்பா, உங்க பையன நெனச்சி கவலைப்படாதீங்க. இந்த ஆபீஸ்ல நீங்க பார்க்குற எல்லாருமே திருநங்கைகள்தாம். அவன் தன்னைத் திருநங்கையா உணர்ந்தா அவனை அப்படியே விடுங்க. அதைச் சாதாரணமா எடுத்துக்கங்க. அப்போதான் அவன் கல்வி பாதிக்காது.

அதோ பாருங்க, உங்க பையன் எல்லாத் திருநங்கைகளோடும் சிரிச்சி பேசி சந்தோசமா இருக்கான். அவனுக்கு இந்த வாழ்க்கை பிடிச்சிருக்கு. 18 வயதுவரை காத்திருங்க. அதுக்கு அப்புறம் அவளாகத்தான் இருக்க ஆசைப்படுறான்னா அது அவள் வாழ்க்கை, அவள் விருப்பம்னு ஏத்துக்கோங்க.”

“இல்லை, என் பையன் திருநங்கை இல்லை. பேசினா சரி ஆயிடுவான். அவன் திருநங்கையா மாறினா என்னால தாங்க முடியாது.”

“அழாதீங்கப்பா. உங்களை மாதிரி பெத்தவங்க மனம் தளராம தைரியமா இருந்தாதான் இந்த மாதிரி குழந்தைகளை வளர்க்க முடியும். இந்தச் சிறு வயதில் அந்தக் குழந்தையின் கல்வி முக்கியம், அவனோட மன நலம் அதைவிட முக்கியம். இப்போ போலீஸ், வழக்கறிஞர், டாக்டர், தொழில் முனைவோர்னு எல்லாத் துறைகளிலும் திருநங்கைகள் வந்துட்டாங்க.”

“மேடம், நீங்க திருநங்கையா இருந்து படிச்சி இந்த நிறுவனத்தை நடத்துறீங்க. எங்களுக்குப் பெருமையா இருக்கு. அவங்கப்பா ஆயிரம் மாத்தி பேசினாலும் பெத்தவ எனக்குத் தெரியுது என் பையன் திருநங்கைதான்னு. சின்ன வயசுல இருந்தே அவனுக்கு என் மேல அதிக அக்கறை இருக்கும். என்னை விடவே மாட்டான். யாராவது அவனை ‘போடா பொம்பளை’ன்னு கிண்டல் பண்ணிடுவாங்க. அதை அவன் வந்து என்கிட்ட சொல்லி அழும்போது எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல மேடம்.

எனக்கு ஏற்கெனவே ஒரு பொண்ணு இருக்கறதால இவன் பிறந்ததும் பேரானந்தம் அடைந்தேன். இப்போகூட என் குழந்தையை நான் அவன் விருப்பப்படி வளர்ப்பேன். மத்தவங்க கிண்டல் பண்றதை மட்டும் என்னால பொறுக்க முடியல மேடம்” என்று அந்தத் தாய் உடைந்து அழுதார்.

“மேடம், அவள் இப்படித்தான் அடிக்கடி அழறா. அவனை எங்க தெரு பசங்க ஒரு தடவை ‘ஒம்போது’ன்னு சொல்லிட்டாங்கன்னு ஓடிவந்து இவகிட்ட சொல்லிட்டு மறுபடி விளையாடப் போயிட்டான். அவனுக்கு அதோட அர்த்தம் தெரியல. ஆனா நாங்க ரெண்டு பேரும் எங்க சாமிக்கு முன்னாடி உக்காந்து மண்டி போட்டு அழுதோம் தெரியுமா?

எங்க தெரு பசங்களுக்கு நான் நெறய சாக்லெட், பிஸ்கட் எல்லாம் வாங்கிக் கொடுப்பேன். அப்போவாவது அந்தப் பசங்க என் பிள்ளையைக் கிண்டல் பண்ண மாட்டாங்கன்னு நினைப்பேன். எத்தனை நாள் நாங்க அவனை இப்படிப் பாதுகாக்க முடியும்? என் மனைவி, என் குழந்தையைப் பத்தி ஒரு கவிதையே எழுதி இருக்கா பாருங்களேன்.

செந்தூரில் வேண்டி சுகமா கருத்தரிச்சேன்

உன்னை ஆணுன்னு எண்ணி மாருல அள்ளி வச்சேன்

ஆறு வரை தெரியலையே என் ராசா..

நீ எடுத்த ஜென்மம் புரியலையே

நீ சாந்து வச்சே.. பொட்டு வச்சே

உன் அப்பன் நாலு சாத்து சாத்தி வச்சான்

நீ மார்கழியில் கோலம் போட்டே

உன் மாமன் மானம் போச்சின்னு ஓலம் போட்டான்

நீ தள்ளக் குலையுமில்லே..தழைக்க வழியுமில்லே

வீதியில நீ நடந்தா ஊர் வாய மூட எனக்குத் தெரியவுமில்லே...

என்று முடிந்தது அந்தக் கவிதை.

“ஒண்ணு மட்டும் உறுதி மேடம். நாங்க உங்களைப் பார்த்ததுல ஒரு உறுதி எடுக்கிறோம். இப்படிப் பொறந்துட்டான், வாழ்க்கையை இழந்துட்டான்னு எங்க பிள்ளையை நாங்க விட மாட்டோம். எங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு திருநங்கைன்னு கம்பீரமா வளர்க்கப் போறோம். இனி அவனைப் பெண்பால் கொண்டு அழைப்போம். நல்ல நிலைக்குக் கொண்டு வருவோம்.”

(தொடரும்)

கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in