பக்கத்து வீடு: 92 வயது ‘மாடல்’!
அழகும் இளமையும் இருக்கும்வரைதான் மாடலிங் துறையில் பிரகாசிக்க முடியம் என்கிற கூற்றைப் பொய்யாக்கியவர்; உலகின் மிகவும் புகழ்பெற்ற வயதான மாடல்; 78 ஆண்டுகளாக மாடலிங் துறையில் நீடித்திருப்பவர் போன்ற சிறப்புகளை உடையவர் என்றாலும் அது குறித்து எவ்விதப் பெருமிதமும் கொண்டவராக இல்லை கார்மென் டெல் ஆர்ஃபீசே. ‘பிடித்த விஷயத்தை வாழ்நாள் முழுவதும் செய்யும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்? எனக்குக் கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் செய்கிறேன். அது என் ஆயுளைக் கூட்டி, முதுமையைத் தடுக்கிறது’ என்கிறார் இவர்.
யார் இந்த கார்மென்?
கார்மென், அமெரிக்காவின் நியுயார்க்கில் 1931ஆம் ஆண்டு பிறந்தவர். ஏழ்மையான குடும்பம். பெற்றோர் பிரிந்ததால் காப்பகங்களில் வளர்ந்தார். ஒருகட்டத்தில் மகளைத் தன்னுடன் அழைத்துச் சென்றார் அவருடைய அம்மா. படிப்பைத் தொடர முடியாததால், கார்மென் பாலே நடனமும் நீச்சலும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு மாதக் கணக்கில் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் வந்தபோது, அவர் நடனத்தையும் நீச்சலையும் கைவிட வேண்டியிருந்தது.
13 வயதில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஒளிப்படக்காரரின் மனைவி ஒருவர், ‘மாடலிங் செய்வதற்கு விருப்பமா?’ என்று கார்மெனிடம் கேட்டார். மாடலிங் வாய்ப்பு வந்தால் தன் குடும்பத்தின் பொருளாதாரக் கஷ்டம் குறையும் என்று கார்மென் நினைத்தார். ஆனால், கார்மெனின் முகம் நன்றாக இருந்தாலும் ஒளிப்படத்துக்கு ஏற்றவாறு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
15 வயதில் கார்மெனின் தாத்தா மூலம் பிரபல ‘வோக்’ இதழ் அட்டையில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது. ஆர்வம், உழைப்பு, நேர்த்தி போன்றவற்றால் வெகு விரைவில் மாடலிங் துறையில் பிரகாசிக்க ஆரம்பித்தார் கார்மென். பிரபல ஒளிப்படக் கலைஞர்கள், பிரபல நிறுவனங்களின் விருப்பத்துக்குரிய மாடலாக மாறினார்.
முறிந்த உறவுகள்
21 வயதில் பில் மைட்ஸ் என்பவரைத் திருமணம் செய்தார். மாடலிங் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும் கணவர் எடுத்துக்கொண்டு, மாதத்துக்கு 50 டாலர்களை மட்டுமே கார்மெனிடம் கொடுப்பார். ஒரே ஆண்டில் இந்த உறவு முறிந்தது. மகளுடன் தனியே வந்துவிட்டார் கார்மென்.
வயதானதால் சில ஆண்டுகளுக்குப் பிறகு மாடலிங் வாய்ப்புகள், குறைய ஆரம்பித்தன. ஒருகட்டத்தில் மாடலிங் துறையிலிருந்து ஓய்வுபெறப்போவதாக அவர் சொன்னதும், அடுத்த திருமண உறவும் முறிந்துபோனது. சில ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடி வந்தது. 47 வயதில் மீண்டும் முழு நேர மாடலாக மாறினார் கார்மென். அதற்குப் பிந்தைய 46 ஆண்டுகளில் ஓய்வுபெறும் எண்ணமே அவருக்கு ஏற்படவில்லை.
“நான் என்றுமே எனக்கு வயதாகிறது என்று நினைத்துக் கவலைப்பட்டதே இல்லை. எனக்கு வயதாவது நிஜம். அதை ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்ப உணவு, உறக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனமாக இருக்கிறேன். எனக்கு வெள்ளை முடி தோன்றியபோது முன்னாள் கணவர் அதை வேகமாகப் பிடுங்கினார். நான் இந்தச் செயலை எதிர்பார்க்கவில்லை. அன்றிலிருந்து நான் தலைமுடிக்குச் சாயம் போடுவதை நிறுத்திவிட்டேன். என் வெள்ளை முடியே எனக்கான அடையாளமாக மாறிப்போனது. பழைய வீட்டைச் சீர்செய்வதுபோல் ஒன்றிரண்டு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளேன். மற்றபடி என் அழகைத் தக்கவைக்க நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நான் இளமையாக இருந்த காலத்தைவிடக் கடந்த 15 ஆண்டுகளில்தாம் பல்வேறு பத்திரிகைகளின் அட்டைகளை அதிக அளவில் அலங்கரித்திருக்கிறேன். ஃபேஷன், மாடலிங் உலகில் இருந்த ‘இளமைக்கு மரியாதை’ என்கிற போக்கை என்னால் மாற்ற முடிந்திருப்பதில் திருப்தி” என்கிறார் கார்மென்.
வாழ்க்கைக்கு என்ன வேண்டும்?
2008ஆம் ஆண்டில் நீண்ட கால மாடல் என்கிற கின்னஸ் சாதனையிலும் கார்மென் இடம்பெற்றிருக்கிறார். கார்மெனைவிட வயதானவர்கள் ஓரிருவர் மாடலிங்கில் இருந்தாலும், இவர் மட்டுமே நீண்ட காலம் தொடர்ச்சியாக மாடலிங் செய்துவருகிறார். விரும்பிச் செய்யும் எந்தச் செயலும் தவறாகப் போகாது என்றும் நல்ல செயல்களைச் செய்யும்போது மட்டுமே தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சொல்கிறார்.
இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்து கொண்டபோதுகூடச் சில நாள்களிலேயே தன் வேலைக்குத் திரும்பி விட்டார். இந்த வயதிலும் உடலில், உழைப்பில் சுணக்கம் இல்லாததால் மாடலிங்கில் ஓய்வு என்கிற சிந்தனையே இல்லை என்கிறார்.
“மழைக்குப் பிறகு வரும் மண்ணின் வாசனையை விரும்பாதவர்கள் உண்டா? சிறிய விஷயங்கள்தாம் வாழ்க்கையில் சுவாரசியம் அளிக்கின்றன. சிறு மகிழ்ச்சியும் இன்பமும் தராத எந்தச் செயலையும் செய்வதில்லை. கடந்த காலத்தை நினைவில் வைத்துக்கொண்டு அதிலேயே வாழாதீர்கள். நிகழ்காலத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். எதிர்காலத்துக்குக் கொஞ்சம் திட்டமிட்டு, மாற்றத்துக்குத் தயாராக இருங்கள்” என்று 93 ஆண்டு கால அனுபவங்களில் இருந்து வாழ்க்கைக்கான தத்துவத்தைச் சொல்கிறார் கார்மென்.
