‘பெண்ணியவாதி’ என்பது வசைச்சொல் அல்ல

‘பெண்ணியவாதி’ என்பது வசைச்சொல் அல்ல
Updated on
2 min read

இளைஞர்களுக்கான பட்டறையொன்றில் ‘பாலினச் சமத்துவம்’ பற்றிய கருத்துரைக்குப் பின் உணவு நேர இடை வேளையில் இளைஞர் ஒருவர் என்னை அணுகினார்.

“பெண்ணியவாதி ஒருவர் வந்து உங்களுக்குக் கருத்துரை வழங்கு வாங்கன்னு நேற்றைக்கே எங்ககிட்ட சொன்னாங்க. பெண்களுக்கு அப்படி என்னதான் பிரச்சினைன்னு நீங்க பாட்டுக்குப் பெண்ணியம் பேசிட்டுப் போறீங்க? நீங்க ஒரு பெண்ணியவாதியாக இருப்பதால் பெண்களுக்காகத்தானே பேசுவீங்க...?”

பெண்ணியவாதி என்று அந்த இளைஞர் அழுத்திச் சொல்லும்போது அவர் முகத்தில் அப்படியொரு சலிப்பையும் கோபத்தையும் கண்டேன். இந்தச் சலிப்பையும் கோபத்தையும் ஆணாதிக்கக் குணம் கொண்ட பெண்கள் சிலரிடமும் பார்க்க முடிகிறது.

ஏன் இந்தப் புறக்கணிப்பு?

கடந்த பத்து ஆண்டுகளாக நான் இலக்கியவாதியாகச் சமூக அரங்கில் பயணித்துக் கொண்டிருப்பதால் பல்வேறு மனிதர்களை, குறிப் பாக, அநீதியில் பொசுங்கும்பல பெண்களைப் பார்க்கிறேன். பெண்ணாக நானும் பல ஒடுக்குதல் களை நாள்தோறும் அனுபவிக்கிறேன். பெண்களின் நியாயமான எதிர் பார்ப்புகள் மீது இவ்வுலகம் கட்டி யெழுப்பும் கற்களை அகற்ற வேண்டி யிருப்பதால், சில இடங்களில் பேச வேண்டியிருக்கிறது; எழுத வேண்டி யிருக்கிறது. எல்லாரும் இயல்பில் பெறக்கூடிய ஒன்றைப் போராடிப் பெற்றுக்கொள்ளும் பல பெண்ணியப் போராட்டங்களைப் பற்றிப் பேசுவதால், அவற்றைக் குறித்து எழுதுவதால் ‘பெண்ணியவாதி’ என்று கொஞ்சம் தள்ளியே வைக்கிறார்கள் சில இடங்களில்.

மாதவிடாய் வலியின் ரணத்தையும் அதைச் சுமந்துகொண்டு அன்றாடம் செய்யும் பணிகளின் கடினத்தையும் சமூகத்தில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில், இந்த நாள்களுக்குரிய பராமரிப்பை வீடுகளோ அலுவலகங்களோ அவ்வளவு பெரிதாக வழங்கியிருக்கவில்லை. அந்த நாள்களில் அவளை ஓய்வாக அமரச்சொல்ல பலரும் முன்வரவும் இல்லை. கடுமையான வலியைத் தனக்குள் அடக்கிக் கொண்டு வெளியே சிரிக்கும் அவளைப் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது.

பெண்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போது அவள் உடலைப் பற்றியும் பேசித்தான் ஆக வேண்டும். ஏனெனில், பெண்ணின் உடலைப் போகப்பொருளாகச் சித்தரிக்கையில் தன் உடலின் உலகைப் பற்றி, ஆற்றலைப் பற்றி அவளுக்கு மட்டும்தான் தெரியும். இவற்றையெல்லாம் பேசுகையில், எழுதுகையில் அடக்கமற்றவள், பெண்ணியம் பேசிப் பேசியே ஆண்களை ஏறி மிதிக்கிறாள் என்றெல்லாம் நம்மைத் தனித்து விட்டுவிடுகிறார்கள்; ஒரு வகையில் ஆண்களுக்கு எதிரிகளாகவே சித்தரித்து விடுகிறார்கள்.

ஆணுக்கு எதிரானது அல்ல

பெண்களைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் ஆண் எழுத்துகளையோ பேச்சுகளையோ ’பெண்ணிய வாதி’ என ஒதுக்குவதில்லை. ஆனால், ஒரு பெண் தன் இன்னல்களை, சந்தோஷங் களை, பிரச்சினைகளை எழுதுகையில், பேசுகையில் ‘பெண்ணியவாதி’என்று ஏன் ஒதுக்கி வைக்கிறார்கள்? ஆச்சரியமாக இருக்கிறது. இங்கே பிரச்சினை பெண் ணென்று இல்லை. நானும் ஒரு மனிதன் என்னையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதே; எனக்கென்று ஓர் உடலை மட்டும் பொருத்திக் குறுகிய வட்டத்தில் அடைத்துவிடாதீர்கள் என்பதே. அதன் அசைவுகளைக் குற்றமாகப் பார்க்காமல் ஆற்றலாகப் பாருங்கள் என்பதே. ஏனெனில், பெண்ணுக்கு இருப்பதுபோல் ஆணுக்கும் ஓர் உடல் இருக்கிறதுதானே!

எல்லாப் பெண்களையும் போன்ற ஆசையும் மகிழ்ச்சியும் தேடலும் கனவும் பெண்ணுரிமை பேசும் பெண்களுக்கும் உண்டு. ஒரு வகையில் சராசரிப் பெண்கள் அனுபவிக்கும் வாழ்க்கை சந்தோஷங்களைப் பெண்ணிய வாதிகள் அனுபவிப்பது கிடையாது. கவித்துவமான ரசனையும், வாழ்வியல் அழகுகள் குறித்த சித்தரிப்புகளும், காதலின் ரம்மியமான சிலிர்ப்புகளும், தாய்மையின் கசிவும், பேரன்போடு தாங்கும் ஆண் மடியின் தேடலும், கடவுள் பக்தியும், உயிர் நேயமும், இயற்கை நேசிப்பும் எனக்கும் இருக் கின்றன. நான் அனுபவிக்கும் உலகின் இடர்ப்பாடுகளை எழுதுவதால், பேசுவதால் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல. அழுத்தமான ஆணாதிக் கத்துக்கு எதிரானவள் என்பதே உண்மை. இந்த ஆதிக்கம் சமூகத்தில் பல வடிவங்களில் இருப்பதால் பேசவும் எழுதவும் கடமைப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்.

- மலர்வதி
கட்டுரையாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: malarvathi26@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in