

“இந்தக் கல்லூரியில எங்களுக்கு இடம் கிடைச்சது ரொம்பப் பெருமையா இருக்கு. உங்க எல்லாருக்கும் மிக்க நன்றி.”
“ரொம்ப சந்தோஷம். மைதிலி, ரம்யா நீங்க ரெண்டு பேரும் நன்றி சொல்றது ஒரு பக்கம் இருந்தாலும் அரியர்ஸ் இல்லாம சிறப்பா படிக்கணும். அதுதான் மிக முக்கியம். இந்தக் கல்லூரி தமிழகத்தில் நல்ல பெயர் பெற்ற கல்லூரி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.”
“நிச்சயமா சார்! நாங்க நல்ல பேரு வாங்குவோம். எங்களுக்கு இன்னொரு உதவி சார், அதைச் செய்ய முடியுமா பாருங்க. எனக்கு எங்க வீட்ல எந்தப் பிரச்சினையும் இல்லை. என்னை ஏத்துக்கிட்டாங்க. ஆனா, மைதிலியை அவங்க குடும்பம் ஏத்துக்கல. அவளுக்கு நம்ம கல்லூரி ஹாஸ்டல்ல இடம் கிடைக்குமா?”
“பிரச்சினை இல்லை. ஏற்பாடு பண்றோம். கொஞ்சம் பொறுங்க.”
“மைதிலி, நீ கவலைப்படாதே, சார் சொல்லிட்டாருல்ல. ஹாஸ்டல் கிடைச்சுடும். அதுவரை என் வீட்ல இரு, எங்கம்மாகிட்ட நான் சொல்லிட்டேன்” என்றார் மைதிலி
“ரம்யாக்கா, மைதிலிக்கா உங்க ரெண்டு பேரையும் பார்த்தா எங்களுக்குப் பெருமையா இருக்கு. நீங்க இந்தக் கல்லூரில படிக்கிறது உங்களை மாதிரி இருக்குற மத்த திருநங்கைகளுக்கும் பெருமையா இருக்கும். வாழ்த்துகள்” - இது சக மாணவியர்.
“இப்படிதான்கா எல்லாரும் வெளில வரணும். நாங்க எல்லாரும் உங்களுக்கு சப்போர்ட்டா இருக்கோம், கவலைப்படாதீங்க. எந்த உதவினாலும் கேளுங்க” - இது யூனியன் லீடர் மித்ரா.
“நான் இங்க 15 வருசமா விரிவுரையாளரா இருக்கேன். ஆனா, இப்போதான் ரொம்ப சந்தோஷப்படுறேன். நீங்க என் வகுப்புல படிக்கிறது எனக்கு ஆத்ம திருப்தியா இருக்கு” - இது கல்லூரிப் பேராசிரியர் மல்லிகா.
“ரம்யாக்கா கல்லூரிக்குள் வர்றவரைக்கும் இவ்வளவு வரவேற்பு இருக்கும்னு எனக்குத் தெரியாது. இவங்க எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியா நம்மகிட்ட நடந்துக்குறாங்க பாருங்க.”
“ஆமா மைதிலி. இதெல்லாம் வெளில இருக்குற இளம் திருநங்கைகளுக்குத் தெரிஞ்சா நெறய பேரு படிக்க வருவாங்க.”
“மைதிலிக்கு ஹாஸ்டல்ல தனி ரூம் கிடைக்கல. இன்னும் கொஞ்ச நாள் பொறுங்க, ஏதாவது ரூம் காலியாகும்.”
சார் இப்படிச் சொன்னதும் அதிர்ச்சியான மைதிலி, “சார்.. மிலா ரூம்ல அவ ஒருத்திதான் இருக்கா. அங்கே நான் தங்கிக்கவா?”
“வெயிட் பண்ணுங்க. நான் சொல்றேன்.”
சார் பிடி கொடுக்காமல் பேசியது ரம்யாவுக்கும் மைதிலிக்கும் குழப்பமாக இருந்தது.
“ரம்யாக்கா, ஒருவேளை நான் ஆணுடையில இருக்குறதால சார் யோசிக்கிறாரோ?”
“இருக்கலாம். ஆணுடையில இருந்தாலும் நீ மைதிலிதானே. அது மத்தவங்களுக்குப் புரியலையா?”
“புரியுது ரம்யாக்கா. ஆனா உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் பார்க்குறாங்க. நேத்து நான் பாத்ரூம் உள்ள போனதும் மிலா, நேகா எல்லாரும் வெளியில வந்து நின்னுட்டு நான் வெளில வந்ததும் உள்ள போனாங்க தெரியுமா?”
“எனக்கும் ஸ்கூல்ல இது மாதிரி நெறைய நடந்துருக்கு மைதிலி. டாய்லெட்ல என் பெயரை எழுதி, பக்கத்துல 9னு நம்பர் போட்டிருக்கும். எங்க வீட்ல என்னைய ஏத்துக்கிட்டதால எனக்கு அந்தப் பிரச்சினை பெருசா தெரியல.”
| கதையல்ல நிஜம் திருநங்கை என ஒருவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டால் அவர் புடவை கட்டி இருக்க வேண்டும், அப்போதுதான் அவர் திருநங்கை எனப் பொதுச்சமூகம் நினைக்கிறது. ஆணுடையில் இருந்து பெண் தன்மையை உணர்ந்து அவர் தன்னைத் திருநங்கை என்றாலும், பெண் பெயர் வைத்துக்கொண்டாலும் அவர் திருநங்கைதான். உச்ச நீதிமன்றமும், மூன்றாம் பாலினத்தவர் பாதுகாப்புச் சட்டமும் இதைத்தான் சொல்கின்றன. 18 வயதுக்குக் கீழ் உள்ள திருநங்கைத் தன்மை உடைய குழந்தைகள், ’Gender Non-Confirming Children’ ஆவர். ஆனால், இந்த வயதில் அவர்கள் கல்வி கற்கும்போது ஆணுடையில்தான் இருப்பர். பெண் போன்ற நடை உடையும் பேச்சும் இருக்கலாம். அந்த வயதில் அவர்களை நாமும் திருநங்கை என அடையாளப்படுத்த முடியாது. அவர்களுடைய பெற்றோர் கண்டறிந்தால், அவர்கள் தங்கள் குழந்தை திருநங்கைத் தன்மையுடன் இருக்கிறது எனக் கூறலாம். ஆனால், அவ்வாறான குழந்தைகள் பெண் தன்மையுடன் காணப்பட்டால், குறிப்பாகப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தி, மற்ற மாணவர்களின் ஒதுக்குதலுக்கு அவர்கள் ஆளாகாமல் பார்த்துக்கொள்வது அவசியம். கல்லூரிகளில் இக்குழந்தைகள் பெரும்பாலும் 18 வயதைக் கடந்தவர்களாக இருப்பார்கள். அங்கே சக மாணாக்கர் தற்போதய சூழலில் கனிவுடன் நடத்துகின்றனர். இக்கதையில் வருவதுபோல் ஆணுடையில் இருந்தால் அவர்களைச் சிறிதும் தள்ளிவைப்பது கூடாது. காரணம், இந்த நேரத்தில் இதுபோன்ற புறக்கணிப்பால் அவர்களது கல்வி தடைபட்டுவிடக் கூடாது. தமிழக அரசு ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளது. மேலும் திருநங்கை, திருநம்பியருக்கு உயர்கல்விக்கான கட்டணச் செலவைத் தமிழக அரசே ஏற்க உள்ளது. இவையெல்லாம் மிகச் சிறப்பான முன்னகர்வுகள். 2015ஆம் ஆண்டு முதல் திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் சென்னை லயோலா கல்லூரி இலவச உயர்கல்வியை வழங்கிவருகிறது. விடுதி வசதியோடு கல்வியை வழங்குகிறது. திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 2018ஆம் ஆண்டு முதல் திருநங்கைகளுக்கு உயர்கல்வியை இலவசமாக வழங்கி வருகிறது. |
“எங்க ஸ்கூல்ல என்னைப் பார்த்து பசங்க ‘ஊரோரம் புளியமரம்’னு அடிக்கடி பாடுவாங்க. அதை ஒருதடவை என் வீட்ல சொன்னதுக்குக் காரணமே இல்லாம என்னை அடிச்சாங்க ரம்யாக்கா. எனக்கு நாளைக்கு ஸ்கூல் போகணும்னா இன்னைக்கே கவலை வந்துடும். இருந்தாலும் போராடித்தான் பிளஸ் 2 வரை படிச்சேன்கா.”
“அதுக்குத்தான்டி சொல்றேன் மைதிலி. நீ சீக்கிரம் என்னை மாதிரி மாறிடு. முடி வளர்த்து, ஆபரேஷன் பண்ணிடு.”
“எங்க வீட்ல ஏத்துக்காமதானே நான் இன்னும் எதுவும் பண்ணல. இல்லனா 19 வயசுலயே பண்ணிருப்பேனே. சீக்கிரம் இதெல்லாம் பண்ணிடணும்னா இப்ப எப்படி முடியும்? என்னை வீட்டைவிட்டு அனுப்பிட்டாங்க. நான் பணத்துக்கு எங்கே போவேன்?”
“கவலைப்படாதே மைதிலி. அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். ஆனா முடியை மட்டும் இப்போ வளர்த்துக்கோ. நான் என்கிட்ட இருக்குற சுடிதார் ரெண்டு செட் தரேன்... போட்டுக்கோ.”
ரம்யாவின் கையை இறுகப் பிடித்தபடி மைதிலி தனது வகுப்பறைக்குள் நுழைந்தாள்.
(தொடரும்)
கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.