வானவில் பெண்கள்: கபடி சந்தியா!

வானவில் பெண்கள்: கபடி சந்தியா!
Updated on
3 min read

இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஆண்களின் ஆளுகையில் இருந்துவந்த கபடி விளையாட்டு இப்போது பெண்கள் வசமாகவும் மாறிவருகிறது. மூச்சை அடக்கியபடி கபடி.... கபடி என்று உச்சரித்து வெற்றிக்கான எல்லையில் நிற்கும் வீரர்களோடு ரசிகர்களின் இதயத் துடிப்பையும் எகிற வைக்கும் போட்டியில் பெண் ஒருவர் நடுவராகச் செயல்படுவது சவால் நிறைந்தது.

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் வரவேற்பைப் போல் கபடி விளை யாட்டுக்கான புரோ கபடிப் போட்டிகள் சமீப ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பத்தாவது சீசனை எட்டியுள்ள புரோ கபடிப் போட்டிகளில் ஆஜானுபாகுவான வீரர்களின் ஆட்டத்தில் வீரர்களின் ரெய்டுகளையும் தொடங்கி வைக்கும் பணியைச் சிறப்பாகச் செய்துவருகிறார் எம்.கே.சந்தியா. புரோ கபடி ஆறாவது சீசனில் தொடங்கி தற்போது முடிந்த பத்தாவது சீசன் வரை தொடர்ச்சியாகச் சென்ற ஒரே தமிழகப் பெண் நடுவர் சந்தியாதான்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பெரியபுதூர் கிராமத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த சந்தியா, அரசுப் பள்ளியில் படித்தபோதே கபடி மீது ஆர்வம் கொண்டார். அங்கே தொடங்கிய இவரது பயணம் தேசிய அளவில் தமிழ்நாட்டுக்காக விளையாடியது, காதல், திருமணம், குழந்தை என அடுத்தடுத்த திருப்பங்களுடன் நகர்ந்து கபடிப் போட்டியின் நடுவராகக் களத்தில் வீரர்களோடு நிற்பதில் வந்து நின்றிருக்கிறது.

கபடிக் குடும்பம் என்று சொல்லும் அளவுக்கு கபடி வீராங்கனைகளால் நிறைந்தது இவரது குடும்பம். அதை சந்தியாவே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்?

அப்பா ஏ.எம்.காமராஜன், ராணுவ வீரர். அம்மா கோட்டீஸ்வரி. நான் வீட்டுக்கு முதல் மகள், தங்கைகள் சூர்யா, நித்யா, தாரணி மூன்று பேருமே கபடி வீராங்கனைகள். சூர்யாவும் நித்யாவும் தேசிய அளவிலான போட்டிகளிலும் கடைசித் தங்கை தாரணி கல்லூரி அளவிலான கபடிப் போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். நான் பத்தாவது படித்தபோது அப்பா தவறிவிட்டார். அம்மாதான் எங்கள் நான்கு பேரையும் படிக்க வைத்தார்.

கபடி விளையாடும் ஆர்வம் எப்படி வந்தது?

ஊரில் பொங்கல் விளையாட்டுகளில் பெண்களுக்கான போட்டிகளில் நான் விளையாடிவந்தேன். காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது பள்ளியில் கபடி அணியில் விளையாட உடற்கல்வி ஆசிரியர் பாரதி அழைத்தார். நான் விளையாடியதைப் பார்த்து முதலில் பாராட்டியவர் அவர்தான். பிறகு பள்ளி அணிக்காக விளையாடியதைப் பார்த்த அக்சீலியம் மகளிர் கல்லூரி கபடிப் பயிற்சியாளர் பாரதிதாசன், தனது கல்லூரிக்கு வந்து பயிற்சி பெறும்படி அழைத்துப் பயிற்சியும் கொடுத்தார். அந்தப் பயிற்சி என்னை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றது. பிளஸ் 2 முடித்த பிறகு அதே அக்சீலியம் கல்லூரியில் பிஏ., வரலாறு படிப்பில் சேர்ந்தேன். தமிழ்நாடு அணிக்காக தேசிய சப்-ஜுனியர், சீனியர் பெண்கள் போட்டிகளிலும் திருவள்ளுவர் பல்கலைக்கழக அணிக்காகவும் விளையாடினேன்.

கணவருடன்...
கணவருடன்...

திருமண வாழ்க்கை?

குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி 2009இல் காதலுக்காகக் கல்லூரிப் படிப்பைப் பாதியில் கைவிட்டுக் கபடி வீரர் கதிரவனைத் திருமணம் புரிந்துகொண்டேன். 2010இல் மகன் திவீஷ் பிரசன்னா பிறந்த பிறகு குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய சூழல். 2012இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் கபடிப் போட்டியில் விளையாடியது என் வாழ்க்கையில் மீண்டும் ஒரு திருப்புமுனையாக மாறியது. விளையாட்டில் நான் கடைப்பிடித்த நுணுக்கங்களைப் பார்த்த கணவர் மீண்டும் விளையாடும்படி எனக்குத் தைரியத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தார். 2014இல் விடுபட்ட கல்லூரிப் படிப்பைத் தொலைதூரக் கல்வியில் முடித்ததுடன் இளநிலை உடற்கல்விப் பாடத்தை முடித்து யோகாவில் பி.ஜி டிப்ளமோ முடித்தேன். 2015இல் தமிழ்நாடு அணிக்காகப் பெண்கள் தேசிய கபடி போட்டியில் பங்கேற்றேன்.

புரோ கபடி நடுவர் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகு கபடி விளையாடுவது சவால் நிறைந்ததாக இருந்தது. அடுத்த கட்டம் என்ன என்று யோசித்தபோது நடுவர் பணி குறித்துக் கேள்விப்பட்டேன். அமெச்சூர் கபடி ஃபெட ரேஷன் ஆஃப் இந்தியா நடத்திய நடுவர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று நடுவரானேன். ஆறாவது புரோ கபடி சீசனில் நடுவராகப் பணியைத் தொடங்கினாலும் எட்டாவது சீசனில்தான் தொலைக்காட்சி அலைவரிசைகளில் தெரியும் கள நடுவராகப் பணியாற்றினேன்.

புரோ கபடி கள நடுவர் பணி எப்படி இருந்தது?

புரோ கபடி எட்டாவவது சீசனில் புனே-பாட்னா அணிகள் மோதிய போட்டியில் கள நடுவராக முதலில் பணியாற்றியபோது சற்றுப் பதற்றமாக இருந்தது. ஏனென்றால் அனைவரின் பார்வையும் நான் கொடுக்கும் முடிவின் மீதுதான் இருக்கும். சூழ்நிலையை அறிந்து பக்குவமாகக் கையாள வேண்டும் என்பதால் பதற்றத்தை விட்டுவிட்டு முழு திறமையையும் வெளிப்படுத்தினேன். அதன் பிறகு எல்லாவற்றுக்கும் தயாராகி விட்டேன். பத்தாவது சீசனில் புனே-பாட்னா அணி மோதிய அரையிறுதி ஆட்டத்தில் ஒரு ரெய்டர் எதிரணி வீரர்களைத் தொட்டுவிட்டு மீண்டும் எகிறிக் குதித்தபோது களத்தின் கோட்டுக்கு வெளியே கையை ஊன்றிச் சென்றதைக் கவனித்து முடிவை அறிவித்தேன். அந்த முடிவு டி.வி., ரீபிளேவில் உறுதியானது மறக்க முடியாததாக இருந்தது.

உங்கள் பயணத்தில் யாருக்கு நன்றி சொல்வீர்கள்..?

யாருமே ஆதரவு இல்லாத நிலையில் எனக்கு எல்லாமுமாக இருந்த எனது கணவருக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறை புரோ கபடிப் போட்டிக்குச் செல்லும்போதெல்லாம் மூன்று மாதங்களுக்கு வீட்டையும் மகனையும் அவர்தான் கவனித்துக்கொள்வார். அடுத்து, வேலூர் மாவட்ட கபடி அசோசியேஷன், தமிழ்நாடு அமெச்சூர் கபடி அசோசியேஷன் தலைவர் சோலை எம்.ராஜா, செயலாளர் சபியுல்லா மற்றும் புரோ கபடி டெக்னிகல் டைரக்டர் பிரசாத் ராவ், மஷால் ஸ்போர்ட்ஸ் சி.இ.ஓ., அனுபம் கோஸ்வாமி ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும். முக்கியமாக புரோ கபடிப் போட்டிக் காலத்தில் நான் உடற்கல்வி இயக்குநராகப் பணியாற்றிவரும் ஸ்பிரிங்டேஸ் பள்ளியின் தாளாளர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர் ஆனந்தி ராஜேந்திரன், பள்ளி நிர்வாக இயக்குநர் ரம்யா ஆகியோர் எனக்கு விடுமுறை அளித்து தடையில்லாமல் ஊக்கமும் கொடுத்து வருகின்றனர். கடைசியாக எங்களது ஒரே மகன் திவீஷ் பிரசன்னாவுக்கு. ஏனென்றால், எங்கள் கனவுகளுக்கு ஈடுகொடுத்து வருகிறார். விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி கபடி வீரராகப் பயிற்சி பெற்றுக்கொண்டே படித்தும் வருகிறார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய்வான் என நம்புகிறேன்!

படங்கள்: வி.எம்.மணிநாதன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in