மகளிர் திருவிழா: மகிழ்ச்சியில் திளைத்த திருச்சி வாசகியர்

மகளிர் திருவிழா: மகிழ்ச்சியில் திளைத்த திருச்சி வாசகியர்
Updated on
3 min read

இந்து தமிழ் திசையின் ‘பெண் இன்று’ சார்பில் நடத்தப்படும் மகளிர் திருவிழா கடலூர், மதுரை, கோவை, ஈரோடு, நெல்லை ஆகிய நகரங்களில் களை கட்டியதைத் தொடர்ந்து மார்ச் 3ஆம் தேதி திருச்சியில் மையம் கொண்டது. திருச்சி மதி இந்திரா காந்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் திருவிழாவில் திருச்சி மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை எனப் பல மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களும் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.
மார்ச் 8 சர்வதேச மகளிர் நாளை முன்னிட்டு மார்ச் மாதம் முழுவதுமே பெண்களின் வரலாற்றை நினைவுகூரும் மாதமாக உலகம் முழுவதும் கடைப் பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நம் மகளிர் திருவிழாவும் மகளிரின் மாண்பைப் போற்றத் தவறவில்லை. வரலாற்றில் தடம் பதித்த பெண்களைப் பற்றிப் பேசி வாசகியருக்கு உத்வேக மூட்டினார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் என்.முருகேஸ்வரி.

பெண்கள் வெல்வார்கள்

“இன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறிவிட்டதைப்போல மாயத்தோற்றம் இருந்தாலும் உண்மையில் பெண்களின் நிலை அவ்வளவு சிறப்பாக இல்லை. கணவர் இறந்துவிட்டால் தையல் மிஷன் வாங்கிக் குடும்பத்தைக் காப்பாற்று, மழலையர் பள்ளி ஆசிரியராகச் சேர்ந்து வாழ்க்கையை நடத்து என்கிற நிலையில் தான் பெண்களை வைத்தி ருக்கிறோம். ஆண்களை மட்டுமே நாம் குறை சொல்லக் கூடாது. ஆண் குழந்தைகளைப் பல தாய்மார் கள் சிங்கமாக வளர்க்கின் றனரே தவிர, ஆறறிவு உள்ள மனிதர்களாக வளர்ப்பதில்லை. பெண்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.

சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டு மொத்த ஆண்களைத் தவறாகக் கருதக் கூடாது. அதேபோல சில பெண்கள் அடங்கிப்போவதால் எல்லாரும் அடங்கிப் போவார்கள் எனக் கருதுவது தவறு.
படிக்கவே அனுமதிக்கப்படாத மிகவும் பிற்படுத்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த சாவித்திரி பாய் புலே, தம்மு டைய கணவர் ஜோதிராவ் புலே மூலம் படித்து, சமூகத்தின் அனைத்துத் தரப்புப் பெண்களும் படிக்க வேண்டும் என்று பாடுபட்டார். தம் கணவர் ஜோதிராவுடன் இணைந்து பெண்களுக்கான இந்தியா வின் முதல் பள்ளியை புனேவில் தொடங்கினார். இதற்காக அவர் பல்வேறு அவமானங்களைச் சந்தித்தார். இலக்கிலிருந்து பின்வாங்காத அவர் தொடர்ந்து பள்ளியை நடத்தினார்.

பெண்கள் கல்வி கற்பதை விரும்பாத பலர் சாவித்ரி பாய் பள்ளிக்குச் செல்லும் போது அவர் மீது சாணத்தையும் மனிதக் கழிவையும் வீசினர். சாவித்ரிபாய் இதுபோன்ற தாக்குதல்களையும் அவமதிப்பு களையும் கண்டு பின்வாங்கவில்லை. பள்ளிக்குச் செல்லும்போது கையோடு மாற்றுப்புடவையை எடுத்துச் செல்வார். பள்ளிக்குச் சென்றதும் சாணத்தைக் கழுவிவிட்டு வேறு புடவை அணிந்து மாணவியருக்குப் பாடம் எடுப்பார். இன்று அவர் பெயரில் பல்கலைக்கழகமே உருவாகியுள்ளது. வாழும்போதே நம் இலக்குகளுக்கான முடிவு தெரிய வேண்டும் என்று கருத முடியாது.

பெண்களை அடுப்பங்கரை அரசிகளாக வைக்காமல், நாட்டை ஆளக்கூடிய அரசிகளாக மாற்றுவது, நீங்கள் கொடுக்கக் கூடிய நாற்காலியில் மட்டுமல்ல, நீங்கள் கொடுக்கும் வார்த்தை களிலும்தான் உள்ளது.
பெண்கள் மீதான வன்முறை என்பது உடல் ரீதியானது மட்டுமல்ல. பெண்களுக் கான உரிமைகள் மறுக்கப்படுவதுகூட அவர்களுக்கு எதிரான வன்முறையே. சமையலறைத் தோசைக்கரண்டி யில் மட்டும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட வில்லை அரசியல், நிர்வாகம் எனப் பல துறைகளிலும் பெண்களுக்கான இடம் மறுக்கப்படுகிறது.

பெண்களை விளம்பரப் பொருளாகவும் பொம்மைகளாகவும் பார்க்காமல் அறிவுசார்ந்தவர்களாகப் பார்த்தால் நிச்சயமாகச் சமூகத்தின் முன்னேற்றத்துக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள் என்பதை ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் உணர வேண்டும்” என்றார்.

முழு உடல் பரிசோதனை அவசியம்

திருச்சி ஜிவிஎன் ரிவர்சைடு மருத்துவமனையின் இயக்குநரும் மகப்பேறு மருத்துவருமான டாக்டர் கவிதா செந்தில் பெண்கள் நலன் குறித்துப் பேசினார்.

“பெண்கள் தங்கள் மனம் மற்றும் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். முழு உடல் பரிசோதனை (மாஸ்டர் ஹெல்த் செக்-அப்) தவறானது எனத் திரைப்படங்களில் சித்தரிக்கப் படுகிறது. முழு உடல் பரிசோதனைகள் மூலம் 80 சதவீதம் பெண்களுக்குப் புற்று நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு எளிதில் அவர்களை அதிலிருந்து மீட்டுள்ளோம். இன்று பெண்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய், கருப்பைவாய்ப் புற்றுநோய் ஆகியவை பரவலாக அதிகரித்துள்ளன. உரிய பரிசோதனைகளைச் செய்துகொள்வதன் மூலம் இந்தப் புற்றுநோய்களை முன்பே கண்டறிந்து அவற்றி லிருந்து பெண்களைக் காக்க முடியும். நோய் முற்றிய நிலையில் கண்டறியும்போது தீவிர சிகிச்சை அல்லது காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படக்கூடும். எனவே, பெண்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஆகும் செலவை உங்களுக்கு நீங்களே திருமண நாள், பிறந்த நாள் பரிசாக அளித்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

சாதனைப் பெண்

திருச்சி உறையூர் ‘வதனி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி’யின் உரிமையாளர் மதிவதனி. இவர் இளம் வயதில் கணவரை இழந்து, தனி ஆளாக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கி, பல பெண்களுக்கு கார் ஓட்டக் கற்றுத்தரும் பயிற்சியாளராக உயர்ந்துள்ளார். இவருக்கு உஜாலா லிக்விட் டிடர்ஜென்ட் நிறுவனத்தினரால் ‘வுமன் ஆஃப் சப்ஸ்டன்ஸ்’ விருதும் ஊக்கப் பரிசும் வழங்கப்பட்டன. மதிவதனி பேசுகையில், “ஹோலிகிராஸ் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் எனக்கு வாய்ப்பு அளித்தனர். விபத்தில் சிக்கி எனக்குக் காலில் முறிவு ஏற்பட்டாலும் அதிலிருந்து மீண்டும் இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன். தினமும் காலையில் எழுந்ததும் ஸ்டியரிங்கைப் பிடித்தால்தான் அன்று இரவு எனக்கு நிம்மதியாகத் தூக்கம் வரும் என்ற நிலைக்கு மாறி விட்டேன். இந்தக் காலத்தில் பெண்களும் கார் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். பெண்கள் எங்காவது வெளியே செல்ல வேண்டும் என்றால் கணவரை எதிர் நோக்கியிருக்கக் கூடாது” என்றார்.

போட்டியில் கலக்கிய வாசகியர்

மகளிர் திருவிழாவில் பங்கேற்ற வாசகியருக்கு பலூன் ஊதி உடைத்தல், கயிறு இழுத்தல், ஃபேஷன் ஷோ, பந்து விளையாட்டு, பொட்டு ஒட்டுவது உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டன. இதில் ஆர்வத்துடன் பலரும் பங்கேற்றுப் பரிசுகளைப் பெற்றனர். குறிப்பாக 60 வயதைக் கடந்த வாசகியர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். இடையிடையே திருச்சியின் சிறப்புகள் குறித்துக் கேட்கப்பட்ட பல்வேறு ஆச்சரியக் கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்த வாசகியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியைச் சின்னதிரைத் தொகுப்பாளினி தேவிகிருபா தொகுத்து வழங்கினார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ரிட்டர்ன் கிஃப்ட் வழங்கப்பட்டது. மதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. மகளிர் திருவிழாவை ‘இந்து தமிழ் திசை’யுடன் உஜாலா லிக்விட் டிடர்ஜென்ட், பிரஸ்டா, சத்யா, லலிதா ஜுவல்லரி, ஆனந்தம் மசாலா, ரோஷன், வாக் பக்ரி டீ,
 நாகேந்த்ரம் சில்க் ஹவுஸ், மதி இந்திரா காந்தி கல்லூரி உள்ளிட்ட நிறுவனங்களும் இணைந்து நடத்தின.

படங்கள்: ர.செல்வமுத்துகுமார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in