

“உங்க ரெண்டு பேருக்கும் என்னதான் பிரச்சினை?”
“எனக்கு ஒண்ணும் இல்லை மேடம். ஆனா, இவர்தான் முன்ன மாதிரி இல்லை. ஒரு காலத்துல நான்தான் எல்லாமே என்று இருந்தவர் இப்போல்லாம் என்னை வெறுக்கிறார்.”
“ஏன் கண்ணன் நீங்க இப்படி நடந்துக்குறீங்க?”
கண்ணன் அமைதியாகவே இருந்தார்.
“அவர் எப்படி மேடம் பேசுவார்? அவருக்கு என் மேல் குறை சொல்ல என்ன இருக்கு? இவர்தான் வாழ்க்கைன்னு நான் நெனச்சேன். எனக்கும் ஒரு துணை வேணும்னு நான் இவரைத் தேர்வு பண்ணலை. இது தானா அமைந்தது. இவரைப் பார்த்ததுமே எனக்குப் பிடித்துவிட்டது” என்று திவ்யா கண்கலங்கியபடி பேசினாள்.
“நானும் திவ்யாவை வெறுக்கலை. ஆனா, நல்ல நண்பர்களா தொடர்ந்து இருப்போம்னுதான் நெனக்கிறேன். அவங்க வீட்ல அவங்களும் என் வீட்ல நானும் இருக்கிறோம்.”
“அது எப்படி நண்பர்களாக இருக்க முடியும்? இவ்வளவு நாள் நாம அப்படி இல்லையே? இந்த ஊரு உலகமே சொல்லுமே திவ்யாவும் கண்ணனும் எப்படி வாழ்ந்தாங்கன்னு.”
“நீ ஏன் மனசு மாற மாட்டேங்குறே?” என்று கண்ணன் திவ்யாவைப் பார்த்துக் கேட்க, “என்னால முடியல. என்னை என் வீட்டார் வெறுத்து ஒதுக்குனாங்க. அப்போ பிழைப்பிற்குக் கடை கடையாகக் காசு கேட்டு வாழ்ந்தபோதுகூட நான் இவ்ளோ மனம் நொந்ததில்லை. ஆனா இப்போ என்னால முடியல” என்று திவ்யா அழ ஆரம்பித்தாள்.
***
“ஏண்டா அறிவு கெட்டவனே. இன்னாடா இந்த மாதிரி ஆளுங்களோட பழக்கம் வச்சிருக்கே?”
“மாமா அப்படிச் சொல்லாதீங்க. அவங்களும் நம்மளை மாதிரி மனுஷங்கதான். அவ என் தோழி. நீங்க அவளைத் திட்டினா என்னைத் திட்டுற மாதிரி.”
“உன்ன என் நண்பன்னு சொல்லவே எனக்கு வெட்கமா இருக்கு. இது மாதிரி ஒரு ஆளை மனைவின்னு சொல்றே. இதோ பாரு ஏதோ பழகினோமா இருந்தோமான்னு விட்டுட்டு வந்துடு” - இது கண்ணனின் நெருங்கிய நண்பன் பேச்சு.
“அவ பேரு என்னடா மச்சான்?”
“திவ்யா”
“பிடிச்சாலும் பார்க்க சூப்பரா ஒரு திருநங்கையைப் பிடிச்சிருக்கே. சரி விடு நாம எங்காவது வெளில டூர் போகும்போது அவளையும் கூட்டிட்டு வா.”
“இதோ பாருடா உன் பேச்சு சரியில்லை. நானும் அவளும் சேர்ந்து வாழுறோம் புரிஞ்சிக்கோ.”
கண்ணனுக்கு எரிச்சலாக வந்தது.
’இதோ பாருங்க இந்தப் பேச்சை இதோடு விடுங்க. இங்க பாருங்க இது என் வாழ்க்கை, இதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க. இது என் பிரச்சினை, உங்களுக்கு என்ன வந்தது?’ - இப்படியே எத்தனை பேருக்குச் சொல்வது?
என்னால தினம் தினம் எல்லாருக்கும் பதில் சொல்ல முடியலையே.
ஒரு நாள் என் கம்பெனி முதலாளி, ’கண்ணா நீ நல்லா வேலை செய்வே எனக்குத் தெரியும். ஆனா கம்பனிக்கு வரும்போது காலைல சாப்பாடு எடுத்துட்டு வந்துடு. இல்லைனா என் வீட்ல இருந்து உனக்கும் சேர்த்து கொடுக்கச் சொல்றேன்’னு சொன்னார்.
எனக்குச் சுர்ருன்னு கோபம் வந்தது. “சார் கவலைப்படாதீங்க. மதியம் சாப்பாடு எடுத்துட்டு திவ்யா இனி கம்பெனிக்கு வர மாட்டா. நான் ஹோட்டல்ல சாப்ட்டுக்குறேன்.”
| கதையல்ல நிஜம் இரு மனங்கள் சேர்ந்து வாழ்தலே திருமணம். ஆனால், இது மூன்றாம் பாலினத்தவருக்கு மட்டும் விமர்சனத்தை உண்டாக்குகிறது. இது அவர்களது வாழ்க்கை என மற்றவர்கள் அமைதியாக இருப்பது உத்தமம். அவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களைத் திருமணம் புரிந்துகொண்டு வாழலாம் என 2023இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எந்த ஒரு திருநங்கையும் விருப்பம் இல்லாதவர்களைத் தன்னோடு சேர்ந்து வாழ வற்புறுத்துவது கிடையாது. அவ்வாறு இணைந்து வாழ்ந்தால் அந்த ஆண், சமூகத்தில் கிண்டலுக்கு ஆளாகிறான். சாலையில் திருநங்கையுடன் ஒருவர் பேசினாலே அந்த ஆணைச் சிலர் கேலியாகப் பார்ப்பதையும் நான் கண்டிருக்கிறேன். 100 திருநங்கைகள் அவரவர் மனதுக்குப் பிடித்த ஆணைத் திருமணம் புரிந்தோ, இணைந்தோ வாழ்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களில் 90 சதவீதத்துக்கும் மேலானோர் தொடர்ந்து சேர்ந்து இருப்பதில்லை. இதற்குச் சமூக இழிவுகளே காரணம். பல திருநங்கைகள் தங்களுடைய கணவன் / காதலன் பிரிந்து போனதால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எல்லா இடங்களிலும் இன்னலை அனுபவித்துத் திருநங்கையாக பெண் உடை உடுத்தி வீதியில் இறங்கியவர்களுக்குப் பெண் என்கிற அடையாளத்துடன் எனது மனைவி என்று ஒருவன் உரிமை கொண்டாடும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். அதைத் தக்கவைக்க முடியாதபோது அவர்கள் அடையும் வேதனைக்கு எல்லையில்லை. |
“கண்ணா, ஏண்டா டென்சன் ஆகுற? ஓனர் நிலைமையை யோசிடா. நேத்து திவ்யா இங்க சோறு எடுத்துவந்த நேரத்துல ஓனருக்கு வேலை கொடுக்குற கம்பெனி முதலாளிங்க வந்திருந்தாங்க, அவங்க திவ்யாவை ஒரு மாதிரி பார்த்தாங்கடா” என்று கண்ணனின் நண்பன் ராம் சமாளித்தான்.
“ஏம்மா கடை திறந்ததும் திறக்காததும் இப்போதாம்மா ரெண்டு திருநங்கைங்க வந்து காசு வாங்கிட்டுப் போனாங்க. போங்கம்மா அப்புறம் வாங்க. சார் நீங்க உள்ள வாங்க.”
“சார் அவ என் மனைவி. நாங்க உங்க கடையில பொருள்கள் வாங்க வர்றோம். நீங்க ஏன் இப்படிப் பேசுறீங்க?”
கடை ஓனர் மன்னிப்பு கேட்டாலும் அந்தக் கடையில் நிற்க மனசில்லாமல் கண்ணன் திவ்யாவை வேறு கடைக்கு அழைத்துச் சென்றான்.
***
“இப்போ சொல்லுங்க மேடம். நீங்க நல்ல ஆலோசகர், இப்படி எல்லாம் நான் பிரச்சினைகளை அனுபவிக்கிறேன்னு அவகிட்ட சொல்ல முடியல மேடம். நல்ல வேளை நீங்க என்னைத் தனியா கூப்பிட்டுப் பேசுறீங்க, அதனால உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். அவகிட்ட சொன்னா அவ மனசு கஷ்ட்டப்படும். தயவுசெய்து நீங்க இதையெல்லாம் அவ கிட்ட சொல்லாதீங்க.”
“சரி, வெளியில இருங்க கண்ணன்.”
“மேடம், எதுக்கு இப்போ என்கிட்ட தனியா பேசப்போறீங்க? நீங்க என்ன பேசினாலும் நான் கண்ணனை விட்டு வாழ முடியாது. அவன்கிட்ட சொல்லி எங்களைச் சேர்த்து வையுங்க மேடம்” என்று திவ்யா மறுபடி அழ ஆரம்பித்தாள்.
திவ்யா-கண்ணன் இருவரும் ஒருவழியாகப் பிரிந்தார்கள். தொடர்ந்து பேசி திவ்யா தற்கொலைக்குப் போகாமல் பார்த்துக்கொண்டது இந்த ஆலோசனை மையத்தோட வெற்றி. கண்ணனும் திவ்யாவும் யாருடைய வாழ்விலும் தலையிடவில்லை, ஆனாலும் அவர்கள் தண்டனையை அனுபவித்தார்கள்.
(தொடரும்)
கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.