உற்சாக வெள்ளத்தில் நெல்லை வாசகியர்

உற்சாக வெள்ளத்தில் நெல்லை வாசகியர்
Updated on
3 min read

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஞாயிறு சிறப்பிதழான ‘பெண் இன்று’ சார்பில், மகளிர் திருவிழா திருநெல்வேலி வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி அரங்கில் பிப்ரவரி 25 அன்று நடைபெற்றது. வெள்ளப் பாதிப்பில் இருந்து மீண்டெழுந்து வாழ்க்கையைத் துணிவோடு எதிர் கொள்ளும் உற்சாகம் வாசகியரின் முகத்தில் தெரிந்தது. காலை முதலே உற்சாகத்துடன் அரங்கில் ஒன்றுகூடினர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பது பெரும்பாலான பெண்களுக்கு எட்டாக்கனியாக இருந்தாலும் அந்த ஞாயிற்றுக்கிழமையை திருநெல்வேலி பெண்கள், நம் ‘மகளிர் திருவிழா’வுக்காக மட்டுமல்ல, தங்களுக்கான ஒரு நாளாகவும் ஒதுக்கியிருந்தனர். விழா தொடங்கியது முதல் அரங்கைவிட்டுப் பரிசுகளோடு சென்றது வரை துளியும் சோர்வின்றித் துடிப்புடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

கல்வியே கைகொடுக்கும்

விழாவுக்குத் தலைமை வகித்த திருநெல்வேலி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி எஸ்.சமீனா, தம் வாழ்க்கையையே உதாரணமாக முன்வைத்துப் பேசினார். கணவனை இழந்த நிலையிலும் அவருடைய அம்மா, அவரது படிப்புக்கும் அவருடைய சகோதரிகளின் படிப்புக்கும் எப்படி உதவினார் என்பதை விவரித்தார். ஒவ்வொருவரையும் பெரிய நிலையில் அமரச் செய்திருக்கும் நீதிபதியின் அம்மா, தற்போது தன் கடைசி மகளின் மருத்துவ ஆய்வுப் படிப்புக்காக மகளுடன் தங்கியிருப்பதாகச் சொன்னபோது வாசகியர் மத்தியில் கரவொலி. பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து நீதிபதி எஸ். சமீனா பேசுகையில், “பெண்களின் முன்னேற்றத்துக்குக் கல்வி மிக முக்கியமானதாக விளங்குகிறது. பெண்களை மேம்படச் செய்யவும் அதிகார மளிக்கவும் கல்வியைவிடச் சிறந்த வழி வேறு எதுவுமில்லை. திருமணமும் குழந்தைப் பேறும் ஒரு பெண்ணின் திறமையைக் கட்டுப்படுத் தும் தடைகள் அல்ல. பெண்களுக்குக் கல்வி புகட்டுவது ஒரு சமூகத்தையே வாழவைப்பதற்குச் சமம். எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளும் துணிவைக் கல்வி அளிக்கிறது. ஒரு பெண்ணுக்குக் கல்வி அளித்தால், அது அந்த நாடே கல்வி கற்றதற்குச் சமம். தற்போது கல்வி நிறுவனங்களில் மாணவர்களைவிட மாணவியர் அதிக அளவில் பயில்கிறார்கள். ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் சரிசமமாகப் பதவிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் இல்லாத துறையே இல்லை என்னும் அளவுக்கு உச்ச பதவிகளைப் பெண்கள் அலங்கரித்துவருகின்றனர்.

பெண்களின் நிலை உயர்ந்தாலும், அவர்களுக்கு எதிரான கொடுமைகளும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றன. அதேநேரத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான கொடுமைகளைப் பொதுவெளியில் கூறிச் சட்டரீதியாக அணுகி, குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தருகிறார்கள். தங்கள் உரிமைகளையும் போராடிப் பெறுகிறார்கள். முந்தைய காலக்கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியே வர பயப்பட்ட பெண்கள், இன்று தைரியமாக எந்தவிதமான பிரச்சினை யையும் சமாளிக்கிறார்கள். அதற்கு அடிப்படைக் காரணம் கல்விதான். நமக்கான சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றுக்கு நாம்தான் போராட வேண்டும். அதற்கான வலிமையை வளர்த்துக்கொள்ளுங்கள்” என்றார்.

கவனம் சிதறக் கூடாது

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சி.வே. மைதிலி, இன்றைய இளம் பெண்கள் தடம்மாறுகிற சூழ லைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

“இந்த ‘மகளிர் திருவிழா’, திருநெல்வேலி மகளிருக்கு ஒரு வரப்பிரசாதம். பெண்களுக்குச் சுதந்திரம் கிடைத்திருப்பதால்தான் இந்த விழாவுக்கு அதிக அளவில் வந்துள்ளனர். பெண்ணுக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டிய தில்லை. அவர்கள் அதை எடுத்துக்கொண்டார்கள். பெண்ணுக்குள் ஆண் அடங்கி யிருக்கிறான். பெண் சக்தி வாய்ந்தவள். பெண் இல்லை என்றால் உலகமே இல்லை.

ஒரு பக்கம் பெண்கள் சாதித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் பெண்கள் சிலநேரம் தங்களது சுதந்திரத்தைச் சரியாகத்தான் பயன்படுத்துகிறார்களா என்கிற கேள்வி எழுகிறது. சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் சாதனை படைக்கலாம். சாதனை படைக்கப் பிறந்த பெண்கள், சின்ன சின்ன விஷயங்களில் தேவையின்றிச் சிக்கிக்கொள்ளக் கூடாது” என்றார்.

அனைவரும் சமம்

திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த திருநங்கை வி. நித்யா, பரத நாட்டியம் பயின்று நாட்டியம் கற்றுத்தரும் நடன ஆசிரியராக உயர்ந்திருக்கிறார். இவருக்கு உஜாலா லிக்விட் டிடர்ஜென்ட் நிறுவனத்தினரால் ‘வுமன் ஆஃப் சப்ஸ்டன்ஸ்’ என்கிற விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. நித்யா, தான் கடந்து வந்த பாதை குறித்து வாசகியரிடம் பகிர்ந்துகொண்டார். “மனிதர்கள் அனைவரும் சமம். ஆண், பெண், திருநர் என்கிற வேறுபாடு தேவையில்லை” என்று நித்யா சொன்னபோது அதை வாசகியர் தங்கள் கைதட்டல் மூலம் ஆமோதித்தனர். அதைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவயரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. ‘கொடுமை கண்டு பெண்கள் அஞ்சக் கூடாது; துணிந்து நின்று போராடி வெல்ல வேண்டும்’ என்கிற கருப்பொருளில் மாணவியர் நிகழ்த்திய ‘மைம்’ என்கிற வசனமில்லா நாடகம், சிந்திக்கத் தூண்டியது.

உற்சாகமூட்டிய ஃபேஷன் ஷோ

வாசகியருக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றில் பலரும்
ஆர்வத்துடன் பங்கேற்றுப் பரிசுகளை வென்றனர். போட்டிகளில் வென்றவர் களுக்கு மட்டுமல்லாமல், பங்கேற்ற அனைவருக்குமே பரிசுகள் வழங்கப் பட்டன. ‘ஃபேஷன் ஷோ’ போட்டியில் வயது வித்தியாசமின்றி இளையோர் முதல் முதியோர் வரை பங்கேற்று, ‘ராம்ப் வாக்’ செய்தனர். “எனக்கு மூன்று பெண் குழந்தைகள். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர்கள் மூவரையும் நல்லவிதமாகப் படிக்க வைத்து அவர்கள் வாழ்வில் வெற்றிபெற உதவுவேன்” என்று புன்னகையோடு பேசிய வாசகி, ஃபேஷன் ஷோவில் முதல் பரிசை வென்றார். பெண்ணாகப் பிறந்ததற்காகத் தங்கள் தந்தையால் ஒதுக்கப்பட்டபோதும் வாழ்வில் போராடி வென்றதாகப் பெருமிதத்துடன் சொன்ன வாசகி இரண்டாம் பரிசையும் தன் மூன்று மகள்களைக் கணவனின் துணையோடு வளர்த்து ஆளாக்கிய வாசகி மூன்றாம் பரிசையும் வென்றனர்.

இடையிடையே திருநெல்வேலியின் சிறப்புகள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டுச் சரியான பதில் அளித்த வாசகிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் ‘ரிட்டர்ன் கிப்ஃட்’ வழங்கப்பட்டன. இருவருக்கு பம்பர் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியைச் சின்னதிரை தொகுப் பாளினி தேவிகிருபா தொகுத்து வழங்கினார். மகளிர் திருவிழாவை ‘இந்து தமிழ் திசை’யுடன் உஜாலா லிக்விட் டிடெர்ஜென்ட் இணைந்து நடத்தியது. பிரெஸ்டா உமன்ஸ் வியர், ஆரெம்கேவி, சத்யா, லலிதா ஜூவல்லரி, வாக்ஹ் பக்ரி டீ, மயூரி டிவி ஆகிய நிறுவனங்களும் இதில் பங்கெடுத்தன.

படங்கள்: மு.லெட்சுமி அருண்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in