

சில துறைகள் ஆண்களுக்கு மட்டுமே நேர்ந்துவிடப்பட்டவையாக இருக்கின்றன. அதுபோன்ற துறைகளில் பெண்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தடம் பதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். திருச்சியைச் சேர்ந்த மதிவதனி அவர்களுள் ஒருவர். ஆண்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் ஓட்டுநர் பயிற்சித் துறையில், இவர் கடந்த 19 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறார். இதுவரை ஆயிரக்கணக்கான பெண்களுக்கு கார் ஓட்டக் கற்றுத்தந்து தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்.
மதிவதனியின் சொந்த ஊர்பட்டுக்கோட்டை. பதினொன்றாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த போதே 1986இல் அவருடைய குடும்பத்தார் மதிவதனிக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டனர். திருமணத்துக்குப் பின் திருச்சி தில்லைநகரில் கணவர் பாலாஜியோடு வாடகை வீட்டில் வசித்துவந்தார்.
“என் கணவர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்திவந்தார். திருமணத்துக்குப் பின் வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல், எங்கள் பகுதியில் உள்ள பெண்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் வேலையைச் செய்துவந்தேன். சிறு வயது முதலே எனக்கு மோட்டார் வாகனங்கள் மீது அதிக பிரியம். எனது ஆர்வத்தைப் பார்த்த என் கணவர், எனக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுத்தார். நன்றாக கார் ஓட்டி, ஓட்டுநர் உரிமத்தையும் பெற்றேன்” என்று சொல்லும் மதிவதனி, அந்த ஓட்டுநர் பயிற்சிதான் பிற்காலத்தில் தனக்கு உதவப்போகிறது என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை.
விபத்தால் மாறிய பாதை
ஒரு மகன், ஒரு மகள் என அளவான குடும்பம், அன்பான கணவர் என வாழ்க்கை அழகாக நகர்ந்துகொண்டிருந்தது. 2004ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கித் தன் கணவர் இறந்த செய்தி பேரிடியாக மதிவதனியைத் தாக்கியது. சொந்த வீடு இல்லை. சொத்து பத்தும் இல்லை. கல்லூரி முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த மகள், எட்டாம் வகுப்பு படிக்கும் மகனுடன் என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறி நின்றார்.
“யாரிடமும் கையேந்தி நிற்கக் கூடாது என்கிற வைராக்கியம் எனக்குள் எப்போதும் இருக்கும். ஏதாவது ஒரு உதவியைச் செய்துவிட்டு அதைக் காலம் முழுவதும் சிலர் சொல்லிக் காட்டுவார்கள். அது நம்மை மேலும் பலவீனமடையச் செய்யும். தவிர எப்போதும் யாரையாவது எதிர்பார்த்து நிற்கும்படிச் செய்துவிடும். எனவே, யாரையும் எதிர்பார்த்து நிற்காமல் சொந்தத் தொழில் தொடங்க முடிவு எடுத்தேன். அப்போது திருச்சியில் பெண் பயிற்சியாளர்கள் இருந்தாலும் பெண்கள் நடத்தும் டிரைவிங் ஸ்கூல் இல்லை. அதனால், டிரைவிங் ஸ்கூல் தொடங்கலாம் என நினைத்தேன்” என்று சொல்லும் மதிவதனி, கணவர் இறந்த ஏழு மாதங்களிலேயே ’வதனி டிரைவிங் ஸ்கூ’லை உறையூர் பகுதியில் தொடங்கினார். நகைகளை அடமானம் வைத்தும் கடன் வாங்கியும் ரூ.40 ஆயிரம் மதிப்பில் மாருதி 800 கார் வாங்கிப் பள்ளியைத் தொடங்கினார்.
வீட்டு வாடகை, கடை வாடகை எனச் செலவு அதிகரிக்கத் தொடங்கியது. வாடகை கொடுக்கத் தடுமாறினார். சில நேரம் இரண்டு மாத வாடகையைச் சேர்த்துக் கொடுப்பார். அவரது நிலையைப் புரிந்துகொண்டு வீட்டின் உரிமையாளர்கள் அதை அனுமதித்தனர். ஏற்கெனவே பெண்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்த அனுபவம் இருந்ததால், கார் ஓட்டக் கற்றுத்தருவதில் அவருக்குப் பெரிய பிரச்சினை ஏற்படவில்லை. தொடர்ந்து ஆர்.டி.ஓ அலுவலகப் பணிகளையும் பார்க்கத் தொடங்கினார்.
விமர்சனங்களைப் புறந்தள்ளுவோம்
“கைம்பெண்ணான நான் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்குச் சென்றபோது அங்கிருந்த ஆண்களில் சிலர், ’என்னடா ஒரு பொம்பள வந்து இந்த வேலையெல்லாம் பார்க்குது... பார்ப்போம் எத்தனை நாளைக்கு இது செய்யுது’ என்று என் காதுபடவே பேசினர். இதுபோன்ற கேலி, கிண்டல்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
படிப்படியாக நான் முன்னேறினேன். என்னை ஏளனமாகப் பார்ப்பதும் கேலி பேசுவதும் குறைந்தன. பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்களுக்கும் கார் ஓட்டப் பயிற்சி அளித்தேன். பேராசிரியர்கள், காவல்துறையினர் எனப் பலரும் என்னிடம் பயிற்சி பெற்றுள்ளனர்.
அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து பிள்ளைகளுக்குச் சமைத்துவைத்துவிட்டு ஐந்தரை மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டுவிடுவேன். காலை ஒன்பது மணிக்குள் டிரைவிங் கிளாஸை முடித்துக்கொண்டு, ஆர்.டி.ஓ அலுவலகத்துக்குச் செல்வேன். மீண்டும் மதியம் ஒன்றரை மணிக்கு மேல் ஹோலிகிராஸ் மகளிர் கல்லூரி, இந்திரா காந்தி கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குச் சென்று டிரைவிங் பயிற்சி கொடுப்பேன்.
தவிர பேக்கிங் படிப்பு முடித்துள்ளதால், ஹோலிகிராஸ் கல்லூரியில் பேக்கிங் கிளாஸ் எடுத்து வருகிறேன். வாழ்க்கையில் சிரமம் என்று எதுவுமே இல்லை. வாழ்க்கையைக் கஷ்டப்பட்டு வாழக் கூடாது. இஷ்டப்பட்டு ஏற்றுக்கொண்டு வாழப் பழகினால் சிரமங்கள் தெரியாது. இன்று நிறைய பேர் இந்தத் தொழில் நமக்குச் சரிப்பட்டு வருமா வராதா என்கிற குழப்பத்திலேயே தொழில் செய்யத் தயங்குகின்றனர். எதுவாக இருந்தாலும் முயற்சி செய்து பார்க்க வேண்டும். எந்த விமர்சனம் வந்தாலும் அதை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உலகில் நிறைய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதை நாம்தான் தேடிக் கண்டறிய வேண்டும். வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் சிரமமான நேரங்களில் பெண்கள் தைரியமாக முடிவெடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தயக்கத்தை அறவே விட்டொழிக்க வேண்டும்” என்கிறார் மதிவதனி.
ஒற்றை ஆளாகக் குடும்பத்தை நடத்திவரும் மதிவதனி, தனது சொந்த உழைப்பில் மகளுக்கு எளிமையாகத் திருமணம் செய்து வைத்துவிட்டார். மகனுக்கு வரன் தேடி வருகிறார். சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற கனவு மட்டும் இன்னும் கைகூடவில்லை. “விரைவில் அதையும் அடைந்துவிடுவேன்” எனச் சொல்லும்போதே அதை அடைந்துவிட்ட உற்சாகம் மதிவதனியின் குரலில்!