திருநம்பியும் திருநங்கையும் - 23: பெண்ணாகப் பிறந்துவிட்டு ஏன் ஆணாக மாறவேண்டும்?

திருநம்பியும் திருநங்கையும் - 23: பெண்ணாகப் பிறந்துவிட்டு ஏன் ஆணாக மாறவேண்டும்?
Updated on
2 min read

“நாங்க இப்போதான் உங்களை மாதிரி பார்க்கிறோம். நீங்க பேசுறது எங்களுக்குக் கொஞ்சம் புதுசா இருக்கு. எங்க கல்லூரியில் பல திருநங்கை அக்காக்கள் வந்து பேசியிருக்காங்க. அது எங்களுக்குப் பழகிய விஷயம்.”

“ஆமாம், நீங்கள் எல்லாருமே மூன்றாம் பாலினத்தவர் என்றாலே திருநங்கைகளைத்தான் சொல்றாங்கனு நினைச்சுக்கிறீங்க. நாங்கள் பிறப்பால் பெண்ணாகவும் மனதால் ஆணாகவும் வாழக்கூடியவர்கள். எங்களைத் திருநம்பிகள் என அழைக்கவேண்டும். மூன்றாம் பாலினத்தவர் என்பது திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோரை உள்ளடக்கியது என நீங்கள் புரிந்துகொண்டால் போதும்” என்று நவீன் பதில் அளித்ததும் அடுத்த மாணவி ஒருவர் எழுந்து வேறு கேள்வி கேட்டார்.

“நீங்கள் ஏன் அப்படி அறுவை சிகிச்சை செய்து மாற வேண்டும்? அப்படியே இருந்துவிடக் கூடாதா?”

“மனதும் உடலும் வெவ்வேறாக இருந்தால் அதென்ன வாழ்க்கை? நான் டாக்டர் ஆகலாம் என்றிருந்தேன். ஆனால், வழக்கறிஞராகிவிட்டேன் என்பதுபோல் அல்ல இது. ஆணாகப் பிறக்க வேண்டிய நான் பெண்ணாகப் பிறந்துவிட்டேன். இதை நான் அப்படியே விட்டுவிட முடியாதே. அது மிகப்பெரிய மன உளைச்சல் ஆயிற்றே.”

“உங்கள் அறுவை சிகிச்சை முறை குறித்துக் கூறுங்களேன்.”

“என்னைப் போன்று தன்னை ஆணாக மாற்றிக்கொள்ள விழையும் திருநம்பிகள் சில அறுவை சிகிச்சை முறைகளை மேற்கொள்கின்றனர். மார்பகம், கருப்பை, சினைப்பை ஆகியவற்றை நீக்கிவிடுவோம். அடுத்ததாக, பால் உறுதி அறுவை சிகிச்சை. இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஈடாகும். இதை எல்லாத் திருநம்பிகளும் மேற்கொள்ள இயலவில்லை. காரணம், இது இந்தியாவில் சாதாரணமாகக் கிடைப்பதில்லை.”

“உங்களை நாங்கள் எவ்வாறு அழைக்க வேண்டும் நவீன்?” என்று ஒரு மாணவி நவீனைக் கேட்டாள்.

“நான் ஆணாக உணர்வதால் என்னை நீங்கள் ஆண்பால் கொண்டு அழைக்கவேண்டும். நீங்கள் சமூகத்தில் சந்திக்கும் ஆண்களின் வயதைக் கருத்தில்கொண்டு தம்பி, அண்ணன், ஐயா என அழைப்பீர்கள் அல்லவா? அதுபோல் எங்களையும் அழைக்கலாம்.”

நவீன் தொடர்ந்து பேசினார். “திருநம்பிகள் தங்களின் மாறிவரும் நிலைக்கு முன்னர் குறிப்பாக, அவர்கள் பெற்றோருடன் இருக்கையில் பாவாடை தாவணி, சுடிதார் அல்லது புடவையில் இருப்பார்கள். அவர்கள் தங்களைத் திருநம்பி என உங்களிடம் அறிமுகம் செய்துகொண்டால் அவர்களையும் ஆண் பதம் கொண்டு அழைக்கலாம். குறிப்பாகச் சில இடங்களில் நீங்கள் சந்திக்கும் மூன்றாம் பாலினத்தோரை எப்படி அழைப்பது எனக் குழப்பம் இருந்தால் வாங்க, போங்க எனப் பொதுவாக அழைப்பதும் சிறந்தது.”

கதையல்ல நிஜம்

 திருநம்பிகளுக்கு மார்பகங்கள் நீக்கும் அறுவை சிகிச்சை முக்கியமான தேவை. இதற்கான மருத்துவச் சொல் ‘Double incision mastectomy’. இதைத் தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள 50,000 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை செலவாகிறது. தமிழகத்தில் இந்தச் சிகிச்சை சில அரசு மருத்துவமனைகளில் உள்ளது. ஆனால், பெரும்பாலான திருநம்பிகள் தனியார் மருத்துவமனைகளில் இதை மேற்கொள்கின்றனர்.

 அடுத்ததாகக் கருப்பை, சினைப்பை, கருக்குழாய் ஆகியவற்றை அகற்றும் அறுவை சிகிச்சைகளும் அவசியம். இதன் மருத்துவப் பெயர் ‘Total Hysterectomy’ ஆகும்.

 பாலின உறுதி அறுவை சிகிச்சையில் திருநம்பிகளுக்கு ‘Penis reconstruction’ என்கிற ஒன்று உண்டு. Phalloplasty அல்லது Metoidioplasty என்கிற மருத்துவப் பெயர்களில் இவை உள்ளன. ஆனால், இது இந்தியாவில் அவ்வளவாக நடைமுறையில் இல்லை. இதனை மேற்கொள்ள திருநம்பிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக வேண்டியுள்ளது. இதற்குப் பல லட்சம் ரூபாய் செலவும் ஆகிறது.

 திருநம்பிகள் பொருளாதாரத்தில் பின்தங்கியே காணப்படுகிறார்கள். நிறைய படித்த திருநம்பிகளும் தங்களது பாலினத்தை வெளிகாட்டாமல் வேலை செய்துவருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

 ஏன் இந்தப் பெண் தன்னை ஆணாக நினைக்கவேண்டும் என்கிற பொதுப்புத்தியில் இருந்து விலகி, அந்த எண்ணம் உள்ளவர்கள் திருநம்பிகள் என்பதைப் புரிந்துகொண்டு அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 திருநங்கைகள் ‘ஜமாத்’ என்கிற குழுவில் இணைந்து ஒருவருக்கொருவர் உதவியாக வாழ்கின்றனர். இதுபோன்ற ‘ஜமாத்’ திருநம்பிகளுக்குக் கிடையாது. மேலும், பெண்ணுடையில் ஒரு திருநம்பி வீட்டைவிட்டு வெளியேறி வேறொரு வீடு பிடித்துத் தனக்கான பால் உறுதி சிகிச்சைகளை மேற்கொள்வது மிகக் கடினம்.

 இவர்களுக்கான பால் உறுதி அறுவை சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் மருத்துவர்கள் இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளதால் இவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது என்பதை நாம் மனதில்கொண்டு திருநம்பி என அறிந்தவுடன் அவருக்கான தேவைகளை உடனிருந்து பூர்த்திசெய்திட பெற்றோர் முன்வர வேண்டும்.

 தமிழக அரசு சென்னை, மதுரை போன்ற பெருநகர அரசு மருத்துவமனைகளில் மூன்றாம் பாலினத்தவருக்குச் சிறப்பு சிகிச்சைப் பிரிவு உருவாக்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

விழிப்புணர்வுக் கூட்டம் முடிந்தவுடன் கல்லூரித் தாளாளர் நன்றி கூறுகையில், “பல இடங்களில் திருநம்பி என்கிற வார்த்தையைக் கேள்விப்படுகிறோம். இன்று அந்தத் திருநம்பி ஒருவரையே நேரில் சந்தித்துப் பல தகவல்களை நாம் புரிந்துகொண்டோம். உணவு, உடை, திருமணம் போன்றவற்றைத் தேர்வுசெய்யும் உரிமை எப்படி ஒரு தனிமனிதனுக்கு உள்ளதோ அதைப் போன்றதுதான் அவர்களின் இனத்தைக் குறித்து அவர்கள் சுதந்திரமாகப் பேசும் உரிமையும். இதை நாம் அனைவரும் புரிந்துகொண்டு திருநம்பிகளை அரவணைத்து அன்பு காட்ட வேண்டும்” என்றார்.

மிகச் சிறப்பாக அந்தக் கூட்டம் முடிவடைந்தது.

(தொடரும்)

கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in