

காலில் சக்கரம் கட்டாத குறைதான். அவருக்கென்று ஓர் உலகத்தை, 24 மணி நேரத்துக்கான கவலையற்ற, கண்ணீரில் நனையாத ஒரு நாள் வாழ்க்கையை வாழ்வதற்காகக் காலில் சலங்கைகளைக் கட்டியபடி ஆடிக்கொண்டிருக்கிறார் நித்யா. 26 வயதுதான், ஆனால் வாழ்க்கை குறித்த தீர்க்கமான பார்வையோடும் எதிர்கால இலக்கு குறித்த உறுதியோடும் இருக்கிறார். தன்னால் நாட்டியத் தாரகைகள் பலரை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் பள்ளிக் குழந்தைகளுக்குப் பரதநாட்டியம் கற்றுத்தந்து கொண்டிருக்கிறார் நித்யா.
பரதநாட்டியப் பள்ளி நடத்துவதில் என்ன சிறப்பு? எல்லாரையும் போலத்தானே இவரும். நாட்டியம் பயின்றால் பயிற்சிப் பள்ளி நடத்துவது இயல்புதானே. இதில் நித்யா சலங்கை கட்டிக்கொண்டு ஆடுவதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கக்கூடும். ஆயிரம் நித்யாக்கள் நடனமாடலாம். ஆனால், திருநெல்வேலி புதுப்பேட்டை, அரசரடி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த திருநங்கை வி. நித்யா நாட்டியம் ஆடுவதும் அவரால் அந்தக் கலை கற்பிக்கப்படுவதும் அந்தக் கலையைக் கற்றுத்தேர்வதற்கு அவர் அனுபவித்த கஷ்டங்களின் பின்னணியும் கொஞ்சம் வித்தியாசமானவை.
புறக்கணித்தது வீடு
புனித அந்தோணியார் பள்ளியில் இவர் மாணவனாகச் சேர்ந்தார். ஏழாம் வகுப்பு வரை இவரும் மற்ற மாணவர்களைப் போலத்தான் இருந்தார். எட்டாம் வகுப்பில் சேர்ந்த பிறகு தன் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்தார். ஒன்பதாம் வகுப்பு படித்தபோது வீட்டில் உள்ளவர்கள் இவரது நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லாத் திருநர் வாழ்விலும் நடப்பதுதான் இவரது வாழ்க்கையிலும் நடந்தது. வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு என்ன நடந்தது?
“வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதும் பாளையங்கோட்டை சாந்தி நகரில் இருந்த திருநங்கைகளுடன் தங்கினேன். பின்னர் பெங்களூருவுக்குச் சென்று பால்மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். ஓராண்டு அங்கேயே வாழ்க்கையை ஓட்டினேன். பின்னர் மீண்டும் திருநெல்வேலிக்கு வந்து கடைகளிலும் பேருந்துகளிலும் யாசகம் பெற்றுப் பிழைப்பு நடத்திவந்தேன். கிராமிய நடனம், மேற்கத்திய நடனம் போன்றவற்றில் எனக்கு உள்ளூர ஆர்வம் இருந்தது. ஆனால், அவற்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை.
அரசின் வழிகாட்டல்
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் திருநங்கையருக்கான குறைதீர் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்றேன். அரசுத் துறை அதிகாரிகள் ஒவ்வொருவரின் கோரிக்கையைக் குறித்தும் கேட்டனர். பலரும் வீடு வேண்டும், ரேஷன் அட்டை வேண்டும் என்றெல்லாம் தெரிவித்தனர். ஆனால், நான் நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எனது ஆவலைத் தெரிவித்தேன். அதை ஏற்ற அதிகாரிகள், திருநெல்வேலியில் உள்ள அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து பயில வழிகாட்டினர். அரசின் எந்தவொரு திட்டமும் சரியான வகையில் பயனாளிகளைச் சென்றடையும்போதுதான் அந்தத் திட்டம் முழுமைபெறும். என் வாழ்க்கை வளமாக உதவியவர்களும் அரசு அதிகாரிகள்தாம்.
2020ஆம் ஆண்டில் அரசு இசைப்பள்ளியில் சேர்ந்தேன். இப்பள்ளியின் ஆசிரியை செல்வமுத்துக்குமாரி எனக்கு இன்னொரு தாயாக இருந்து, நான் பரதநாட்டியம் கற்க அனைத்து உதவிகளையும் செய்தார். ஒருபுறம் எனது செலவுகளுக்கு யாசகம் பெற்றுக்கொண்டே, மறுபுறம் நாட்டியம் கற்றேன்” என்கிறார் நித்யா.
இசைப்பள்ளியில் நடனம் கற்றுத் தேர்ந்த ஓராண்டுக்குப் பின் திருநெல்வேலி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டியம் கற்றுத்தரும் வாய்ப்பு நித்யாவுக்குக் கிடைத்தது. அதுதான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாகவும் அமைந்தது. பொதுச் சமூகத்தின் அங்கீகாரமும் வழங்கப்படும் வாய்ப்புகளுமே திருநர் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதற்கு நித்யாவின் வாழ்க்கையும் சான்று.
வாய்ப்புகளால் வளமாகும் வாழ்வு
“என் திறமையின் மீது நம்பிக்கை வைத்து இப்போது பலரும் நாட்டியம் கற்றுத்தரும் வாய்ப்பை எனக்கு அளிக்கிறார்கள். இப்போது திருநெல்வேலி, திருச்செந்தூர் என்று பிள்ளைகளுக்கு நாட்டியம் சொல்லித்தர இருசக்கர வாகனம், பேருந்து, ரயில் என்று நாள்தோறும் பயணிக்கிறேன். அடுத்த கல்வியாண்டு முதல் மதுரை சாரதா வித்யாவனத்திலும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் பணிகளால் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையைச் செவ்வனே நகர்த்திவருகிறேன். இப்போது யாரிடமும் யாசகம் பெறுவதில்லை. எனது சொந்தக் காலில் நிற்கிறேன். எனது நம்பிக்கையைக் குலைக்கும் வகையிலான எதையும் நான் ஏற்பதில்லை” என்று சொல்லும்போதே நித்யாவின் குரலில் அவ்வளவு உறுதி.
நித்யாவின் திறமையை அங்கீகரித்து அவரை இந்த ஆண்டுக்கான ‘கலைவளர்மணி’ விருதுக்கு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்திருக்கிறது. திருநெல்வேலி அரிமா சங்கத்தினர் சிறந்த நடனக் கலைஞர் விருது வழங்கிக் கௌரவித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற 7ஆவது பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் நித்யாவின் நாட்டியம் அனைவரின் பாராட்டைப் பெற்றது. இன்னும் பல மேடைகளை அலங்கரிக்கக் கால்களில் சலங்கை கட்டிக்கொண்டு காத்திருக்கிறார் நித்யா.
இப்போது நித்யா, அவருடைய அம்மா மீனாட்சியுடன் புதுப்பேட்டையில் உள்ள வீட்டில் புதிய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார். நித்யாவின் ‘வாட்ஸ் அப்’ முகப்புப் படத்தில் அர்த்தநாரீஸ்வரர் கம்பீரமாக நடனமாடிக்கொண்டிருக்கிறார். ஒரு கணம் அது நித்யாவின் படமாகத் தோற்ற மயக்கம் தருகிறது.