

பிரபல தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் தோசை பற்றிய விவாதம் அண்மையில் நடந்தது. தோசை ஓர் உணவு என்பதைத் தாண்டி, குடும்பம் மற்றும் சமூகத்தில் நிலவும் சமையல் குறித்த நுண்அரசியல் அதன் வாயிலாக வெளிவந்தது.
தாய்மை எனும் பிம்பத்தைச் சமூகம் எப்போதும் பெண்கள் மீது கட்டமைத்தவாறே இருக்கிறது. அதன் நீட்சிதான், ‘உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு’ என்பது போன்ற அலங்கார வரிகள். சிறு வயதிலிருந்தே அம்மாவையும் சமூகத்தில் பிற பெண்களையும் பார்த்து வளரும் பெண் குழந்தைக்கு அப்போதிருந்தே, வீட்டு ஆண்களும் விருந்தினர்களும் சாப்பிட்ட பிறகே சாப்பிட வேண்டும், தனக்குப் பிடித்த பதார்த்தம் தீர்ந்துவிட்டாலும் இருப்பதைச் சாப்பிடுவது என்பது மறைமுகமாகச் சொல்லப்பட்டுவிடும். தாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் வைத்து அவையே பெண்களின் இயல்பெனக் கருதி அந்தக் குழந்தைகள் பின்பற்றுகின்றனர்.
முன்கூட்டியே சாப்பிட்டாலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் எல்லாப் பதார்த்தங்களும் இருக்கின்றனவா என்கிற எண்ணத்துடனேயே பெண்கள் சாப்பிடுவர். பெரும்பாலான ஆண்களுக்கு மற்ற குடும்ப நபர்கள் பற்றிய எண்ணமெல்லாம் உணவு விஷயத்தில் இருக்காது. இதன் காரணம் வளர்ப்பு முறை.
இது உணவு மட்டுமல்லாது உடல்நலம், மனநலம் சார்ந்த விஷயங்களிலும் எதிரொலிக்கிறது. பெரும்பான்மைப் பெண்கள், தங்கள் உடல்நலப் பிரச்சினை தினசரி வாழ்க்கையைப் பாதிக்க ஆரம்பித்த பிறகே மருத்துவ உதவிகளை நாடுகின்றனர். சிறுவயதில் கூட்டாஞ்சோறு விளையாடக் கையில் எடுக்கும் சட்டியும் பானையும் காலமெல்லாம் பெண்களின் கைவிலங்காக மாறிவிடுவது வேதனை.
இக்காலத்தில் சமையல் ஓர் அடிப்படைத் திறன் என்பதை உணர்ந்து ஆண்கள் சமயலறை நோக்கி வருவது சிறு ஆறுதல். பெண்கள் குடும்பத்திற்கு தரும் அதே முக்கியத்துவத்தைத் தம் உடல்நலத்துக்கும் உணவுக்கும் தர வேண்டும். முடிவில் குடும்பத்தின், சமூகத்தின் அச்சாணியாக இருப்பவர்கள் பெண்கள்தானே!
- பிரியங்கா கதிர்.
| நீங்களும் சொல்லுங்களேன்... தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை பிறருக்குப் பாடமாக அமையும் அனுபவம் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். |