திருநம்பியும் திருநங்கையும் - 22: அன்னமிடும் கைகள்

திருநம்பியும் திருநங்கையும் - 22: அன்னமிடும் கைகள்
Updated on
3 min read

“ரெண்டு தோசை, மீன் குழம்பு பத்து ரூபா. இட்லி வேணும்னா மூணு இட்லி மீன் குழம்பு அதே பத்து ரூபாதான்.”

“மீன் வேணாம்னா மூணு ரூபா கொறைச்சிக்கோங்க சார்.”

“நளினிம்மா டிபன் கடைன்னா சும்மாவா? அந்த ருசியும் அவங்க அன்போட பரிமாறுவதும் அடிச்சிக்க ஆளே இல்லையே. சரிங்கம்மா, உங்களுக்கு எப்படி இந்த சகாய விலை கட்டுப்படி ஆவுது?”

“அடேய் தம்பி, நீ நம்ம கடைலதான் தினமும் சாப்புடுற. அதனால உன்கிட்ட சொல்றதுல தப்பில்ல. நான் ஒரு தனி ஆளு, எனக்குப் பெருசா என்ன செலவு இருக்கப் போவுது? கடைல வேலை செய்றவங்க சம்பளம், அசல் இது போக எனக்குத் தேவைக்குப் பணம் வந்தா போதும்னு நெனைக்குறேன்டா. திருநங்கை நான் உழைச்சி வாழுறேன்னு மீன் மார்க்கெட்ல எனக்கு சகாய விலைல மீன் கொடுக்குறாங்க புண்ணியவானுங்க. அவங்க நல்லா இருக்கணும். கோயம்பேடு காய்கறி மார்க்கெட்லயும் எனக்கு அள்ளிக் கொடுக்குறாங்க. எங்களை மாதிரி திருநங்கைங்க சுயதொழில் செஞ்சா பொதுமக்கள் நெறைய உதவி செய்துடா ராஜா.”

வாடிக்கையாளர் வந்ததும் நளினிம்மா பேச்சை நிறுத்திட்டு, வியாபாரத்திற்குச் சென்றார்.

“நளினிமா என் வீட்ல பொங்கலும் பூரியும் வாங்கிட்டு வரச் சொன்னா, கட்டிக் கொடுங்க.”

“நளினிம்மா உங்க கடை பூரி மட்டும் வெள்ளையா இல்லையே ஏன்? கோபால் கடைல வெள்ளையா இருக்கும்.”

“கண்ணு, பொதுவாவே மைதா மாவுல செய்யற பூரி உடம்புக்கு நல்லதல்ல. நான் கோதுமைல பூரி போட்டுத் தரேன். அது கலர் வேறயா இருக்கும். ஆனா உடம்புக்குப் பிரச்சினை வராது.”

“நளினிக்கா இந்த மாசம் உங்க சுய உதவிக்குழு லோன் முடியுது. அடுத்து லோன் வாங்க போறீங்களா?”

“ஆமா செண்பகம்... சிறு தானியத்துல ஸ்நாக்ஸ் போட்டு சாயந்திரத்துல விக்கலாம்னு இருக்கேன். ஸ்கூல் பசங்க நெறைய பேரு சாப்புடுவாங்க. அதுக்கு நம்ம திருநங்கை மல்லிகா வேலைக்கு வரேன்னு சொல்லியிருக்கா. அதுக்கான பொருள்கள் கொஞ்சம் வாங்கவேண்டி இருக்கு.”

“மல்லிகா மதுரைல இருந்து வந்தவ. அவளுக்கு இதைச் சுவையா போட வரும். அதனால லோன் தேவைதான்” என்று செண்பகம் ஆமோதித்தாள்.

“நளினிம்மா, இந்தக் கடைய பத்து வருசத்துக்கு முன்ன இங்க போடும்போது யாரும் கடை பக்கம் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டாங்க. அருவருப்பா முகத்தைச் சுளிச்சிக்கிட்டுக் கடையைத் தாண்டிப் போனவங்க எவ்ளோ பேரு தெரியுமா?”

“இதோ பாருங்கம்மா, நீங்க கடை போடுறீங்க, ஆனா இந்தக் கடை வாசல்ல உங்க ஆளுங்க வந்து உட்காரக் கூடாது. தேவை இல்லாம எந்த ஆம்பளையும் கடைல ரொம்ப நேரம் உட்காரக் கூடாது, புரிஞ்சிக்குங்க. ஒண்ணாம் தேதி ஆனா வாடகை சரியா வந்துடனும்னு என்கிட்ட சொன்னாங்க. ஆனா, பக்கத்து டீக் கடைல காலைல வந்தா சாயந்திரம் வரைக்கும் அவன் நண்பர்கள் இருக்காங்க. அது இந்த ஓனருக்குத் தெரியல. என்ன பண்றது, நாம கௌரவமா பிழைக்கணும் அவ்ளோதான்.”

“இதோ பாருமா, நீ டீ போட்டு விற்கக் கூடாது.”

“சரிங்க அண்ணா. என்னால உங்க வியாபாரம் கெடாது. உங்க கடை இருக்கும்போது நான் டீ போட மாட்டேன்.”

“ஏய், உன் பேரு என்ன? ஆளு சூப்பரா இருக்க. எந்த ஊரு நீ?”

“அண்ணே, நான் சுய தொழில் செஞ்சி பிழைக்கிறேன். என்னை உங்க சகோதரியா பாருங்க. நான் வாழ்க்கைல முன்னேற அண்ணனுங்க நீங்கதான் உதவியா இருக்கணும்.”

இது குறித்து நளினிம்மா யார்கிட்டயும் சொன்னது கிடையாது.

“சொல்றதால என்ன ஆகப்போகுது, அந்தப் பிரச்சினை சரியாகிடுச்சி அவ்ளோதானே. பொது இடத்துல வியாபாரம் செஞ்சா நல்லவனும் கெட்டவனும் மாறி மாறித்தான் வருவாங்க. நாமதான் புரிய வைக்கணும்.”

“அக்கா எனக்கொரு கேள்வி. கடைல உணவு மீதி இருந்தா வேலை செய்றவங்க வீட்டுக்கு ஏன் குடுக்க மறுக்கறீங்க? அவங்க ஏழைங்கதானே. அவங்களுக்குக் கொடுத்தா என்ன?”

“அடியே செண்பகம், கடைல வேலை செய்றவங்கள நல்லா பாத்துப்பேன். அவங்க சாப்பிடலாம் ஆனா வீட்டுக்குக் கொடுக்க ஆரம்பிச்சா தினமும் டிபன் மீதியாகணும்னு மனசுல தோணும். அது மனித இயல்பு. அப்படி தினமும் மீதி ஆனா, நாம எப்படி லாபம் எடுக்க முடியும்?”

“அப்படின்னா தினமும் ரோடு பெருக்குற ரெண்டு பேருக்கு டிபன் சும்மா கொடுக்குறியே அது எதுக்கு?”

“அவங்க கான்ட்ராக்ட் பணியாளர் செண்பகம். அதிக சம்பளம் இல்ல. அதோட என் கடைல எவ்ளோ குப்பைனாலும் முகம் சுளிக்காம சுத்தம் பண்ணிடுறாங்க.”

“அக்கா ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கிற நீ. பொழைக்கத் தெரிஞ்சவக்கா.”

கடை திறப்புவிழாவில், “நளினியம்மா சிறுதானியச் சிற்றுண்டிக் கடையை நான் தொடங்கி வைப்பதில் பெருமை கொள் கிறேன். இந்த விழாவிற்கு வந்திருக்கும் இந்த ஏரியா கவுன்சிலர் அவர்களையும், நம்ம ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அவர்களையும் பெருமையோடு வரவேற்கிறேன். திருநங்கை நளினியம்மா அவர்களின் இந்தத் தொழிலுக்குத் தொடர்ந்து எதிர்காலத்தில் தேவைப்படும் உதவிகளை நாம் அனைவரும் சேர்ந்து செய்திடுவோம் என உறுதி கூறுகிறேன்” என்று மேயர் பேசிவிட்டு அமர்ந்தார்.

விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் கடையின் கட்டிட உரிமையாளர்.

(தொடரும்)

கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.

கதையல்ல நிஜம்

l திருநங்கைகள் பலர் மாற்றுத் தொழிலைத் திறம்படச் செய்கின்றனர் என்பதை உணர்த்திடவே இந்தக் கதை. சமையலில் அதிக விருப்பத்துடன் பல திருநங்கைகள் உள்ளனர். விழாக்களுக்கு ஆர்டர் எடுத்துச் சமைத்துக் கொடுப்பது, தள்ளுவண்டிக் கடைகள், வாடகை உணவகங்கள் என இத்தொழிலில் பலர் உள்ளனர்.
l சென்னையில் அருணாராணி எனும் திருநங்கை தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம் மற்றும் வட இந்தியச் சமையல் என அசத்தல் கடை ஒன்றினை நடத்துகிறார். வட சென்னையைச் சேர்ந்த மகா அம்மாள் அதிக மக்கள் உள்ள இடத்தில் அசைவ உணவு வகைகளை அருமையாகச் சமைத்து குறைந்த விலைக்கு விற்றுவருகிறார்.
l கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் உள்ள மதனா அம்மாள், ராஜு அம்மாள் போன்றவர்கள் பிரியாணி மாஸ்டர்கள். மேட்டுப்பாளையம் ரோஜா அக்கா, சுகன்யா போன்றோர் செய்யும் மட்டன் பிரியாணி, கத்திரிக்காய் பச்சடி, பூசணிக்காய் அல்வா மூன்றும் சேர்த்துச் சாப்பிட நமக்குக் கொடுப்பினை வேண்டும்.
l தமிழக அரசின் சமூக நலத்துறை திருநங்கை மக்கள் பலருக்கு இதுபோன்ற சுய தொழிற்பயிற்சி அளித்து, அதைத் தொழிலாகச் செய்திட ரூபாய் 50,000 வரை நிதியுதவியும் அளிக்கிறது. அந்தப் பணத்தைத் திருப்பி அளிக்க வேண்டியதும் இல்லை.
l CGI எனும் தனியார் நிறுவனம் 300க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு 15 வகையான திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை வழங்கிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
l மத்திய அரசு SMILE [Support for Marginalized Individuals for Livelihood and Enterprise] எனும் திட்டத்தின் மூலமாக ஆர்வமுள்ள திருநங்கைகள், திருநம்பிகளுக்குத் தொழிற்பயிற்சியை வழங்கிவருகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in