

“அடுத்த வாரம் கண்டிப்பாகப் பணம் கட்டிடுறேன்மா.”
“அடுத்த முறை லேட் ஆக்காதே காமினி. இது ஐந்து பேருடைய பணம். நீ வாங்கியிருக்குறது உள்கடனா இருந்தாலும் பரவாயில்லை, வெளிக்கடன். வங்கியில் அடுத்த முறையும் நாம சுயதொழிலுக்கு லோன் வாங்கணும் மறந்துடாதேம்மா” எனப் பிரதிநிதி 1 எச்சரித்தார்.
“இந்த மாதம் நம்ம சுயஉதவிக் குழுக்களின் கூட்டமைப்புக் கூட்டம் நடக்கப்போகுது. அந்தக் கூட்டத்துல நானும் கலந்துக்கப் போறேன். அங்க என்ன பேசணும்னு எனக்குச் சொல்லுங்க” எனக் கேட்டார் பரிமளா அக்கா.
“அக்கா நம்ம திருநங்கைகள் சுயஉதவிக் குழுக்களைக் கூட்டமைப்பா பதிவு செய்ததற்கு அந்தச் சுயஉதவிக் குழுவுக்கு நன்றி சொல்லுங்க. நம்ம குழுவுல ரெண்டு பேரு ஹோட்டல் ஆரம்பிக்க 10 லட்சம் கேக்குறாங்க. அதை அங்கே சொல்லுங்க. கூட்டமைப்புக்கு லோன் கிடைத்தவுடன் நம்ம குழுவுக்கு அதை வாங்கிக் கொடுத்துடுங்க.”
“ரொம்ப சந்தோஷம். இந்தப் பணம் கிடைச்சா நிச்சயமா நாங்க ரெண்டு பேரும் ரொம்பப் பெரிய ஆளா வந்துடுவோம்” என்று மினியும் ராணியும் எல்லா உறுப்பினர்களையும் பார்த்துக் கூறினர்.
“போனமுறை அரசாங்கம் தொழில் ஆரம்பிக்கக் கொடுத்த 100 சதவீத மானியப் பணம் 50,000 ரூபாய் உங்க ரெண்டு பேருக்கும் வந்தது. அதை நீங்க வீண் பண்ணல. அந்த ஒரு லட்சத்தில் சமையல் பாத்திரம்தான் வாங்குனீங்க. அதனால, இந்த முறை இந்த லோனை உங்களுக்கு நாங்க எல்லாரும் வாங்கித் தருகிறோம். மினிராணி ஹோட்டல்னு ரெண்டு பேரும் சேர்ந்து ரெடி பண்ணிடுங்க” என்று சிரித்துக்கொண்டே கூறினார் ஊக்குநர் பரிமளா அக்கா.
| கதையல்ல நிஜம்
|
“அரசாங்கம் நம்ம திருநங்கைகள் வாழ்க்கையில முன்னேறணும்னு நம்ம குழுக்களுக்குத் தனிக்கவனம் செலுத்தி வராங்க. அதனால மினி, ராணி மட்டுமில்ல அடுத்த மூணு பேரும் சீக்கிரம் வெளிக்கடன் வாங்கி நல்ல தொழிலை ஆரம்பிக்கணும். சென்னை அம்பத்தூர்ல திருநங்கை சங்கரி அம்மா சுயஉதவிக் குழு மூலமா வங்கியில் லோன் எடுத்து அங்கேயே நர்சரி கார்டன் வச்சிருக்காங்க பாருங்க. அதுமாதிரி நாமளும் புதுப்புது தொழிலை ஆரம்பிக்கணும்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலமா போனவாரம் ஒரு பயிற்சி நடத்தினாங்க. அதுல மாலினியும் நானும் கலந்துக்கிட்டோம். அதுல பினாயில், சோப்பு போன்றவற்றைத் தயாரிக்கக் கத்துக்கொடுத்தாங்க. இதுக்கு உள்கடனே போதும். சின்ன செலவுதான் ஆகுது.
குழுவோட அறிக்கை மற்றும் வரவு செலவுக் கணக்கை ஒவ்வொரு மாதமும் ஒருவர் பொறுப்பெடுத்து எழுதணும். இது ரொம்ப முக்கியம். தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க (NULM) அதிகாரிகள் எப்போது வேணா இது குறித்து ஆய்வு செய்வார்கள். மேலும், நம்ம ஏரியாவுல இன்னும் ஐந்து குழுக்களை ஆரம்பிக்கணும்.”
அரசாங்கத்துல இருந்து வந்த கடிதத்தை ஊக்குநர் பிரித்துப் படித்தார். அதில்,
‘உங்கள் சுயஉதவிக் குழுவிற்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள். உங்கள் குழுவின் அறிக்கை, வரவு செலவு போன்றவை மிகவும் சிறப்பாக உள்ளன. மற்றக் குழுக்களுக்கு நீங்கள் உதாரணமாக உள்ளீர்கள். ‘அனைவருக்கும் கல்வி’ மற்றும் ‘மகளிர் ஊக்கத்தொகை’ பணிகள் போன்றவற்றிலும் உங்கள் குழுவினர் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்’ என்று எழுதப்பட்டிருந்தது.
படித்து முடித்த ஊக்குநர், அந்தக் கடிதம் மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்ததாகக் கூறினார். “நாமும் இனிப் பொதுநிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும்” எனத் தீர்மானித்துக் கூட்டத்தை முடித்துக்கொண்டார்.
(தொடரும்)
கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்