

எங்கள் வீட்டுக்கு என் அம்மாவின் தோழி வந்திருந்தார். வயது நாற்பதுகளின் இறுதியில் இருக்கும். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் பாட்டி ஒருவரும் வந்தார். அவர் எழுபது வயதைக் கடந்தவர். என் அம்மாவின் தோழி, “என் வீட்டுக்காரர் என்ன சமைக்கச் சொல்கிறாரோ, அதைத்தான் சமைக்க வேண்டும். இல்லாவிட்டால் சாப்பிடவே மாட்டார். ஒருவேளைக்குச் சமைத்ததை அடுத்த வேளைக்குச் சாப்பிட மாட்டார். மீந்துபோன உணவைக் கொட்டிவிடச் சொல்வார். அவர் சொல்வதை மட்டுமே நான் செய்ய வேண்டும்” என்று என் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். உடனே, அந்தப் பாட்டி, “உனக்கென்ன புள்ளையா, குட்டியா? அவர் சொல்வதைச் செய்வதைத் தவிர உனக்கு வேறு என்ன வேலை? பிள்ளை இருந்திருந்தால் பிள்ளையைக் கவனிக்கிறேன் என அவரை எதிர்த்துப் பேசியிருப்பாய். தனியாளாக இருக்கும் நீ அவர் சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும், எதிர்த்துப் பேசக் கூடாது” என்றார். என் அம்மாவின் தோழியோ வாடிய முகத்துடன் அதைக் கேட்டுக்கொண்டார்.
அவர்கள் இருவரும் சென்றபின் என் அம்மாவிடம் இதைப் பற்றிக் கேட்டேன். என் அம்மாவோ, “வயதானவங்க அப்படித்தான் பேசுவாங்க” என்று சொன்னதோடு இதுபோன்ற பேச்சைக் கேட்டுக் கேட்டுத் தன் தோழிக்கும் பழகியிருக்கும் என்றார். வாடிய அவரது தோழியின் முகம் கண்ணில் நின்றது. முதியவர் என்பதற்காக அந்தப் பாட்டி பேசியதை என்னால் எளிதாகக் கடந்து செல்ல இயலவில்லை. நாற்பதுகளின் இறுதியிலேயே இப்படி வசைப்பாடப்படுகிறார் என்றால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வளவு அவமானங்களைச் சந்தித்திருப்பார். கண்டிப்பாக அவருடைய கணவர் அதில் பாதியைக்கூட அனுபவித்திருக்க மாட்டார்.
குழந்தை பெறுவதில் மட்டுமா பெண்மையின் முழுமை அடங்கியிருக்கிறது? குழந்தைகள் இல்லாத தம்பதியர் தங்களைத் தேற்றிக்கொண்டு வாழ ஆரம்பிப்பதற்குள் ஆண்டுகள் பல ஓடிவிடுகின்றன. அவர்கள் ஒருவழியாக அனைத்தையும் ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பிக்கும் போது, அவர்கள் மனம் நோகும்படியான வார்த்தைகளால் நாம் அவர்களைக் காயப்படுத்தாமல் வாழ முயல்வோம்.
- பி.ஷைனி எமிமா, திருச்சி.