

கதைகளிலும் திரைப்படங்களிலும் மட்டும் காதலைக் கொண்டாடும் சமூகமாகத்தான் இன்றும் இருக்கிறோம். அறிந்தவர் தெரிந்தவர் காதல்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்குத்தான் நம் மனங்கள் விசாலமடைந்திருக்கின்றன. சொந்த வீட்டில் காதல் என்றால் அதை மறுக்க ஆயிரம் காரணங்களைச் சொல்வார்கள். அதில் முக்கியமானது சாதி.
பாராட்டி, சீராட்டி வளர்க்கும் பெற்றோர் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள் என்கிற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு காதலும் பூக்கிறது. ஆனால், காதலித்த பிறகுதான் பெற்றோரின் இன்னொரு முகமே காதலர்களுக்குத் தெரிய வருகிறது. விளைவு, பயந்தவர்கள் பிரேக் அப் செய்துகொண்டு வேறு வாழ்க்கைக்குச் சென்றுவிடுகிறார்கள். நம் பெற்றோர்தாமே, என்ன செய்துவிடப் போகிறார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கும் காதலர்கள் பலர் ‘ஆணவக் கொலை’க்கு இரையாகிவிடுகிறார்கள்.
கண்டதும் காதல் என்று சொல்வதைப் போல, பிள்ளைகள் காதலிக்கி றார்கள் என்று தெரிந்தவுடன் பெற்றோருக்குக் கொலை யுணர்வு வந்துவிடுமா? காலம் காலமாகப் பெண்கள் வீட்டின் சொத்தாகவும் மானம் காப்பவர்களாகவும் சொல்லி வளர்க்கப்படும் இந்த ஆணாதிக்கச் சமூகத்தில், தூங்கிக்கொண்டிருக்கும் கொலையுணர்வு காதல் என்றதும் விழித்துவிடுகிறது. குழந்தைகள் தங்களை மீறிச் செல்லும்போது, கொலையையும் செய்துவிடுகிறது. பால் பேதமில்லாமல் குடும்பத்தின் கெளரவம் என்கிற பெயரில் சாதியும் பொருளாதாரமும் பின்னிருந்து இந்தப் பாதகச் செயல் களைச் செய்துவிடுகின்றன.
சாதியின் காரணமாக என் அப்பாவின் காதல் கைகூடவில்லை. என் சித்தப்பாவும் அத்தையும் உறவினர்களைக் காதலித்தாலும் பொருளாதாரம் போன்ற காரணங்களால் அவையும் கைகூடவில்லை. காதல் பற்றி என் பெற்றோர் எப்போதும் எதிர்மறையான கருத்து களைச் சொன்னது இல்லை. ‘பிள்ளை களுக்கு எதிரில் காதலை உயர்வாகச் சொல்லாதீங்க, அப்புறம் யாரையாவது காதலிச்சிட்டு வந்து நிக்கப் போகுதுங்க’ என்று என் அம்மாவிடம் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு விவாதம்...
இன்று தடுக்கி விழுந்தால் ‘லவ் யூ’ என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் ‘லவ் யூ’ என்பதைக்கூட ரகசியமாகத்தான் சொல்ல முடியும். அப்போது அமெரிக்காவிலிருந்து சங்கர் மேனன் என்கிறவர் அறிவொளி இயக்கத்தைப் பார்வையிட வந்திருந்தார். எங்கள் வீட்டில் சில நாள்கள் தங்கினார். விடைபெறும் அன்று என்னிடம், “நீ யாரைக் கல்யாணம் செய்துகொள்ளப் போறே?” என்று கேட்டார். நான் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தேன். அவர், “பதில் வேண்டும்” என்றார். நான் புத்திசாலித்தனமாகச் சொல்வதாக நினைத்துக் கொண்டு, “எனக்கு 15 வயதுதான் ஆகிறது. திருமண வயது வந்த பிறகு பார்க்கலாம்” என்றேன். “இப்போதே திருமண வயது என்று நினைத்துக் கொண்டு சொல்” என்றார்.
“என் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணந்துகொள்வேன்” என்றேன். “உன் பெற்றோர் திருமணம் முடிந்துவிட்டது. உன் திருமணத்தை நீதான் முடிவு செய்ய வேண்டும்” என்றார். “பெற்றவர் களுக்குத் திருமணம் செய்துகொடுக்கத் தெரியாதா?” என்று கேட்டேன். “அவரவர் திருமணத்தை அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார். “ஒருவேளை நான் தேர்ந்தெடுப்பவர் சரியில்லை என்றால்?” என்று நான் கேட்க, “உனக்குப் படிப்பு இருக்கும். அதை வைத்து வேலைக்குச் சென்று சம்பாதிக்கலாம். எந்தப் பிரச்சினை வந்தாலும் சமாளிக்கலாம்” என்றார். நான் அமைதியாக நின்றேன். “உன் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமும் தோல்வியடையலாம். நீயோ பெற்றோரோ ஒருவரைத் தேர்ந்தெடுத்தாலும் வெற்றியடையவோ தோல்வியடையவோ சமமான வாய்ப்பு உண்டு. ஓர் ஆணோ பெண்ணோ தன் இணையை அவர்கள்தாம் தேர்ந்தெடுக்க வேண்டும். மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் அடுத்தவருக்கு அந்த வாய்ப்பை வழங்குவதில்லை. பிற்காலத்தில் நீ காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாக நான் கேள்விப்பட்டால் மகிழ்வேன்” என்றார்.
என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. “உங்கள் மகளுக்கும் இதைத்தான் சொல்வீர்களா?” என்று கேட்டேன். “என் மகளுக்குச் சொல்லாமலே தெரியும். அவள் ஒரு அமெரிக்கனையோ ஆப்பிரிக்கனையோ திருமணம் செய்கிறேன் என்றாலும் மகிழ்ச்சியடைவோம். திருமணத்துக்கு எங்களை அழைத்தால் செல்வோம். அல்லது திருமணம் செய்துகொண்டு வந்து சொன்னாலும் மகிழ்ச்சியாக ஆசிர்வதிப்போம். ஏனென்றால், தன் வாழ்க்கை இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை என் மகளுக்கு மட்டுமே இருக்கிறது என்று நானும் என் மகளும் நினைக்கிறோம்” என்றார். சங்கர் மேனனுடனான இந்த உரையாடல் நான் வளர்ந்த பின்னர் என் வாழ்க்கையை நான் தேர்ந்தெடுப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தது.
இப்படியும் ஒரு காதல்!
சில பத்தாண்டுகளுக்கு முன்பு பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் திருமணமாகிவிட்டது என்றார்கள். திடீர் கல்யாணம். பதிவுத் திருமணம் செய்துகொண்டு இணையரை வீட்டில் விட்டுவிட்டு இவர் இயக்கப் பணிக்கு வந்துவிட்டார். அந்தப் பெண் படிக்காதவர்.
அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர். காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட அவருடைய கணவர் லாக் அப்பில் இறந்துவிட்டார். அந்த வழக்கை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் நடத்தினார்கள். வழக்கு முடிந்தது. அந்தப் பெண்ணை அவரது கிராமம் ஆதரிக்கவில்லை. அப்போது இந்த நண்பர் தன்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா என்று கேட்டிருக்கிறார். அப்பெண்ணும் சரி என்று சொல்ல, உடனே திருமணத்தை முடித்துவிட்டார். முதுகலை பொறியியல் படித்த நண்பர் படிக்காத பெண்ணை, பழகாத பெண்ணை எப்படித் திருமணம் செய்துகொண்டார் என்று அவரிடமே கேட்டேன். “குடும்பம் நடத்த ஆணும் பெண்ணும் தவிர வேறு எதுவும் தேவையில்லை. சக மனிதர்களை நேசிக்கும் யாரும் தயக்கமின்றி இப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என்றார். இதை அவர் வாழ்க்கையிலும் கடைப் பிடித்தார். அதிகாலை எழுந்து, தேநீர் போட்டு, சமைத்து, துவைத்து இயக்க வேலைக்குச் சென்றுவிடுவார். இப்படி ஓர் ஆணைக் கேள்விப்பட்டிருக்காத அவருடைய இணையர் முதலில் பதறி, பிறகு ஏற்றுக் கொண்டு, வீட்டு வேலைகள் தனக்கு அதிகம் இல்லாததால் இயக்க வேலைகளைச் செய்கிறேன் என்று வந்துவிட்டார் என்றார்கள்.
லட்சியக் காதல்
ஜென்னி - மார்க்ஸ் காதல் உலகப் புகழ்பெற்றது. காதலுக்காகவும் தாங்கள் கொண்ட கொள்கைகளுக்காகவும் அவ்வளவு பொருளாதாரக் கஷ்டங்களையும் இரண்டு பேரும் அனுபவிப்பார்கள். “மகன் பிறக்கும்போது தொட்டில் வாங்கப் பணமில்லை. அவன் இறக்கும்போது சவப்பெட்டி வாங்கப் பணமில்லை” என்று சொன்ன ஜென்னியின் கூற்று கேட்போரைக் கலங்கடிக்கக்கூடியது.
இன்றைய இளைஞர்கள் சிலர், “காதலித்த பெண்ணை இப்படிக் கஷ்டப் பட வைத்துவிட்டாரே மார்க்ஸ். இது என்ன காதல்?” என்று கேட்கிறார்கள்.
காதல் என்பது இருவரும் திருமணம் செய்துகொண்டு எந்தவிதக் கஷ்டமுமின்றி மகிழ்ச்சியாக வாழ்வது என்று மட்டுமே நினைக்கிறார்கள். ஜென்னி - மார்க்ஸ் இரண்டு பேருக்கும் உள்ள காதல்தான் சமூகத்தை நேசிக்கவும் அக்கறைகொள்ளவும் வைத்திருக்கிறது. அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யச் சொல்லியிருக்கிறது. அது லட்சியக் காதல்.
உலகின் முதல் பெண் அமைச்சரான அலெக்சான்ட்ரா கொலந்தாய், “காதல் எல்லையைக் கடந்து நான் பெண் என்கிற வகையில் பெரிய தியாகத்தை எதிர்பார்த்து நின்றது. இந்தக் காதல் என் முழு சக்தியையும் கிரகித்துக்கொண்டு சமூகத்துக்குப் பயனற்ற சக்கையாகத்தான் கொடுக்கும் என்றால், அந்தக் காதல் தேவையில்லை. முதலில் நான் ஒரு மனுஷி. அடுத்து ஒரு பெண். இறுதியாகத்தான் ஒருவரின் மனைவி. எனக்கும் சமூகக் கடமைகள் இருக்கின்றன” என்கிறார்.
இப்படிக் காதலுக்கான இலக்கணங்கள் மாறினாலும் காதல் காதல்தான்!