திருநம்பியும் திருநங்கையும் - 20: ஆடலும் பாடலும் எதற்கு?

திருநம்பியும் திருநங்கையும் - 20: ஆடலும் பாடலும் எதற்கு?
Updated on
3 min read

“இந்த முறை நம்ம கலைவிழாவுக்கு ‘திருநங்கைகள் சங்கமம்’ எனப் பெயர் வைக்கலாம்.”

தலைவர் இப்படிச் சொன்னதுதான் தாமதம். எல்லாரும் படபடவெனக் கைதட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

“அழகிப் போட்டிக்கு என் பெயரை எழுதுங்க.”

“என் பெயரை சினிமா டான்சுக்கு எழுதிக்கோங்க. என் குருபாய் (சகோதரி) வனிதா பெயரை வரவேற்பு நடனத்துக்குப் போடுங்க.”

“நான் போனமுறை மாதிரி சாப்பாட்டுக்குப் பொறுப்பு.”

“அடியே மோகனா, நீ எப்பவுமே சாப்பாட்டுக்குத் தானடி லாயக்கு.”

எல்லாரும் கையைத் தட்டிச் சிரித்தனர்.

“சரி. நம்ம நிகழ்ச்சியில ஆடல் பாடல் மட்டும் போதாது. நிகழ்ச்சி பார்க்க வர ஆளுங்க நம்மைப் பத்தின புரிதலோட போகணும், என்ன சொல்றீங்க?”ன்னு தலைவர் பேசியதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

“வருகிற பார்வையாளர்களுக்கு நாம விழிப்புணர்வு ஏற்படுத்துறதால, அவங்க நமக்கு உதவுறவங்களா எதிர்காலத்துல மாறணும். அதுதான் நம்ம நிகழ்ச்சியோட குறிக்கோள். சரி... சொல்லுங்க, யாரெல்லாம் நம்ம நிகழ்ச்சிக்குப் பார்வையாளரா வந்தா நம்ம மக்களுக்கு உதவியா இருக்கும்?”

“அது சரி...பார்வையாளரா வர்றவங்க நம்ம டான்ஸ், அழகிப் போட்டி இதையெல்லாம் பார்த்து என்ன புரிஞ்சிப்பாங்க?”

“அதுக்குத்தான் இந்த முறை நம்ம நிகழ்ச்சியில கலைநிகழ்ச்சி மட்டுமில்லாம விழிப்புணர்வுச் செய்திகளையும் தரப்போறோம். ஒரு டான்ஸ் முடிந்ததும் திருநங்கைகள் வாழ்க்கை நிலையைத் தொகுப்பாளர், பார்வையாளர்களுக்கு விளக்கணும். இதுக்காக நாம நெறைய தகவல்களைத் திரட்டி வச்சிருக்கணும்.”

“ஆமாம்மா. நம்ம மக்கள்ல நெறைய பேரு காலேஜ் படிக்கிறாங்க, வேலைல இருக்காங்க. வக்கீல், போலீஸ் இப்படிப் பல துறைகளிலும் இருக்காங்களே, அதைப் பத்தி எல்லாம் சொல்லலாம்.”

“நல்ல ஐடியா. அதோட, வாழ்க்கையில அந்த மாதிரி உயர்ந்தவங்கள இடையிடையே பேச வைக்கலாம். வேற ஊர்ல இருக்குற சாதித்த திருநங்கைகளைப் பேசவைத்து அந்த வீடியோவையும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பலாம்.”

இப்படி எல்லாரும் ஆர்வமா சொல்றது நிகழ்ச்சி நடத்தும் முக்கியப் பொறுப்பில் உள்ளோருக்கு சந்தோஷமாக இருந்தது.

“நம்ம ’திருநங்கைகள் சங்கமம்’ நிகழ்ச்சியோட பார்வையாளர்கள் யார் யார்னு எல்லாரும் சொல்லுங்க பார்க்கலாம்.”

“மேடம், நம்ம அரசு அதிகாரிகள்” என்று கண்ணகி முதலில் சொன்னாள்.

“குறிப்பா செயலாளர்கள், அதான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.”

“சரி, அடுத்து?”

“லயன் சங்கம், ரோட்டரி சங்கம்.”

“அருமை. இவங்க நெறைய புராஜெக்ட் பண்ணுவாங்க, கூப்பிடலாம். எதிர்காலத்துல நம்ம மக்களுக்கு ஏதாவது தொழிற்பயிற்சி ஆரம்பிக்க உதவுவாங்க.”

“காலேஜ் தாளாளர்களைக் கூப்பிடலாம். அவங்க நம்மளைப் புரிஞ்சிக்கிட்டு அடுத்த வருஷம் நம்ம மக்களுக்கு காலேஜ்ல சீட் கொடுப்பாங்க.”

“அதே மாதிரி கம்பெனி முதலாளிகள் வரட்டும். அவங்க வேலை கொடுப்பாங்க. படித்த திருநங்கைகளுக்கு வேலை கிடைக்க கார்ப்பரேட் கம்பெனி மனித வளத்துறையில இருக்கவங்களைக் கூப்பிடலாம்.”

“அக்கா, இவ்ளோ சொல்றீங்களே, எனக்காக ஏதாவது சினிமா நடிகர்களைக் கூப்பிடுங்களேன்.”

அவையில் சிரிப்பு அடங்க நேரமானது.

“கண்டிப்பா. இந்த மாதிரி நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க நிறைய நல்ல மனம் கொண்ட திரைத்துறையினர் உண்டு. அவங்களையும் கூப்பிடலாம். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், உயர் பொறுப்பில் உள்ள காவல் துறையினர் என எல்லாரையும் அழைக்கலாம்.”



“எல்லாருக்கும் வணக்கம். நாம போன வாரம் எடுத்த லிஸ்ட்படி எல்லாப் பார்வையாளர்களையும் கூப்பிட்டாச்சு. நிகழ்ச்சிக்குத் தேவையான செலவுகளுக்கு ஒவ்வொருத்தரும் ஒரு பொறுப்பு எடுத்துக்கோங்க.”

“அக்கா... எனக்குத் தெரிஞ்ச ஒரு பெரிய மனிதர் நம்ம அரங்கத்தோட செலவை ஏத்துக்கறேன்னு சொன்னாரு. மறக்காம அவரை மேடையில கூப்பிட்டு மரியாதை பண்ணிடுங்க.”

“மேடம், எங்க ஏரியா தலைவர் சவுண்ட் சர்வீஸ் வச்சிருக்கார். அவரு மொத்த ரெக்கார்டிங், லைட்டு இதை எல்லாம் இலவசமா போட்டுத் தருவதா சொல்லிட்டார். அவர் கடையோட லோகோ தருவார். அதை மறக்காம பேனர்ல கொண்டு வந்துடுங்க.”

“என் சொந்த மாமா, ஷீல்டு கடை வச்சிருக்கார். நம்ம விழாவுக்கு வர்றவங்களுக்கு அவர் மிகக் குறைந்த விலையில் ஷீல்டு கொடுக்குறேன்னு சொல்லியிருக்கார். மூணுல ஒரு பங்கு விலை கொடுத்தா போதுமாம்.”

இப்படி ஒவ்வொருவரும் பேசப் பேச, நிகழ்ச்சி சிறப்பா நடக்கும்ங்கிற நம்பிக்கை எல்லாருக்குமே வந்துச்சு.

“இது பெரிய நிகழ்ச்சி. அதனால 50 தன்னார்வலர்கள் எல்லா வேலைகளையும் பிரிச்சி செய்யணும். அதுக்கு நம்ம அலுவலகத் தொடர்புல இருக்குற கல்லூரி மாணவர்கள் 25 பேரையும் இளம் திருநங்கைகள் 25 பேரையும் நியமிக்கலாம்”னு நிகழ்ச்சித் தலைவர் சொன்னதும் எல்லாரும் ஒப்புக்கிட்டாங்க.

“ஊடகம் மிக முக்கியம். நாம ஒரு அரங்கத்துல நடத்துற இந்த விழாவை உலக அரங்குல சொல்றவங்க அவங்கதான். அதனால, அவங்களுக்குத் தெளிவா தகவல் கொடுக்கணும் தலைவரே.”

“நிச்சயமா. நான் அதைப் பார்த்துக்கறேன். அதே மாதிரி இந்த விழாவுல ஆயிரம் பேர் வரை வருவதால் போலீஸ் கமிஷனர்கிட்ட பேசிப் பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். பேனரை ரோட்டுல வைக்கக் கூடாது. அரசின் சட்ட விதிகளை மதிச்சு, தீயணைப்பு உள்பட எல்லா அனுமதியையும் வாங்கிட்டோம்.”

அவர்கள் விருப்பம்போலவே நிகழ்ச்சி அமைந்தது.

“திருநங்கைகள் இணைந்து இப்படி ஒரு விழாவை நடத்தியிருப்பது மிகப்பெரிய விஷயம். இதற்கு உண்டான வேலைகளையும் செலவையும் நீங்களே மேற்கொண்டது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. திருநங்கை மக்களின் தேவைகள் என்ன என்பதை மிகத் தெளிவாகத் திருநங்கை தொகுப்பாளினியை வைத்துப் புள்ளிவிவரத்தோடு கூறியிருந்தது எனக்கு மிகப்பெரிய தெளிவைக் கொடுத்தது” என விழாவில் அமைச்சர் பேசினார்.

(தொடரும்)

கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.

கதையல்ல நிஜம்

 கலைகளில் மிகுந்த ஆர்வம் திருநங்கைகளுக்கு உண்டு. இதற்கு முன்பு கலைகளில் சிறந்து விளங்கும் திருநங்கைகள் குறித்து இந்தத் தொடரிலேயே படித்துப் புரிந்துகொண்டிருப்பீர்கள். கிராமியம், பரதம், அழகிப் போட்டிகள், மேடைப் பாடகிகள், தொகுப்பாளினிகள் எனப் பல்வேறு திறன் படைத்த திருநங்கைகள் பலர் இந்தியாவில் உண்டு.

 தமிழகத்தில் பல்வேறு கலைநிகழ்வுகள் பல மாவட்டங்களில் நடப்பது உண்டு. சென்னையில் 2014இல் தொடர்ந்து 60 மணிநேரம் இடை நில்லாமல் சாதனை விழாக்களையும் திருநங்கை மக்கள் நடத்திய வரலாறு உண்டு.

 இது போன்ற கலை நிகழ்வுகளுக்குத் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் ராகவா லாரன்ஸ், விஜய் சேதுபதி, சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், சினேகா, ராதா, அம்பிகா, நளினி, சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, கஸ்தூரி, ஷகிலா, கலா மாஸ்டர், ஆர்த்தி கணேஷ், பாடகிகள் எஸ்.ஜானகி, அனுராதா ராம், இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் அந்த விழாக்களில், “திருநங்கைகள் நம்மைப் போன்றவர்கள்; அவர்களை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனப் பேசியது மக்களிடையே திருநர் சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

 தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கைக் கலைஞர்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சென்று கலை வளர்த்துள்ளனர். வீதி நாடகங்கள் மூலமாக அனைவருக்கும் கல்வி, பெண் குழந்தை பராமரிப்பு, ஸ்வச் பாரத் போன்ற பல திட்டங்களைக் கிராமப்புறங்களில் நடத்திய பெருமையும் நமது தமிழக திருநங்கைகளுக்கு உண்டு.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in