

பொருளாதாரப் பேராசிரியர்களான ஜெயதி கோஷ், அஸ்வினி தேஷ்பாண்டே ஆகிய இருவரும் சர்வதேசப் பொருளாதாரச் சங்கத்தின் 2023ஆம் ஆண்டுக்கான நிதிநல்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சர்வதேசப் பொருளாதாரச் சங்கம், 1950ஆம் முதல் செயல்பட்டுவரும் அரசு சாரா நிறுவனம். வளர்ச்சிப் பொருளாதார அறிஞரான ஜெயதி கோஷ், 35 ஆண்டுகளுக்கு மேல் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். தற்போது மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவருகிறார். அஸ்வினி தேஷ்பாண்டே, அசோகா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் தரவு மற்றும் பகுப்பாய்வு மையத்தின் நிறுவன இயக்குநர். பொருளாதாரத் துறையின் பங்களிப்புக்காகவும் கொள்கை சார்ந்த முடிவுகளில் அங்கம் வகித்ததற்காகவும் புதிய பொருளாதாரத் திட்டங்களைப் பரப்பியதற்காகவும் இந்த நிதிநல்கை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு அந்தந்தப் பகுதி சார்ந்த பன்முகத்தன்மை, பாலினச் சமத்துவம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய பொருளாதாரக் கொள்கைக்காக நிதிநல்கை வழங்கப்படுவதாகச் சர்வதேசப் பொருளாதாரச் சங்கம் தெரிவித்துள்ளது. இவர்களோடு உலகம் முழுவதும் இருந்து மேலும் 10 பேர் இந்த நிதிநல்கைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.