

‘கல்யாணத்துக்குப் பிறகு என் மகன் மாறிவிட்டான்’ என்பது நாம் காலம் காலமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் பல்லவி. ஆனால், சமீபக் காலமாக, ‘கல்யாணத்துக்குப் பிறகு என் மகள் மாறிவிட்டாள்’ என்கிற அவலக்குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அதுவும் பரவலாக. அதுவும் குறிப்பாக, ஒரே ஒரு மகளை வைத்திருக்கும் பெற்றோர்களிடமிருந்து.
ஒற்றை மகளை வைத்திருக்கும் பெற்றோர் சிலர், மகளின் திருமணத்துக்குப் பின் வீட்டோடு மாமனார், மாமியாராகி விடுகிறார்கள். மகளுக்கும் மருமகனுக்கும் வேண்டியதைப் பார்த்துப் பார்த்துச் செய்கிறார்கள். மருமகனும் மகளும் நன்றாக நடந்துகொள்கிறார்கள். இருந்தாலும் பல தாய்மார்களைத் தனிமையுணர்வு வாட்டுகிறது.
திருமணத்துக்கு முன் பள்ளிக்கும் கல்லூரிக்கும் வேலைக்கும் சென்ற நேரம் தவிர, மற்ற நேரத்தில் எல்லாம் அம்மாவையே சுற்றிச் சுற்றி வந்திருப்பாள் செல்ல மகள். தான் வீட்டை விட்டுக் கிளம்பும்போது சாலையில் பார்த்த நாயிலிருந்து தான் சென்ற இடங்களில் சந்தித்த மனிதர்கள், அவர்கள் பேசிய பேச்சுகள் என்று நடந்தவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்பித்திருப்பாள். தோளில் தொற்றிய கிளியாக எந்நேரமும் அம்மாவுடன் இருந்து, அவர் வேலை செய்யும்போது தானும் உதவி செய்து, அவர் அமர்ந்திருக்கும்போது ஓடிப்போய் அவர் மடியில் தலை சாய்த்து வெள்ளந்தியாகச் சிரித்து வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தியிருப்பாள். அந்த மகள் இன்று திருமணத்துக்குப் பின் தன் கணவர், தன் குழந்தை என்கிற வட்டத்துக்குள் சுழலும்போது தன்னைத் தவிர்ப்பதாகவே பல அம்மாக்கள் எண்ணுகிறார்கள். மகளுக்கு மணம் முடித்த பின் வயதான காலத்தில் தனியாக இருந்துகொண்டு , ‘எப்போதடா மகள் வீட்டுக்கு வருவாள்? அப்படி வீட்டுக்கு வர முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு போனாவது பேசலாமே’ என்று போனைக் கையில் வைத்துக்கொண்டு பித்து பிடித்ததுபோல் அலைந்துகொண்டிருக்கிறார்கள். போன் வராத நாளெல்லாம் அவர்களுக்குச் சோறு தண்ணி தொண்டைக்குள் இறங்குவதில்லை. மகள் தன்னை மதிக்கவில்லை, தன் மீது இருந்த அன்பு குறைந்துவிட்டது, இனி வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்று எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி மனதைப் புண்ணாக்கிக்கொள்கிறார்கள்; நோய்வாய்ப்படுகிறார்கள்.
பெரும்பாலான மகள்கள் மாறுவதில்லை. அவர்கள் அன்பும் மறைவதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் தங்கள் அம்மாக்களிடம் பேசத்தான் செய்கிறார்கள். ஆனால், ஒருவிதமான இயந்திரத்தனத்துடன் வாழ்கிறார்கள். காரணம், அவர்களுக்குள்ளே இருந்த குழந்தைத்தனம் குடும்பப்பொறுப்பு என்கிற பெயரில் கொல்லப்பட்டுவிட்டது. அது அவர்களுக்கும் தெரிவதில்லை, அவர்கள் தாய்க்கும் தெரிவதில்லை. விளைவு? தாய்மார்களின் மனப் போராட்டம். தோழியரே, எப்போதும் ஒரே இடத்தில் உங்கள் அன்பைக் குவித்து வைக்காதீர்கள். அப்படிச் செய்தால் மனச்சரிவு சர்வ நிச்சயம்.
மகள்கள் மாறவில்லை. அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டார்கள், அவ்வளவுதான். நீங்களும் உங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லுங்கள். உங்கள் கவனத்தைப் பல திசைகளிலும் திருப்புங்கள். உங்களுக்கென ஓர் உலகத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதில் உங்களுக்குப் பிடித்தவை எல்லாம் இருக்கட்டும். பிடித்த நண்பர்கள், பிடித்த பொழுதுபோக்கு, பிடித்த இடங்கள் எல்லாம் இருக்கட்டும். அவற்றை அனுபவிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை இனிக்கும்.
- ஜே. லூர்து, மதுரை.
| நீங்களும் சொல்லுங்களேன்... தோழியரே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை பிறருக்குப் பாடமாக அமையும் அனுபவம் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். முகவரி: இந்து தமிழ்திசை, பெண் இன்று, கஸ்தூரி மையம், |