திருநம்பியும் திருநங்கையும் - 19: எம்மதமும் சம்மதமே

திருநம்பியும் திருநங்கையும் - 19: எம்மதமும் சம்மதமே
Updated on
2 min read

“ஆண்டவரின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் நல்ல பிதாவே. இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்.”

“ரொம்ப சந்தோசம் அனு அக்கா. அதுவும் நீங்க விஷ் பண்றது எனக்குக் கூடுதல் சிறப்பு. சர்ச்சுக்குப் போயிட்டு வந்துட்டீங்களா அக்கா?”

“காலைலயே போயிட்டு வந்துட் டேன்மா. ராத்திரியும் போனேன்.”

அனு ஒவ்வொரு கிறிஸ்து மஸுக்கும் வெள்ளை நிறம் கலந்த சேலையைத்தான் எடுப்பாள்.

“குரு, நீங்க எடுத்துக் கொடுத்த புடவை ரொம்ப அழகா இருக்குன்னு நேத்து சர்ச்சுல எல்லாரும் சொன்னாங்க. தேங்க்ஸ் குரு.”

“அனு குருபாய், எனக்கும் நீ எடுத்துக்கொடுத்த சேலை அழகா இருந்துச்சு. தேங்க்ஸ் குருபாய்.”

“உங்களுக்கு நான் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு நல்லா இருக்குன்னு சொல்றது எனக்கு ரொம்ப சந்தோஷம். நதியா, நாம எல்லாரும் எங்க குரு வீட்டுக்குப் போகணும். உங்க நாணி இன்னைக்கு மட்டன் பிரியாணி போடுறாங்களாம்.”

“அனுக்கா நம்ம குருவுக்கு நல்ல கேக் வாங்கிட்டுப் போலாம்.”

“சரிடி நதியா. ‌அப்புறம், பைபிள் புது அத்தியாயம் ஒண்ணு குரு கேட்டாங்க. நேத்தே வாங்கி வச்சிட்டேன். அதையும் எடுத்துட்டுப் போயிடுவோம்.”

அனைவரும் அனுவின் குரு வீட்டுக்குச் சென்றனர்.

“பாவ்படுத்தி (பணிந்து வணங்கு கிறேன்) குரு! பிரியாணி சூப்பர். போன ரம்ஜானுக்கு ஆர்டர் கொடுத்தீங்களே அதே பாய்தானா குரு இதையும் சமைச்சாரு?”

“அவரேதான். ரம்ஜானுக்கு டேஸ்ட் குறைச்சிட்டாருடி அனு. போன வாரம் நான் ஆர்டர் கொடுக்கும்போது கிறிஸ்துமஸுக்குப் பிரியாணி நல்லா இல்லைனா அவ்ளோதான்னு சொல்லிட்டேன். அதான் ரொம்ப நல்லா சமைச்சிருக்காரு.”

எல்லாரும் பிரியாணியைச் சாப் பிட்டபடியே வாய்விட்டுச் சிரித்தனர்.

அனுவோட குரு சாப்பிடுற விஷயத்துல கஞ்சம் பிடிக்கமாட்டா. ஒரு தடவை எங்களை ஊட்டிக்கு டூர் கூட்டிப் போகும்போது உக்கடம் பகுதியில திருநங்கைகள் செஞ்ச பிரியாணியை வாங்கிக் கொடுத்தா. சூப்பரா இருந்துச்சி.

அது மட்டுமில்ல, அங்க நம்ம திருநங்கைங்கதான் நிறைய பேரு சமையல் மாஸ்டரா இருக்காங்க.

“பக்ரீத்துக்கு அனு 20 பேருக்கு குர்பானி குடுப்பா அது தெரியுமா உங்களுக்கு? அவ சுகர் வந்து ரொம்ப கஷ்டப்பட்டா. அப்போதான் ஒவ்வொரு பக்ரீத்துக்கும் இப்படித் தரேன்னு அவ மனசுல நெனச்சாளாம்.”

பிஞ்சு (இளவயது திருநங்கை) ரக்சனா எல்லாருக்கும் பீடா வாங்கிவந்து கொடுத்துச்சு.

“ஆயாங்க எல்லாருக்கும் பாவ்படுத்தி. நான் வாங்கிவந்த பீடாவைப் போட்டு கிறிஸ்துமஸ் விருந்தை முடிங்க.”

“அடியே ரக்சனா, எங்க காலத்துக்கு அப்புறம் நீயும் இது மாதிரி கிறிஸ்துமஸுக்கு எல்லாருக்கும் விருந்து வைக்கணும், பரிசு கொடுத்து மகிழணும் சரியா? அது மட்டுமில்ல, உன் சின்ன நாணி, அனு மாதிரி குர்பானியும் குடுக்கணும். இப்படிச் சின்ன செலவா பான் பீடா கொடுத்துட்டு ஓடிடக் கூடாது.”

மீண்டும் அங்கே ஒரே சிரிப்பலை.



“இன்னும் பரணுக்குள்ள போடி. ரெண்டு பெட்டி இருக்கும் அதையும் கீழே இறக்கு.”

“ஏன் குரு இப்படி என் உயிரை எடுக்குறீங்க? அதையெல்லாம் கீழயே வைக்க வேண்டியதுதானே. என்னால ஏற முடியல.”

“என் செல்லம் இல்லே. போடி ராஜாத்தி. அந்தப் பெட்டியிலதான் முக்கியமானது எல்லாம் இருக்கு. கொஞ்சம் உதவி பண்ணுடி.”

அந்தப் பெரிய பெட்டியைக் கீழே இறக்கிவைத்தாள் பிஞ்சு ரக்சனா.

அனு நல்லா தலைக்குக் குளிச்சு மஞ்சள் பூசிய முகத்தோடு இருந்தாள். சுத்தமாகக் கழுவிவிட்ட வீட்டிற்குள் சாம்பிராணி புகை போட்டு அம்மனுக்கு விளக்கேற்றிவிட்டு அந்தப் பெட்டியைத் திறந்தாள்.

அதிலிருந்து சித்தாங்கு ஆடை, குல்லா, கஞ்சுளி மற்றும் அலகு போடும் பொருள்களை எடுத்து அங்காள அம்மனிடம் வைத்து, பூஜை போட ஆரம்பித்தாள்.

வருஷா வருஷம் சிவராத்திரிக்கு அனு சாமி ஆடுறதை அந்த ஊரே நின்னு வணங்குமே.

(தொடரும்)

கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in